Published : 01 Jan 2014 11:46 AM
Last Updated : 01 Jan 2014 11:46 AM
நியூசிலாந்து அணியின் கோரே ஆண்டர்சன், 36 பந்துகளில் சதம் அடித்து, ஒரு நாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம்18 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்த சாதனையை ஆண்டர்சன் முறியடித்துள்ளார். 37 பந்துகளில் பாகிஸ்தானின் அப்ரிடி அடித்த சதமே இதுவரை சாதனையாக இருந்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், முதலில் பேட்டிங்க் செய்த நியூசிலாந்து அணி 21 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்களைக் குவித்துள்ளது. மழையால் 21 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போடியில், ஒரு ஓவருக்கு 13 ரன்கள் வீதம் நியூசிலாந்து அடித்துள்ளது.
இளம் ஆல்ரவுண்டரான ஆண்டர்சன், தனது இன்னிங்க்ஸில் 12 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை அடித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 131 ரன்களை அவர் எடுத்திருந்தார். துவக்க ஆட்டக்காரரான மார்டின் கப்டில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் மெக்கல்லம், 11 பந்துகளில் 33 ரன்களை விளாசினார்.
அவருடன் இணைந்த ரைடரும் அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர்கள் அடிக்க, 18 பந்துகளில் இந்த ஜோடி 50 ரன் பார்ட்னர்ஷிப்பைக் கடந்தது. மெக்கல்லம் வெளியேறிய பின்னும் தனது அதிரடியைத் தொடர்ந்த ரைடர் 24 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதத்தைக் கடந்தார்.
மறுமுனையில் ஆடிய ஆண்டர்சன், சுனில் நரைன் வீசிய ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை அடித்தார். தொடர்ந்து பந்து வீசிய ராம்பால் ஓவரிலும் 4 சிக்ஸர்கள் பறந்தன. 35 பந்துகளில் 95 ரன்கள் என்கிற நிலையில் சுழற்பந்து வீச்சாளர் மில்லரின் பந்தை ஆண்டர்சன் சிக்ஸுக்கு விரட்ட, 36 பந்துகளில் சதம் என்கிற உலக சாதனையைப் படைத்தார். ரைடர் 46 பந்துகளில் சதமடித்தார்.
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியினரால் 21 ஓவர்களில் 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT