Published : 03 Mar 2017 10:06 AM
Last Updated : 03 Mar 2017 10:06 AM
துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, போலந்தின் மார்சின் மேட்கோவ்ஸ்கி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
துபையில் நடைபெற்று வரும் இந்த தொடரில் போபண்ணா ஜோடி கால் இறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா, செர்பியாவின் விக்டர் ஜோடியை வீழ்த்தியது.
இந்த சீசனில் போபண்ணாவின் 2-வது சிறந்த தொடர் இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் அவர் ஜீவன் நெடுஞ்செழியனுடன் இணைந்து, சென்னை ஓபன் டென்னிஸில் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெடரர் தோல்வி
ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் 10-ம் நிலை வீரருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தகுதிநிலை வீரரான ரஷ்யாவின் இவ்ஜெனி டான்ஸ்கோயுடன் மோதினார். இதில் 26 வயதான 116-ம் நிலை வீரரான டான்ஸ்கோய் 3-6, 7-6 (9-7), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி 35 வயதான பெடரரை வீழ்த்தினார்.
இந்த தோல்வியால் 2017-ம் ஆண்டு சீசனில் பெடரரின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவர் தொடர்ச்சியாக 8 ஆட்டங் களில் வெற்றி பெற்றிருந்தார். மேலும் 2007-ம் ஆண்டுக்கு பிறகு பெடரர், தகுதி நிலை வீரரரிடம் தோல்வியடைவது இது 3-வது முறையாகும். கால் இறுதியில் டான்ஸ்கோய், பிரான்சின் லூக்காஸ் பவுலியுடன் மோதுகிறார்.
மற்றொரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-2, 6-0 என்ற நேர் செட்டில் 97-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்சியா லோபஸை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
ஜோகோவிச்
மெக்சிகோவின் அக்அபுல்கோ நகரில் நடைபெற்று வரும் ஏடிபி டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயின் ரபேல் நடால் ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினர். ஜோகோவிச் 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போர்டோவையும், ரபேல் நடால் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் இத்தாலியின் பவுலோ லாரான்சியையும் தங்களது 2-வது சுற்றில் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT