Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM
இந்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் பேச்சு நடத்தி அடுத்த ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை பங்கேற்க வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கராச்சி யில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சேத் இது தொடர்பாகக் கூறியது:
பிசிசிஐ மற்றும் ஐபிஎல்-லில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் ராஜீவ் சுக்லா சமீபத்தில் லாகூர் வந்திருந்தார். நான் அவரை சந்தித்தபோது ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களை பற்கேற்க வைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
அப்போது பிசிசிஐ தலைவர் சீனிவாசனிடம் இது தொடர்பாக பேசுமாறு அவர் என்னிடம் கூறினார். இதையடுத்து பிசிசிஐ தலைவருடனும் நான் பேசினேன். அப்போது இது இந்திய அரசின் முடிவு சம்பந்தப்பட்ட விஷயம். எனவே நான் அரசுத் துறையினருடன் இது தொடர்பாக பேசுகிறேன் என்று சீனிவாசன் என்னிடம் கூறினார். எனவே பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமல் இருப்பது குறித்து பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் பேசினேன். அவர் இந்தப் பிரச்சினை தொடர்பான முழுவிவரங்களையும் என்னிடம் கேட்டுள்ளார். எனவே பாகிஸ்தானில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
பிசிசிஐ நடத்துவதுபோல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்தினால் என்ன என்ற கேள்விக்கு, பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட எந்த நாட்டு முன்னணி வீரர்களும் தயாராக இல்லை.
மூன்றாவது நிலை வீரர்கள் விளையாட தயாராக இருந்தாலும் அவர்கள் அதிக அளவில் பணம் கேட்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இப்போதுள்ள சூழ்நிலையில் அவ்வளவு அதிக பணம் செலவு செய்ய முடியாது என்று சேத் பதிலளித்தார்.
2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அதற்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச அளவில் அதிக அளவு பணம் கொட்டும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் ஐபிஎல் முதன்மையாக உள்ளது. எனவே இதில் பங்கேற்க அனைத்து நாட்டு வீரர்களும் ஆர்வத்துடன் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT