Published : 15 Feb 2017 12:09 PM
Last Updated : 15 Feb 2017 12:09 PM

பந்துவீச்சின் பிராட்மேன்: அஸ்வினுக்கு ஸ்டீவ் வாஹ் புகழாரம்

45 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி டெனிஸ் லில்லியை முறியடித்த அஸ்வின் ‘பந்துவீச்சின் பிராட்மேன்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டியுள்ளார்.

பொதுவாக ஆஸ்திரேலிய மனநிலையைப் பொறுத்தவரையில் டான் பிராட்மேன் சாதனையுடன் எந்த ஒரு சாதனையையும் ஒப்பிடுவது புனிதக் கேடான செயலாகவே பார்க்கப்படும், எனவே ஸ்டீவ் வாஹ் இந்த மனநிலைக்கு எதிராக அஸ்வினை ‘பவுலிங்கின் பிராட்மேன்’ என்று வர்ணித்திருப்பது கவனிக்கத்தக்கது.

லாரியஸ் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வாஹ் கூறும்போது, “அஸ்வின் அடிப்படையில் பவுலிங்கின் பிராட்மேன்” என்றார்.

“அவர் செய்து கொண்டிருப்பது நம்ப முடியாததாகும். தவிரவும் அவர் பயனுள்ள ஒரு பேட்ஸ்மெனும் கூட. இவரைத்தான் நாம் இந்தத் தொடரில் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும்.

அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ளும் வழிமுறைகளை ஆஸ்திரேலிய அணியினர் கண்டடைய வேண்டும். இதனை ஆஸ்திரேலியர்கள் செய்தால் நிச்சயம் வெற்றி வாய்ப்பு உண்டு. நெருக்கடி தருணங்களில் வீரர்கள் அமைதியுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும்.

தற்போது அஸ்வின் பந்து வீசி வரும் தரத்தைப் பார்த்தல் பல சாதனைகளை அவர் முறியடிப்பார் என்றே தோன்றுகிறது. அஸ்வின் புள்ளிவிவரங்கள் திகைக்க வைப்பதாகும்” என்றார்.

‘ஆஸ்திரேலியா வெறுங்கையுடன் தான் திரும்பும்’ என்று இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது குறித்து ஸ்டீவ் வாஹ் சற்றே காட்டமாக, “இவ்வாறு ஒட்டுமொத்தமாக கூறுவது முட்டாள்தனம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், இந்திய அணியினர் இந்த ஆஸ்திரேலிய அணியின் சில வீரர்களை எதிர்கொண்டதில்லை.

மிட்செல் ஸ்டார்க் இப்போதைக்கு உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர், ஜோஷ் ஹேசில்வுட் இருக்கிறார். நேதன் லயன் சவால் அளிக்கக் கூடியவர். சவுரவ் கங்குலி கொஞ்சம் கூடுதலாக நம்பிக்கையுடன் பேசுபவர், எனவே அவரது கூற்றுக்கு நான் சவால் விடுக்கிறேன். நிச்சயமாக இந்தியாவுக்குச் சென்று 0-4 என்று தோல்வியடைவோம் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலிய அணியினர் செல்லவில்லை என்பது உறுதி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x