Published : 13 Aug 2016 03:06 PM
Last Updated : 13 Aug 2016 03:06 PM
சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அர்ஜென்டின கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி மீண்டும் தன் நாட்டுக்காக ஆடுவேன் என்று கூறியுள்ளார்.
கோப்பா அமெரிக்காவில் பெனால்டி கிக்கை கோட்டை விட்ட மெஸ்ஸி வருத்தத்துடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார், ஆனால் ரசிகர்கள் பலரும் உலகம் நெடுகவும் மெஸ்ஸி தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதால் தற்போது மனம் மாறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மெஸ்ஸி, ‘நிறைய பிரச்சினைகள் இருந்தாலும்’ மீண்டும் அர்ஜென்டினாவுக்காக ஆடுவேன் என்று தெரிவித்தார்.
“அர்ஜென்டின கால்பந்தில் உள்ள சிக்கல்கள் பல தீர்க்கப்பட வேண்டும், எனவே நான் உள்ளிருந்து உதவ விரும்புகிறேன், வெளியிலிருந்து விமர்சிக்க விரும்பவில்லை. நான் எந்த வித தீங்கையும் இழைக்க விரும்பவில்லை. நான் எப்பவுமே அணிக்காக பாடுபடுபவன் எனவே இப்போதும் எந்த வகையிலாவது உதவி புரியவே செய்வேன்” என்றார்.
இந்த ஆண்டு நடந்த கோப்பா அமெரிக்கா இறுதியில் சிலி அணியிடம் தோற்றதில் மெஸ்ஸி பெனால்டி கிக்கை கோட்டை விட்டார். அதில் வெறுப்படைந்தே அவர் ஓய்வு அறிவித்தார், ‘அர்ஜென்டினாவுக்கும் தனக்கும் ஒத்துவரவில்லை’ என்றார் அவர்.
இந்நிலையில் மெஸ்ஸி மேலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தோற்றுப்போன அந்த இரவு நிறைய விஷயங்கள் மனதில் ஓடின. ஓய்வு பெறுவது என்று முடிவெடுத்தேன். ஆனால் நாட்டின் மீதான பற்றும், சீருடையும் எதைவிடவும் பெரிதாகப் பட்டது. ” என்று கூறியுள்ளார்.
மெஸ்ஸி ஓய்வு அறிவித்தவுடன் அர்ஜென்டினாவில் பெருமளவில் அவருக்கு ஆதரவு குவிந்து மீண்டும் ஆட வேண்டும் என்றும் 2018 உலகக்கோப்பை ரஷ்யாவில் நடைபெறுகிறது அது வரை ஆட வேண்டுமென்று பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் மெஸ்ஸி மீண்டும் ஆடுவது என்று முடிவெடுத்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT