Published : 19 Jun 2016 12:08 PM
Last Updated : 19 Jun 2016 12:08 PM
கோப்பா அமெரிக்காவின் நடப்பு சாம்பியன் சிலி அணியின் எட்வர்டோ வார்கஸ் 4 கோல்களைத் திணிக்க ஓரளவுக்கு வலுவான மெக்சிகோ அணியை சிலி அணி அதிர்ச்சிகரமாக 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
எட்சன் புச் 2 கோல்களையும், அலெகிசிஸ் சான்சேஸ் ஒரு கோலையும் அடிக்க மெக்சிகோவை பதம் பார்த்த சிலி அரையிறுதியில் மேலும் வலுவான கொலம்பியாவைச் சந்திக்கிறது. மெக்சிகோ அணி 22 ஆட்டங்களில் தோல்வியுறாமல் வைத்திருந்த சாதனை முற்றுப் பெற்றது.
ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் சிலி முன்னிலை பெற்றது. எட்சன் புச் பட்டு மீண்டும் வந்த பந்தை கோலாக மாற்றினார். அதாவது அலெகிசிஸ் சான்சேஸ் மூலம் தொடங்கிய இந்தத் தாக்குதல் நகர்வு மார்செலோ டயஸுக்கு கோல் அடிக்க வாய்ப்பாக மாறியது, ஆனால் டயஸின் ஷாட்டை மெக்சிகோ கோல் கீப்பர் கில்லர்மோ ஓச்சா கையால் தட்டி விட அது எட்சன் புச் பாதைக்கு வந்தது. இதுவே முதல் கோலாக மாறியது.
இதனையடுத்து சிலி அணி மேலும் ஆக்ரோஷம் கூட்ட வார்கஸ் அடித்த ஷாட் ஒன்று 37-வது நிமிடத்தில் கோல் ஆனது, ஆனால் மகிழ்ச்சி நீடிக்கவில்லை, அது ஆஃப் சைடு என்று நடுவரால் தீர்ப்பளிக்கப்பட்டது.
இடைவேளைக்கு சற்று முன்பு ழான் பியூசேயூர் இடது புறத்திலிருந்து கிராஸ் செய்ய வார்கஸ் சிலி அணிக்காக 2-வது கோலை அடித்தார். இடைவேளை வரை சிலியின் பகுதிக்குள் பெனால்டி பகுதி வரை மெக்சிகோ அணி இருமுறையே நுழைய முடிந்தது, மாறாக சிலி அணி 9 முறை உள்ளுக்குள் நுழைந்து 2 கோல்களை அடித்தது.
இதனையடுத்து ரால் ஜிமினேஸ், கார்லோஸ் பீனா ஆகியோரைக் களமிறக்கியது மெக்சிகோ, ஆனால் இது எந்தவித பயனும் அளிக்கவில்லை, சிலி அணி மேலும் ஆதிக்கப்போக்கைக் கடைபிடித்தது. இதில் ஆர்தரோ வைடால் பந்தை அழகாக வெட்டி எடுத்து வந்து சான்சேசிடம் அளிக்க சிலி அணியின் 3-வது கோல் வந்தது.
அதன் பிறகு வார்காஸின் ஆட்டம் ஆதிக்கம் செலுத்தியது இவர் 52, 57, 74-வது நிமிடங்களில் 3 கோல்களை அடித்தார். இது மெக்சிகோ அணிக்கு ஆணியடித்தது.
வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் கடைசியில் எட்சன் புச் மேலும் ஒரு கோலை அடிக்க 7-0 என்று வென்றது சிலி.
மெக்சிகோ உண்மையில் இவ்வளவு மோசமாக வெளியேற வேண்டிய அணியல்ல, குறைந்தது அரையிறுதி வரை சென்றிருக்க வேண்டிய அணிதான் ஒரு தினம் ஒரே தினம் வார்காஸ் அந்த அணியை உதைத்துத் தள்ளியுள்ளார், அவ்வளவே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT