Published : 18 Apr 2017 02:17 PM
Last Updated : 18 Apr 2017 02:17 PM
பொதுவாக காயமடைந்தால் முழு உடல் தகுதியை நிரூபிக்கும் விதமாக உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி மீண்டும் அணிக்குள் திரும்ப அழைக்கப்படுவதே வழக்கமான சூழ்நிலையில் தான் மணிக்கட்டு எலும்பு முறிவுடனேயே ஆடியதாக முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற 2016-17 டெஸ்ட் போட்டிகள் 13-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு போட்டியில் மட்டும் விஜய் ஆடவில்லை. நியூஸிலாந்துக்கு எதிராக 2 அரைசதங்களை அடித்தார் விஜய், பிறகு இங்கிலாந்துக்கு எதிராக 2 சதங்கள் மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக ஒரு சதம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் அரைசதம் எடுத்தார், மற்ற இன்னிங்ஸ்களில் 11-தான் அதிகபட்ச ஸ்கோர்.
இந்நிலையில் அவர் மணிக்கட்டு காயத்திற்கு பிரிட்டனில் சிகிச்சை முடிந்து 16-ம் தேதி நாடு திரும்பினார், இதனால் ஐபிஎல் தொடரில் அவரால் ஆட முடியாமல் போயுள்ளது.
இது குறித்து முரளி விஜய் கூறியிருப்பதாவது:
நான் பொதுவாக காயத்தின் நிலை பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை. ஆனால் நான் எலும்பு முறிவு ஏற்பட்ட மணிக்கட்டுடன் தான் ஆடினேன். இது மிகவும் கடினாமான நிலைதான், ஆனால் அணியின் நலனே எனக்கு முதன்மை. நான் சுதந்திரமாக பேட் செய்ய முடியவில்லை, காரணம் காயம் அதிகமானதால் சில ஷாட்களை என்னால் ஆட முடியவில்லை. எனவே ரன்களை மெதுவாகவே சேர்க்க முடிந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முன்னங்காலில் சென்று தடுத்தாடுவது கடினமாக இருந்தது. ஏனெனில் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதால் வேகப்பந்தை முன்னங்காலை நகர்த்தி தடுத்தாடுவது சிரமமாக இருந்தது.
விளையாடும் போது பவர் ஷாட்களை ஆட வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டேன். ஸ்பின்னர்களை ஆடும்போது இது என் நினைவில் இருந்தது. ஒரு பேட்ஸ்மெனாக சில ஷாட்களை ஆட முடியாமல் போவது நம் உத்வேகத்தைக் கெடுத்து விடுகிறது. இது வெறுப்பேற்றக்கூடியது, ஆனால் நான் இதையே சவாலாகக் கண்டேன். எதுவும் சுலபமாகக் கிடைத்து விடாது, நான் நிறையக் கற்றுக் கொண்டேன்.
என்னுடைய உடல் மொழி உண்மை நிலவரத்தை எப்போதும் தெரிவித்து விடுவதில்லை. நான் வலியில் ஆடினேன், ஆனால் அதை வெளிப்படுத்தும் நபர் நான் அல்ல. நானே அதன் பலனை அனுபவிக்க வேண்டும், நானே அதனைக் கையாள வேண்டும் என்று நினைப்பவன்.
இன்னும் ஓரிரு மாதத்தில் மறுபடியும் பேட்டிங்குக்குத் திரும்பி விடுவேன்.
இவ்வாறு கூறினார் முரளி விஜய்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT