Published : 21 Jul 2016 04:13 PM
Last Updated : 21 Jul 2016 04:13 PM

ராகுல் அல்ல.. தொடக்க வீரராக ஷிகர் தவண் களமிறங்கவே வாய்ப்பு: விராட் கோலி சூசகம்

இன்று மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆன்ட்டிகுவாவில் தொடங்குகிறது. அணிச்சேர்க்கைதான் கோலியின் பெரிய தலைவலி. இந்நிலையில் தொடக்க வீரராக ஷிகர் தவணுக்கே வாய்ப்பளிக்கப்படலாம் என்பதை கோலி சூசகமாகத் தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டிக்கு முன்னதான வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறியதாவது:

சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு தொடரை வைத்து ஒரு வீரரை எடைபோடுவது கூடாது. கே.எல்.ராகுல் பற்றி நாம் பேசினால் கடந்த 3-4 மாதங்களாக அவர் ஒரு கிரிக்கெட் வீரராக பல வகைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. 3-வது தொடக்க வீரராக அவர் தன்னை அணியில் நிறுவிக் கொண்டுள்ளார். இலங்கையில் ஆடினார், ரன்கள் குவித்தார்.

ஆனால் ஒரு கேப்டனாக முடிவு எடுத்தாக வேண்டும், அதனால்தான் கேப்டன் பொறுப்பு எளிதானதல்ல என்று கூறுகின்றனர். யார் தொடரில் தொடங்குகின்றாரோ அவருக்கு மற்ற வீரரை விட சாதகம்தான், மற்ற வீரர் தன் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியதுதான், ஆனால் 4 டெஸ்ட்கள் உள்ளன, எனவே வாய்ப்பு கிடைக்கும்.

ராகுல், ஷிகர் தவண் என்று நாம் பேசத்தொடங்கினால் முடிவெடுப்பது கடினமே. ஏனெனில் ஷிகர் தவண் போன்ற வீரர்கள் ஆதிக்க முறையில் பாசிட்டிவ்வாக பேட் செய்பவர்கள், அவர் நீண்ட நேரம் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி போட்டியை எதிரணியினரிடமிருந்து பறித்துச் செல்லும் திறமை கொண்டவர். குறிப்பாக மே.இ.தீவுகள் பிட்ச் சூழ்நிலைகள் இவருக்குச் சாதகமாக உள்ளன.

தவண் இலங்கையில் எப்படி ஆடினார் என்று பார்த்தோம், அவர் விரைவு சதம் ஒன்றை அடித்தார், பிறகு துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தார். ஓரிரு இன்னிங்ஸில் அவர் சரியாக ஆடாததை வைத்து ஷிகர் தவண் போன்ற வீரர்களை நாம் எடைபோடுதல் கூடாது. எனவே அவருக்கு போதிய வாய்ப்பளிக்க வேண்டும், இதில் தவறு ஏற்பட்டால் ராகுல் இருக்கவே இருக்கிறார்.

ஆட்டக்களம் வறண்டு, மென்மையாக உள்ளது. மே.இ.தீவுகளின் மற்ற பிட்ச்கள் போல் இது வன்மையாக இல்லை. இந்தியப் பிட்ச் போல்தான் உள்ளது. அதாவது மண் தளர்வாக இருக்கும். லேசாக புற்கள் இருந்தாலும் அது மண்ணை பெயராமல் காப்பதற்காகத்தான் இருக்குமே தவிர வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்க்கும் பவுன்ஸுக்காக இருக்காது என்றே கருதுகிறேன். இது ஒரு பேட்டிங் பிட்சாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

எங்களிடம் சில திட்டங்கள் உள்ளன, அனைத்தையும் உங்களிடம் வெளிப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்திரேலியா, இலங்கையில் ஆடிய போது கற்றுக் கொண்டது என்னவெனில் முதல் டெஸ்ட் போட்டியில் தாக்குதல் முறையில் விட்டுக் கொடுக்காது ஆட வேண்டும் என்பதையே. முதல் டெஸ்ட்தான் மற்ற டெஸ்ட் போட்டிகளுக்கு நமக்குக் கிடைக்கும் உத்வேக முன்னோடி. இதற்கு நாம் வலுவான பந்துவீச்சு கூட்டணியுடன் களமிறங்க வேண்டும்.

20 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால்தான் வெற்றி சாத்தியம், ஒரு கேப்டனாக 5 பவுலர்கள் தேவை என்று உறுதியாக நம்புபவன் நான். 700 ரன்கள் அடிக்கலாம் ஆனால் அதனால் பயன் என்ன? எனவே 20 எதிரணி விக்கெட்டுகளைக் கைப்பற்ற என்ன செய்ய வேண்டும் என்பதே வெற்றிக்கு அடிப்படை.

ஒரு முக்கிய வீச்சாளர் 10 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து ஓரிரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினால் எதிரணியை நெருக்கடியில் வைக்க முடியும், மாறாக பகுதிநேர வீச்சாளர்களை 5 ஓவர்கள் வீச வைத்து அவர் 30 ரன்களை கொடுத்தால் நிச்சயம் எதிரணியினரை நாம் நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. அதனால்தான் டெஸ்ட் போட்டிகளில் 5-வது பவுலர் எப்படி வீசுகிறார் என்பது மிக முக்கியமாகும்.

இந்தப் பிட்சில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசும் உத்தி சரிப்பட்டு வராது, ஏனெனில் பிட்சில் போதிய பவுன்ஸ் இல்லை, ஸ்விங்கும் சாத்தியமில்லை எனவே ஸ்டம்புக்கு நேராக வீசி ஓரளவுக்கு மாற்றங்களை புகுத்தும் உத்திதான் முக்கியமானது.

மொகமது ஷமி எங்கு வீசினாலும் நன்றாகவே வீசியுள்ளார், இப்போது இன்னும் நன்றாக வீசுகிறார், அவர்தான் நமது ஷூட் பவுலர். பேட்ஸ்மென் எந்த ஸ்கோரில் இருந்தாலும் வீழ்த்தும் திறமை ஷமியிடம் உண்டு. புதிய பந்தில் ஸ்விங், பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் என்று அவரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மே.இ.தீவுகளில்தான் நான் அறிமுகமானேன், மீண்டும் இங்கு வந்து ஆடுவது இனிமையாக உள்ளது. இடையே நிறைய நாடுகளில் ஆடியதால் ஒரு கிரிக்கெட் வீரனாக நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன்.

இவ்வாறு கூறினார் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x