Published : 19 Aug 2016 04:15 PM
Last Updated : 19 Aug 2016 04:15 PM
தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை சுனெட் விலோயன் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜாவ்லின் த்ரோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
33 வயதாகும் விலோயன் தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் 2000-2002 இடையே ஆடியுள்ளார். இவர் ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று ஈட்டி எறிதல் பிரிவில் விலோயன் 64.92 மீட்டர் தூரம் விட்டெறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற குரேஷிய வீராங்கனை சாரா கோலக் 66.18 மீட்டர்கள் தூரம் விட்டெறிந்தார்.
1920ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மெக்பிரையன் கிரேட் பிரிட்டன் ஹாக்கி அணி தங்கம் வென்ற போது ஒலிம்பிக் அணியில் இடம்பெற்றிருந்தார், அதே போல் 1908-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டித் தொடரில் ஜானி டக்ளஸ் என்ற இங்கிலாந்து வீரர் தங்கம் வென்றார், இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 23 டெஸ்ட் போட்டிகளை ஆடியதோடு கேப்டனாகவும் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீராங்கனை விலோயன் விளையாடிய ஒரே டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டிலிருந்து இவர் விடைபெற பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால் தற்போது ஈட்டி எறிதலில் ‘தென் ஆப்பிரிக்க குயின்’ என்ற பெயர் எடுத்துள்ளார். மேலும் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் முதல் தென் ஆப்பிரிக்க வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் ரியோவில் தென் ஆப்பிரிக்கா 9-வது பதக்கம் வென்றுள்ளது.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் நூலிழையில் வெண்கலத்தை தவற விட்ட விலோயன் 4-வது இடமே பிடிக்க முடிந்தது.
கிரிக்கெட்டிலிருந்து ஈட்டி எறிதலில் சாதனை நிகழ்த்திய விலோயனுக்கு நேர்மாறாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மெர்ச்சண்ட் டி லாங்கே ஈட்டி எறிதலிலிருந்து மாறி இன்று சர்வதேச வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்கிறார்.
தென் ஆப்பிரிக்காவில் எப்போதுமே பன்முகத் திறமை பளிச்சிடும் வீரர்கள் வந்தவண்ணம் உள்ளனர், ஏ.பி.டிவிலியர்ஸ் ஒரு அபாரமான டென்னிஸ் வீரர் என்பது பலரும் அறியாதது. அதே போல் உலகின் தலைசிறந்த பீல்டராக உருவெடுத்த ஜாண்டி ரோட்ஸ், 1996-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க ஹாக்கி அணியிலிருந்து காயம் காரணமாக விலகியதும் குறிப்பிடத்தக்கது. இவரது கோல் கீப்பிங் திறமைகளை அப்படியே கிரிக்கெட்டில் திருப்பினார் ரோட்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT