Published : 15 Feb 2017 11:49 AM
Last Updated : 15 Feb 2017 11:49 AM
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு வீரர் நசீர் ஜாம்ஷெட் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீகில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் நிறைய வீரர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு வீரர் நசீர் ஜாம்ஷெட் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நேஷனல் கிரைம் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “30 வயதுடைய இரண்டு நபர்கள், ஜாம்ஷெட் உட்பட தேசிய கிரைம் ஏஜென்சியினால் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக பிப்ரவரி 13-ம் தேதி (திங்கள்) கைது செய்யப்பட்டு ஏப்ரல் 2017-வரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இந்த புதிய கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஐசிசி ஊழல் தடுப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது, இதனுடன் பிரிட்டன் நேஷனல் கிரைம் ஏஜென்சியும் இணைந்துள்ளது.
இதுவரை பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர்பாக 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நசீர் ஜாம்ஷெட்டை இடைக்காலமாக தடை செய்த தினத்தில் பிரிட்டன் இவரைக் கைது செய்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர் ஷர்ஜீல் கான், காலித் லடீஃப் ஆகியோரும் இடைக்காலமாக நீக்கப்பட்டுள்ளனர்.
சூதாட்டம் தொடர்பாக மொகமது இர்பான், சுல்பிகர் பாபர், ஷாசைப் ஹசன் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை செய்தது, விசாரணைக்குப் பிறகு இவர்கள் விளையாட அனுமதி வழங்கியுள்ளது.
தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது, இவர்கள் மீது முறையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT