Published : 08 Jun 2016 03:44 PM
Last Updated : 08 Jun 2016 03:44 PM

அமெரிக்க அணி அபாரம்: கோஸ்டா ரிகாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் கோஸ்டா ரிகாவை அமெரிக்க அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கள் கணக்கைத் தொடங்கியது.

கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்கா போராடி தோல்வி கண்டது. ஆனால் இந்த முறை ஆதிக்க வெற்றி பெற்றது.

அமெரிக்க அணியின் டெம்ப்சே 9-வது நிமிடத்திலும், ஜோன்ஸ் 37-வது நிமிடத்திலும் பி.உட் 42-வத் நிமிடத்திலும் கடைசியில் 87-வது நிமிடத்தில் ஜி.சூஸீ கோல்களை அடித்து கோஸ்டா ரிகா வெற்றிக் கனவைத் தகர்த்தனர்.

முதல் 5 நிமிடங்கள் தவிர கோஸ்டா ரிகா மீதி 85 நிமிடங்களில் ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தவில்லை. அமெரிக்க அணியில், ஜோன்ஸ், ஜான்சன், டெம்ப்சே மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்ததாக பராகுவே அணியைச் சந்திக்கின்றனர்.

முதல் 5 நிமிடங்களில் கோஸ்டா ரிகா அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தது. 3-வது நிமிடத்திலேயே கேம்பல் ஒரு அபாரமான ஷாட்டை கோல் நோக்கி அடிக்க அதனை குஸான் பிடித்தார். அமெரிக்கா இந்த 5 நிமிடங்களில் கொஞ்சம் பதற்றத்துடன் தடுப்பாட்டம் ஆடியது.

9-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா கோல் எல்லையில் ஃபவுல் செய்ய அமெரிக்காவுக்கு பெனால்டி வழங்கப்பட்டது, அதனை எடுத்துக் கொண்ட மூத்த அனுபவ வீரர் டெம்ப்சே கோல் கீப்பருக்கு இடது புறம் அபாரமாக கோலாக மாற்றினார். 37வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஜோன்ஸின் முயற்சி ஒன்று விரயமாக எதிர்த்தாக்குதல் தொடுத்த அமெரிக்க அணியின் டெம்ப்சே மீண்டும் ஜோன்ஸிடம் பந்தை அளிக்க அவர் அதனை அருமையாக கோலாக மாற்றினார்.

41-வது நிமிடத்தில் பிராட்லி ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், 30 அடிக்கு பந்தை அவர் கடத்தி எடுத்து வந்தார் பந்து அதன் வழியில் அமெரிக்க வீரர் உட்டிடம் வர அவர் கோஸ்டா ரிகா கோல் கீப்பரைத் தாண்டி 3-வது கோலை அடித்தார். இடைவேளையின் போது அமெரிக்கா 3-0 என்று முன்னிலை பெற்றிருந்தது.

0-3 என்ற நெருக்கடியில் இறங்கிய கோஸ்டா ரிகா அதன் பிறகு அவசரகதியில் ஆடியதால் எந்த ஒரு நகர்வும் முக்கியத்துவம் பெறவில்லை, அமெரிக்க அணியும் தடுப்பணையை வலுப்படுத்தியது. 87-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா தங்கள் பகுதிக்கு சற்று வெளியே பந்தை தங்கள் வசமிடமிருந்து இழந்தது. வூண்டோலோவ்ஸ்கி பந்தை சாதுரியமாக கடைந்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சூஸி கோலை நோக்கி அடிக்க அது கோஸ்டா அணியின் கோல் கீப்பர் பெம்பர்டனைக் கடந்து கோல் ஆனது. கோஸ்டா ரிகா அணிக்கு கடும் ஏமாற்றம், சொந்த மண்ணில் அமெரிக்க அணி ஆதிக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x