Published : 07 Oct 2014 11:13 AM
Last Updated : 07 Oct 2014 11:13 AM
பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 14 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடந்த ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரசிகர்களை கவர்ந்த ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல், சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் அதிரடி காட்ட முடியவில்லை. எனினும் சொந்த நாட்டு அணிக்காக விளையாடிய இந்த ஆட்டத்தில் அவர் பந்து வீச்சில் அசத்தினார். பாகிஸ்தானின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார்.
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையிலான ஒரு 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டி ஆகியவற்றை கொண்ட தொடர் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இதில் முதலில் 20 ஓவர் கிரிக்கெட் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் அணிக்கு மூத்த வீரர் ஷாகித் அப்ரிடியும், ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டன் ஆரோன் பிஞ்சும் தலைமை வகித்தனர். ஜார்ஜ் பெய்லி கேப்டன் பொறுப்பில் இருந்து நீங்கியதால் பிஞ்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக இருபது ஓவர் போட்டியில் களமிறங்கியது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடினர். தொடக்க வீரர்கள் அவாய், ஷெசாத் ஆகியோர் முறையே 3, 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த உமர் அமீன், சோயிப் மாலிக் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.
ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், போய்ஸி ஆகியோரின் அபார பந்து வீச்சு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தது. ஒரு கட்டத்தில் 57 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து மோசமான நிலையில் இருந்தது. எனினும் கடைசி கட்டத்தில் வஹாப் ரியாஸ் 16 ரன்கள், ராசா ஹசன் 13 ரன்கள் எடுத்தனர். இது தவிர ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் உதிரியாக 20 ரன்களை கொடுத்தனர். இதில் 13 ரன்கள் வொயிட் மூலம் கிடைத்தது. இதுவே பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுக்க உதவியது.
ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் 3 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட் எடுத்தார். ஸ்டார்க் 4 ஓவர்களில் 10 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். 97 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடியபோதும், மறுமுனையில் கேப்டன் பிஞ்ச் 5 ரன்களுக்கும், மேக்ஸ்வெல் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
ஸ்மித், ஹோட்ஜ் ஆகியோரும் தலா 3,7 ரன்களே எடுத்தனர். எனினும் இலக்கு எளிதானது என்பதால் ஆஸ்திரேலியா வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறியது. வார்னர் 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வென்றது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அபோட், போய்ஸி, ஹக்கீஸ், ரிச்சர்ட்சன் ஆகியோர் முதல்முறையாக 20 ஓவர் போட்டியில் விளையாடினர். பாகிஸ்தான் அணியில் பேட்ஸ்மேன் நசீம் தனது அறிமுக ஆட்டத்தில் அணியிலேயே அதிபட்சமாக 25 ரன்கள் (32 பந்துகள்) எடுத்தார். மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் இன்று சார்ஜாவில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT