Published : 04 Oct 2014 05:32 PM
Last Updated : 04 Oct 2014 05:32 PM
தனது விமர்சகர்களுக்கு சரியான பதில் கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார் இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.
இன்று முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் குத்துச்சண்டை பிரிவில், 31 வயதான இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். தன்னால் தொடர்ந்து வெல்ல முடியுமா என கேள்வியெழுப்பிய விமர்சகர்களுக்கு தன் வெற்றியின் மூலம் பதிலளிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே என மேரி கோம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
"ஒலிம்பிக் முடிந்த பிறகு நான் கலந்துகொண்ட முதல் போட்டி இது. இந்தப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. ஒலிம்பிக்கிற்கு பிறகு எனக்கு குழந்தை பிறந்தது. தொடர்ந்து என்னால் குடும்பத்தையும், விளையாட்டையும் சமாளிக்க முடியாமல் போனது. அப்போது பலர் என்னால் மறுபடியும் விளையாட முடியாது, நாட்டுக்காக பதக்கம் வெல்ல முடியாது என விமர்சனம் செய்தனர்.
அது எனக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. இந்த விமர்சனங்கள் எல்லாம் எனக்கு மேலும் தொடர்வதற்கு பலத்தைக்கொடுத்தன. அந்த விதத்தில் நான் அதிர்ஷ்டம் கொண்டதாகவே உணர்கிறேன். விளையாட்டின் மீது எனக்கிருந்த ஆர்வம் மட்டுமே என்னை மீண்டும் பதக்கம் வெல்ல வைத்துள்ளது."
5 முறை சர்வதேச சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேரி கோம் 3 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. சக வீராங்கனையான சரிதா தேவியை சூழ்ந்துள்ள சர்ச்சையைப் பற்றி கேட்டபோது, "நாங்கள் எல்லோரும் அவருக்காக வருந்துகிறோம். அவர் சிறப்பாக சண்டையிட்டார். ஆனால் அவருக்கு வெற்றி மறுக்கப்பட்டது. அவரை நான் ஆதரிக்கிறேன்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT