Published : 17 Dec 2013 07:01 PM
Last Updated : 17 Dec 2013 07:01 PM
இந்திய அணிக்கு இனி நட்சத்திர வீரர் சச்சின் ஆட மாட்டார் என்பதை அணியிலுள்ள இளம் வீரர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். அவர் இல்லையென்றாலும் தத்தமது ஆட்டங்களில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியும் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. வலுவான தென் ஆப்பிரிக்க அணியை அவர்கள் சொந்த மண்ணில் சந்திப்பது புதிய இளம் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும்.
"போன டெஸ்ட் போட்டி நடக்கும் போதே இனி வரும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுகு சச்சின் எங்களுடன் இருக்க மாட்டார் என்பதை 100 சதவீதம் உணர்ந்திருந்தோம். அவர் உடன் இருப்பது நன்றாகத்தான் இருக்கும் ஆனாலும் அதையே நினைக்காமல் அடுத்து நடக்கப் போகும் விஷயங்களில் கவனம் கொள்ள வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும்" என் தோனி பத்திரிக்கையாளர்களிடன் தெரிவித்தார்.
1996ஆம் ஆண்டிற்கு பிறகு டெண்டுல்கர், டிராவிட், லக்ஷ்மண், கங்குலி ஆகிய மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியா களத்தில் இறங்குவது இதுவே முதல் முறை. தாய் மண்ணில் அடுத்தடுத்து 6 டெஸ்ட் வெற்றிகளை பெற்றதன் தொடர்ச்சியாக இந்தியா இப்போது இந்த போட்டியை ஆடவிருக்கிறது.
"ஒவ்வொரு தொடருமெ எங்களுக்கு புதிதான ஒரு ஆரம்பம்தான். நடந்ததை நினைத்துக் கொண்டிருப்பது தேவையற்றது. போட்டி நடக்கும் இடத்தின் சூழலிற்கேற்ப தயார் படுத்திக்கொண்டு முடிந்ததை சிறப்பாகச் செய்ய வேண்டும். இத்தகைய சவாலான சூழலில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது அணியிலுள்ள இளம் வீரர்களுக்கு கற்றுக் கொள்ளக்கூடிய நல்ல அனுபவமாக இருக்கும். இது எங்களுக்கு சாதகமான விஷயம்தான்" என்றார் தோனி.
இந்தியா ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு, ஸ்டேய்ன், மார்கல், ஃபிலாண்டர் போன்ற பந்துவீச்சாளர்களை களத்தில் சந்திக்க, இந்திய அணி எந்த அளவு தயாராக உள்ளது என்பதைப் பற்றியும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சில நாட்களுக்கு முன் இந்திய அணி ஆடுவதாக இருந்த பயிற்சி ஆட்டமும் மழையால் ரத்தானது. இதைப் பற்றி கேட்ட போது, "பயிற்சி ஆட்டத்தில் நாங்கள் முதலில் பேட்டிங் தேர்வு செய்து எதிரணியினரை மழையில் நனைந்திருந்த மைதானத்தில் ஃபீல்டிங்க் செய்ய வைத்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அது சுயநலமாக இருந்திருக்கும். ஆட்டம் ரத்தானதே இரு அணிக்கும் நல்லதாக அமைந்தது. முடிந்த வரை அந்த களத்தில் நாங்கள் பயிற்சி பெற்றோம்" என தோனி பதிலளித்தார்.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் நாளை ஜோகன்னஸ்பர்க் நகரில் தொடங்குகிறது. இந்திய அணியைப் போலவே, தென் ஆப்பிரிக்க அணியும் சொந்த மண்ணில் நடந்த, கடந்த 6 டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ளது. நாளைய ஆட்டம் இரு அணிகளுக்குமே சவாலாக இருக்கும் என்பதே கிரிக்கெட் வல்லுனர்களின் கணிப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT