Published : 29 Oct 2014 09:07 PM
Last Updated : 29 Oct 2014 09:07 PM
இந்திய அணியில் இனி தான் தேர்வு செய்யப்படாமலே போகக்கூடிய வாய்ப்பிருப்பதாக விரக்தியடைந்துள்ள யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 2013-ஆம் ஆண்டில் யுவராஜ் சிங் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடினார்.
இந்திய அணியில் தனது வாய்ப்புகள் பற்றி அவர் கூறும்போது, “இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே எனது இலக்கு. அணியில் தேர்வு செய்யப்படாத போது ஏமாற்றம் ஏற்படுவது இயற்கை. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் எனது ஆட்டமும் சீராக இல்லை. ஏற்ற இறக்கங்களுடனேயே காணப்பட்டது. மாற்றங்கள் வரலாம். நான் மீண்டும் அணியில் இடம்பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இல்லையெனில் வாழ்க்கை வெறுப்பின் உச்சத்திற்குச் செல்லும். என்னால் மீண்டும் வருவதற்கு என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்ய முடியும்.
இதைக்கூறும்போது, இனி இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்படாமலே போகக்கூட சாத்தியங்களும் இருக்கிறது என்பதையும் நான் அறியாமல் இல்லை. நானும் அத்தகைய சாத்தியங்களை எண்ணியிருக்கிறேன். ஆனால் இதற்காக முயற்சி செய்து, மீண்டும் அணிக்குள் வர முடியும் என்ற நம்பிக்கையும் என்னிடம் உள்ளது” என்றார்.
விஸ்டன் இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சேவாக், ஹர்பஜன், கம்பீர் ஆகியோரும் அணியில் நுழைய போராடி வருகின்றனரே என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், “நாங்கள் எப்போதும் இந்தியாவுக்காக ஆடிய நாட்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். எங்கள் அனைவருக்கும் அந்தக் காலம் ஒரு பொற்காலம் என்பது தெரியும். ஆனாலும் வாழ்க்கை தொடர்ந்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
அணித் தேர்வு பற்றி நான் எதுவும் பேச முடியாது. எனக்கு என்ன வாய்ப்புகள் இருக்கிறது? துலிப் டிராபி, ரஞ்சி ஒருநாள் போட்டிகள் மற்றும் பிற உள்நாட்டு போட்டிகள் ஆகியவை உள்ளன. ஆனால் மீண்டும் நான் இந்திய அணியில் இடம்பிடித்து விட்டால், அது ஒரு பெரிய கதையாக அமையும். மீண்டும் வந்து உலகக் கோப்பை போட்டிகளுக்காக இந்தியாவுக்காக ஆடுவது ஒரு பெரிய அனுபவம். இல்லாவிட்டால் என்ன... வாழ்க்கை ஓடிக் கொண்டுதான் இருக்கும்... ஏற்றுக் கொள்ள கடினம்தான் ஆனால் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்”
இவ்வாறு கூறினார் யுவராஜ் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT