Published : 14 Sep 2016 06:32 PM
Last Updated : 14 Sep 2016 06:32 PM
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜேகப் மார்டின் பரோடா ரஞ்சி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார், இவர் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் திஹார் சிறை சென்று வந்தவர் என்பதால் கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஜேகப் மார்டின் தற்போது ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ-யின் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி லோதா கமிட்டி போராடியதை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்து பிசிசிஐக்கு கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ள காலக்கட்டத்தில் குற்றப்பின்னணி கொண்ட ஜேகப் மார்டினை பரோடா ரஞ்சி அணியின் பயிற்சியாளராக நியமித்தது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
2003-ம் ஆண்டு தொடர்புடைய ஆள்கடத்தல் வழக்கு தொடர்பாக ஜேகப் மார்டின் 2011-ம் ஆண்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்திய அணிக்கு 1999-2000 தொடரில் தேர்வு செய்யப்பட்ட ஜேகப் மார்டின் 10 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் பெர்த்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இவர் எடுத்த 39 ரன்களே இவரது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். 2001-ல் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
டிசம்பர் 11, 2004-ல் டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக நிமேஷ் குமார் என்பவரை போலீஸார் விசாரித்தனர். அப்போது முகவர் ராஜேந்திர் பட் என்பவருக்கு ரூ.7 லட்சம் கொடுத்ததாகவும் இவரது கூட்டாளியான் ஜேகப் மார்டின் மற்றும் ஜனக் லால் ஆகியோர் தனது பிரிட்டன் பயணத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறினார். மேலும் ஜேகப் மார்டின் போலி அணி ஒன்றிற்கு தன்னை மேலாளராக நியமித்ததாகவும் போலீஸில் தெரிவித்தார். இந்த அணி செப்டம்பர் 2004-ல் பிரிட்டன் சென்றது, மற்ற வீரர்கள் இந்தியாவுக்கு திரும்பி விட, நிமேஷ் குமார் மட்டும் பிரிட்டனில் இருந்தார். நிமேஷின் உறவினர்கள், குடும்பத்தினரும் கிரிக்கெட் வீரர் ஜேகப் மார்டின் ஆள்கடத்தல் கும்பலில் ஒருவர் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 3, 2011-ல் ராஜேந்திர பட் கைது செய்யப்பட்டார். இவர் தனக்கு ரூ.25,000 மட்டுமே கொடுக்கப்பட்டது என்றும் மீதி ஜேகப் மார்டினிடம் இருப்பதாகவும் போலீஸில் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து ஜேகப் மார்டின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது, அவரும் தலைமறைவானார், அவர் இருப்பிடத்தைக் கூறுபவர்களுக்கு ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் 2011ம் ஆண்டு ஏப்ரலில் ஜேகப் மார்டின் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து 2004-ல் வழக்குப் பதிவு செய்த அப்போதைய இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய போலீஸ் உயரதிகாரி சஞ்ஜீவ் கூறிய போது, “மார்டின் ஒரு போலி அணியான அஜ்வா ஸ்போர்ட்ஸ் கிளப் என்பதை வைத்திருந்தார்” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் அவர் மசியவில்லை, இதனையடுத்து இவர் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து சரணடையுமாறு உத்தரவிட்டது. மார்டின் கைது செய்யப்பட்டார், இதனையடுத்து தனது ரயில்வே வேலையையும் இழந்தார்.
இந்நிலையில் குற்றப்பின்னணி உடைய ஒருவரை பரோடா ரஞ்சி அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கலாமா என்று சர்ச்சை எழுந்துள்ளது.
லோதா கமிட்டி செயலர் கோபால் சங்கர் நாராயணன் இது பற்றி கூறும்போது, “குற்றப்பின்னணி உடைய ஒருவர் எப்படி பயிற்சியாளராக நியமிக்கப்படலாம்? வாய்ப்பேயில்லை” என்றார்.
பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே கூறும்போது, “இது பிசிசிஐ-யின் மாநில கூட்டமைப்பு விவகாரம், உறுப்பு வாரியங்களின் முடிவுகளில் தலையிட முடியாது, குறிப்பாக பயிற்சியாளர் போன்ற கிரிக்கெட் தொடர்பான விவகாரங்களில்” என்றார்.
டெல்லி நீதிமன்றத்தில் இன்னமும் நடைபெற்று வரும் இந்த வழக்கில் ஜேகப் மார்டின் பக்கம் வாதாடும் வழக்கறிஞரோ, மார்டின் செய்யாத குற்றத்திற்காக டெல்லி போலீஸ் அவரைக் கைது செய்துள்ளது. அவர் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார், ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை. தற்போது ஜாமீனில் உள்ளார் ஜேகப் மார்டின். இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. தற்போது இவர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிக்கும் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறுகிறார்.
ஜேகப் மார்டினோ, எனக்கு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது, நான் நிச்சயம் குற்றமற்றவனாக வெளியே வருவேன். மீதமுள்ள வாழ்க்கையை கிரிக்கெட்டுக்காக அர்ப்பணிக்கவுள்ளேன் என்று கூறுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT