Published : 26 Mar 2015 01:05 PM
Last Updated : 26 Mar 2015 01:05 PM
உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்களை குவித்துள்ளது. ஒரு நேரத்தில் ஸ்கோர் 350 ரன்கள் வரை செல்லலாம் என்ற நிலையிலிருந்து ஓரளவுக்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவை மட்டுப்படுத்தியது என்றே கூற வேண்டும்.
முதல் 10 ஓவர்களில் 56 ரன்களுக்கு 1 விக்கெட். பிறகு 11-வது ஓவர் முதல் பவர் பிளேயிற்கு முதல் ஓவரான 32-வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 167/1 என்று இருந்தது. அதாவது 22 ஓவர்களில் 111 ரன்களை இந்தியா விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டியது.
ஆனால் வழக்கமாக இந்த உலகக்கோப்பையில் நடு ஓவர்களில் இந்தியா விக்கெட்டுகளைக் கைப்பற்றும் ஆனால் இம்முறை முடியவில்லை.
பவர் பிளேயில் 5 ஓவர்களில் 64 ரன்கள் விளாசியது ஆஸ்திரேலியா. 37-வது ஓவர் முடிவில் 231/2 என்று இருந்த ஆஸ்திரேலியா அதன் பிறகு உமேஷ் யாதவ்வின் அருமையான பந்துவீச்சு மற்றும் அஸ்வினின் ஒரு விக்கெட் ஆகியவற்றால் ஆஸ்திரேலியாவை 234/4 என்று சரிவடையச் செய்தது.
ஆனால், அதன் பிறகு மீண்டும் ரன்களை கசிய விட்டது. மொகமது ஷமி சரியாக வீசவில்லை. ஜடேஜாவும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தாததே இந்திய அணியின் பின்னடவைக்கு காரணமாக அமைந்தது. ஆனால் யாதவ் அருமையான வேகம் மற்றும் துல்லியத்தில் பந்து வீசினார். ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை முக்கியக் கட்டத்தில் கைப்பற்றினார்.
மேக்ஸ்வெல் மிக அவசரமாக அதிரடி காட்டினார். கடைசியில் ஜான்சனுக்கு 27 ரன்கள் கொடுத்தது வேதனைதான். ஸ்மித் மீண்டும் இந்திய அணிக்கு எதிராக நிரூபித்துள்ளார். இந்த தொடரில் அவர் இந்திய பந்துவீச்சை அதிகம் பார்த்துவிட்டார். அதனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஏற்கெனவே இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 360 ரன்களுக்கு மேலான இலக்கைத் துரத்தி வெற்றி பெற்றுள்ளது. இன்றும் வாய்ப்புள்ளது. ஆஸி. பந்துவீச்சு, மற்றும் பீல்டிங் இந்தியாவுக்கு சவாலாக அமையும். கோலி நின்றால் சாதிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT