Published : 19 Jul 2016 08:16 PM
Last Updated : 19 Jul 2016 08:16 PM
லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்தை வென்ற பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ‘சல்யூட்’ அடித்தும் பிறகு தரையில் ‘புஷ்-அப்’ பயிற்சி செய்தும் வெற்றியைக் கொண்டாடிய விதம் இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக்கிடம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து குக் கூறும்போது, “லார்ட்ஸில் தோற்பது நல்ல விஷயமல்ல, அதுவும் எதிரணியினர் அதனைக் கொண்டாடும் விதம் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. எனினும் அதனை நாங்கள் எங்களுக்கான உத்வேகமாக எடுத்துக் கொள்வோம்.
இதனை காயப்படுத்தும் செயலாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் போட்டியத் தோற்றது முதலான அந்த முதல் 20 நிமிட நேர வெறுப்பில் அவர்கள் கொண்டாடிய விதம் பார்ப்பதற்கு மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை.
அந்தக் கொண்டாட்ட முறை உண்மையில் காண நன்றாக இல்லை, ஆனால் அவர்கள் விரும்புவதைச் செய்வதற்கு உரிமை உண்டு. அதுதான் அவர்களை ஒன்றிணைத்துள்ளது, மேலும் எங்களுக்கு எந்தமாதிரியான சவால் காத்திருக்கிறது என்பதையும் அது அறிவுறுத்தியது” என்றார்.
2010-11-ல் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் தொடரை வென்ற போது இங்கிலாந்து இதை விட மரியாதை குறைவான முறையில் அந்த வெற்றியை கொண்டாடியதை இங்கிலாந்து மறந்து விட்டனர் என்று ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று குக்கின் எதிர்வினைக்கு மறுவினையாற்றி பதிவிட்டுள்ளதையும் நாம் இங்கு குறிப்பிடுவது நலம்.
அதாவது இங்கிலாந்து மரியாதை குறைவான முறையில் அந்த வெற்றியைக் கொண்டாடியது பிற்பாடு 2013-14 தொடரில் 5-0 என்ற ஆஸ்திரேலிய வெற்றிக்கு வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு தொடர்களிலும் இங்கிலாந்து அணியில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரெஸ்னன் தற்போதைய பாகிஸ்தான் கொண்டாட்டத்தைப் பற்றி தனது ட்விட்டர் பதிவில், “இது உங்களை திருப்பி அடிக்கும் நண்பர்களே” என்று எங்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கு ஏற்படும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறும்போது, “நாங்கள் காகுலில் ராணுவ முகாமில் இருந்தோம், எனவே எங்களது இந்த சல்யூட், புஷ் அப் பயிற்சி எங்கள் நாட்டு ராணுவத்திற்கான மரியாதை செலுத்தலே. ராணுவ வீரர்களுக்கு இது ஒரு சிறிய அர்ப்பணம் அவ்வளவே, மேலும் பாகிஸ்தான் கொடிக்கும் நாட்டுக்கும் நாங்கள் செய்த மரியாதையே சல்யூட்டும் புஷ்-அப் பயிற்சியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT