Published : 08 Sep 2016 07:12 PM
Last Updated : 08 Sep 2016 07:12 PM
பிரிஸ்பனில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 4 நாள் அதிகாரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பிங்க் பந்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ கேப்டன் நமன் ஓஜா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா ஏ அணியில் ஆஸ்திரேலிய பிரதான அணிக்குத் தேர்வான வேகப்பந்து வீச்சாளர் வொரால் தவிரவும் சேயர்ஸ், டி.ஜே.மூடி ஆகியோர் தங்களிடையே 6 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொள்ள, லெக் ஸ்பின்னர் ஸ்வெப்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மணீஷ் பாண்டே இந்தியா ஏ அணியில் அதிகபட்ச ஸ்கோராக 76 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 77 ரன்கள் விளாசி அதிரடி முறையில் ஆடினார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு முதல் பந்தில் அவர் சேயர்ஸ் பந்தில் ஆட்டமிழக்க இவரது விக்கெட்டுடன் அடுத்த 42 ரன்களில் இந்தியா ஏ 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
தொடக்க வீரர்களான ஹெர்வாட்கர் (34), ஃபைஸ் ஃபாஸல் (48) ஆகியோர் அபாரமாகத் தொடங்கி 74 ரன்களைச் சேர்த்தனர். ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்களில் ஸ்பின்னர் ஸ்வெப்சனிடம் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கருண் நாயர் 15 ரன்களில் ஸ்வெப்சனிடம் வீழ்ந்தார்.
ஓஜா (2), ஹர்திக் பாண்டியா (0) ஆகியோர் சோபிக்கவில்லை. ஜெயந்த் யாதவ் 11 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக தேங்க, ஷர்துல் தாக்குர் 17 ரன்களையும், வருண் ஆரோன் 4 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 25/0 என்று உள்ளது. பேங்க்ராப்ட் 10 ரன்களுடனும், ஜோ பர்ன்ஸ் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் 5 பவுண்டரிகளை பகிர்ந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT