Published : 09 Dec 2013 07:47 PM
Last Updated : 09 Dec 2013 07:47 PM

இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சர் உரிமை ஸ்டார் வசம்

அடுத்த மூன்று வருடங்களுக்கான இந்திய அணியின் ஸ்பான்சர் உரிமையை ஸ்டார் இந்தியா பிரைவட் லிமிடட் பெற்றுள்ளது. சஹாரா நிறுவனத்தின் கோரிக்கையை தகுதியற்றது என பிசிசிஐ நிராகரித்துள்ளது.

"ஜனவரி 1 2014முதல், 31 மார்ச் 2017 வரை நடைபெறும் அனைத்து இந்திய அணி சம்பந்தபட்ட பிசிசிஐ நிகழ்ச்சிகள், ஐசிசி நிகழ்ச்சிகள், ஏசிசி நிகழ்ச்சிகள் ஸ்பான்சர் உரிமைகளும் ஸ்டார் இந்தியா பிரைவட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது" என பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் தெரிவித்தார்.

"இந்த உரிமையினால் ‘அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்’ என்கிற வார்த்தைகள், ஸ்டார் நிறுவனத்தின் சின்னம் ஆகியவற்றை, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி, ஆண்கள் ஏ அணி மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆகிய அணி வீரர்களின் சீருடைகளில் இடம் பெறும்"

பிசிசிஐ உடன், நிதி ரீதியான மோதல் இருந்ததால், சில மாதங்களுக்கு முன்பு சஹாரா நிறுவனம் தனது ஸ்பான்சர் ஒப்பந்தத்தை ரத்து செய்து கொண்டது. இதனால் டிசம்பர் மாதம் கடந்தால், இந்திய அணிக்கு ஸ்பான்சர் இல்லை என்ற நிலை இருந்தது.

ஸ்டார் குழுமத்துடனான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவு என தெரிவிக்கப்படவில்லை என்றாலும், ஒரு ஆட்டத்திற்கு 1.92 கோடி ரூபாய் வரை ஸ்டார் செலவழிக்கும் எனத் தெரிகிறது.

"இந்த ஸ்பான்சர் உரிமைக்கான ஏலம் நவம்பர் 11 தேதி அறிவிக்கப்பட்டது. 7 நிறுவனங்கள் இதில் போட்டியிட்டன. டிசம்பர் 9ஆம் தேதி 3 மணிவரை ஏலம் நடைபெற்றது. பிறகு விண்ணப்பித்திருந்த நிறுவனங்களின் ஏலங்கள் பரீசிலிக்கப்பட்டன. ஸ்டார் இந்தியா குழுமம் மற்றும் சஹாரா இந்தியா குழுமம் கடைசி வரை போட்டியில் இருந்தன. ஆனால் சஹாராவின் ஏல விண்ணப்பம் தகுதியற்றதாக இருந்ததால், உரிமை ஸ்டார் குழுமத்திற்கு சென்றது" என படேல் கூறினார்.

ஆனால் சஹாரா நிறுவனமோ, பிசிசிஐ உடன் ஐபிஎல் சம்பந்தமாக ஏற்பட்ட மோதல் காரணமாகவே தங்கள் ஏலம் நிராகரிக்கப்பட்டதாகவும், இந்த மொத்த ஏலமும் பிசிசிஐ திட்டமிட்டு அரேங்கேற்றியது என்றும் கூறியுள்ளது.

"தகுதியற்றதாகத் தெரிந்தால் ஏன் முதலிலேயே எங்களை நிராகரிக்காமல் கடைசி வரை எடுத்து வந்தார்கள்? இந்த மொத்த ஏலமும் நாடகம் என்பது தெளிவாகத் தெரிகிறது" என, சஹாராவின் கார்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அபிஜித் சர்கார் குற்றம் சாட்டியுள்ளார்.

மற்றவர்களை விட அதிகமாக ஏலம் கேட்டிருந்தாலும், சஹாராவை பழிவாங்கும் விதமாக பிசிசிஐ செயல்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு பிசிசிஐ ஆட்டத்திற்கும் 2.35 கோடி ரூபாயும், ஐசிசி-இன் ஆட்டங்களுக்கு போட்டிக்கு 91 லட்ச ரூபாயும், மொத்தமாக 252 கோடி ரூபாயும் சஹாரா நிறுவனம் உரிமைக்காக கொடுக்கத் தயாராக இருந்தது. ஸ்டார் குழுமமோ 203 கோடி ரூபாயை மட்டுமே கொடுப்பதாகத் தெரிகிறது.

படேல் மேலும் பேசுகையில் "அக்டோபர் 2013-ல் இருந்து 31ஆம் தேதி மார்ச் 2014 வரை நடக்கும் அனைத்து பிசிசிஐ உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளுக்கும் ஸ்டார் முதன்மை ஸ்பான்ஸராக இருக்கும் என்றும், தொலைக்காட்சி ஓளிபரப்பு உரிமம், இந்திய அணியின் இணையம் மற்றும் மொபைல் உரிமங்களும் ஜூலை 2012 முதல் மார்ச் 2018 வரை ஸ்டார் நிறுவனத்தையே சேரும்" என்றார்

"கிரிக்கெட்டை பற்றிய ஆழமான புரிதல் ஸ்டார் நிறுவனத்திடம் உள்ளது. நம் நாட்டிற்கு கிரிக்கெட் எவ்வளவு முக்கியம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்களுடனான இந்த ஒப்பந்தம் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என படேல் கூறினார்.

"இந்திய அணிக்கு ஸ்பான்சராக இருப்பது ஆனந்தத்தைத் தருகிறது. ஒரு மிகச்சிறந்த அணியுடன் இணைவது பெருமையாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் மற்றும் இந்தியாவின் மற்ற விளையாட்டுகளின் பால், ஸ்டார் கொண்டுள்ள ஈடுபாடு மற்றும் பொறுப்பின் வெளிப்பாடாக இந்த ஒப்பந்தம் உள்ளது" என ஸ்டார் குழுமத்தின் தலைமை அதிகாரி உதய் சங்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x