Published : 04 Jun 2016 05:53 PM
Last Updated : 04 Jun 2016 05:53 PM
முன்னாள் அதிரடி வீரரும், நடப்பு அணித் தேர்வுக்குழுத் தலைவருமான சந்தீப் பாட்டீல், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளார்.
தேர்வுக்குழு தலைவர் பொறுப்பு அவருக்கு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே கென்யா, ஓமன் அணிகளுக்கும் பயிற்சியாளராக சந்தீப் பாட்டீல் இருந்துள்ளார்.
1996-ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராகவும் சந்தீப் பாட்டீல் இருந்துள்ளார், ஆனால் அவரது பதவிக்காலம் 6 மாதங்களில் முடிவுக்கு வந்தது.
கென்யா அணியை ஒரு சிறந்த அணியாக உலகிற்கு சந்தீப் பாட்டீல் எடுத்துக் காட்டியதற்கு உதாரணம் அந்த அணி 2003-ம் ஆண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றது என்பதே. மேலும் மே, 2005-ல் இந்திய கிரிக்கெட் வாரியம் அணிப்பயிற்சியாளர் பொறுப்பிற்கு 4 பேரை பரிசீலனை செய்ததில் சந்தீப் பாட்டிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1980 முதல் 1986-ம் ஆண்டு வரை சந்தீப் பாட்டீல் 29 டெஸ்ட் போட்டிகளிலும் 45 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். 1983 உலகக்கோப்பையை வென்ற அணியில் முக்கியமான வீரர் சந்தீப் பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் சச்சின் திராவிட், லஷ்மண், சேவாக் போன்றோர் பெரிய சதங்களை எடுத்தாலும் டெனிஸ் லில்லி, லென் பாஸ்கோ ஆகியோருக்கு எதிராக 1981-ம் ஆண்டு அடிலெய்டில் இவர் எடுத்த 174 ரன்கள் இன்று வரை பிரபலமாக பேசப்பட்டு வரும் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. லஷ்மண் சிட்னியில் சச்சின் கேப்டன்சியில் ஆஸ்திரேலியா சென்று 3-0 என்று உதை வாங்கிய தொடரில் அடித்த 167 ரன்களைப் பற்றி இயன் சாப்பலிடம் கேட்ட போது, சந்தீப் பாட்டீலின் 174 இதைவிட சிறந்த இன்னிங்ஸ் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் பாப் வில்லிஸின் ஒரே ஓவரில் டெஸ்ட் போட்டியில் 6 பவுண்டரிகளை அடித்து 80 ரன்களிலிருந்து 104 ரன்களுக்கு ஒரே ஓவரில் சந்தீப் பாட்டீல் சென்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
இந்நிலையில் சந்தீப் பாட்டீல் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகளுக்கு இந்தியா அணி ஜூலை மாதம் செல்லும் போது புதிய பயிற்சியாளர் யார் என்பது தெரிந்து விடும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT