Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM
டெல்லி ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் முதல் நிலை வீரரான சோம்தேவ் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளவரான ரஷியாவின் ஈவ்ஜீனி டான்ஸ்காயை தோற்கடித்தார். இதன்மூலம் கோல்கத்தா சேலஞ்சர் போட்டியில் டான்ஸ்காயிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் சோம்தேவ்.
இதற்கு முன்னர் சென்னை மற்றும் கோல்கத்தாவில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் அரையிறுதியோடு வெளியேறிய சோம்தேவ், டெல்லி போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
ஒரு மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் டான்ஸ்காய் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட சோம்தேவ், பின்னடைவிலிருந்து விரைவாக மீண்டு முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் சிறப்பாக விளையாடிய சோம்தேவ் அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி இறுதிச்சுற்றை உறுதி செய்தார்.
போட்டிக்குப் பிறகு பேசிய சோம்தேவ், “கடந்த வாரம் நடைபெற்ற கோல்கத்தா போட்டியில் டான்ஸ்காய் என்னை தோற்கடித்தார். இன்றைய ஆட்டத்தில் நான் கடுமையாகப் போராடி அவரை வீழ்த்தியிருக்கிறேன். இந்தப் போட்டியை நான் சிறப்பாக தொடங்காதபோதிலும், பின்னர் சிறப்பாக விளையாடி வெற்றி கண்டிருக்கிறேன்.
டான்ஸ்காய் மிகச்சிறந்த எதிராளி. அவரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT