Published : 10 Nov 2013 01:03 AM Last Updated : 10 Nov 2013 01:03 AM
ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசையில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்தைப் பிடித்தார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததோடு, 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் அஸ்வின்.
இதனால் வங்கதேச வீரர் ஷகிப் அல்ஹசன் 2-வது இடத்துக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் ஜாக்ஸ் காலிஸ் 3-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தையும், பௌலர்கள் தரவரிசையில் இரு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தையும் பிடித்துள்ளார் அஸ்வின்.
அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, முகமது சமி ஆகியோரும் டெஸ்ட் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 177 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா, பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 63-வது இடத்தைப் பிடித்தார். முகமது சமி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பௌலர்கள் தரவரிசையில் 53-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய பௌலர் புவனேஸ்வர் குமார் 13 இடங்கள் முன்னேறி 83-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் பௌலர் ஷில்லிங்ஃபோர்டு 4 இடங்கள் முன்னேறி, தரவரிசையில் முதல்முறையாக 20 இடங்களுக்குள் வந்துள்ளார். அவர் தற்போது 17-வது இடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஏ.பி.டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெயின் ஆகியோர் முறையே பேட்ஸ்மேன்கள் மற்றும் பௌலர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளனர்.
WRITE A COMMENT