Published : 13 Mar 2017 03:01 PM
Last Updated : 13 Mar 2017 03:01 PM

ரன் எடுக்க முடியாமல் வெறுப்படைந்துள்ளார் விராட் கோலி: மிட்செல் ஜான்சன்

நடப்பு டெஸ்ட் தொடரில் பெரிய அளவில் தன்னால் ரன்கள் குவிக்க முடியவில்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி வெறுப்படைந்திருக்கிறார் என்று ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதள வலைப்பதிவில் மிட்செல் ஜான்சன் இது குறித்து எழுதியிருப்பதாவது:

விராட் கோலி மைதானத்தில் நடக்கும் அனைத்திலும் தன் அடையாளத்தை, இருப்பை காட்டிவருகிறார். ரசிகர்களை தூண்டி விடுகிறார். ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் ஆகும் போது அனைவரையும் ஏதாவது ஒரு விதத்தில் வழியனுப்பி வருகிறார்.

நான் விளையாடிய போது இருந்த நிலவரங்களை இது எனக்கு நினைவூட்டுகிறது. எனக்கும் விராட் கோலிக்கும் இடையே சில உரசல்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு முறை நாங்கள் இருவரும் ஆடும் போதும் உரசல் ஏற்பட்டது.

2014-ம் ஆண்டு பாக்சிங் தின டெஸ்ட் போட்டிக்குப் பிறகே அவர் என்னைப்பற்றி அதிகம் யோசித்திருக்க வாய்ப்பில்லை. அந்த தின முடிவில் என் மீது அவருக்கு மதிப்பில்லை என்று தெரிவித்தார்.

அன்றைய தினம் ஒரு பந்தை அவர் தடுத்தாடிய போது நான் அதை எடுத்து ஸ்டம்பை நோக்கி அவர் முனையில் அடித்தேன், விராட் கிரீஸிற்கு வெளியே இருந்தார், அதனால் ரன் அவுட் முயற்சி செய்தேன். விராட் குறுக்கே நின்றார்.

இதனால் அவர் முதுகில் பந்து பட்டது, உடனேயே நான் மன்னிப்பு கேட்டேன். அது ஒரு விபத்து, ஆனால் எனது மன்னிப்பு அவர் காதுகளுக்கு எட்டவில்லை.

நிறைய வார்த்தைப் பரிமாற்றங்கள். அங்கிருந்து விராட் நிறுத்தவில்லை. அன்று அவர் சிறந்த சதம் ஒன்றை எடுத்தார், நான் அவரை அன்றைய தின கடைசி பந்தில் வீழ்த்தினேன்.

ஆட்டம் முடிந்த பிறகு விராட் கூறும்போது, ‘நான் அவர்களில் (ஆஸி. வீரர்கள்) சிலரை மதிக்கிறேன், ஆனால் என்னை மதிக்காத ஒருவரை நான் மதிப்பதற்கான காரணம் எதுவும் இல்லை’ என்றார். ஆனால் ஒருவருடைய இத்தகைய கருத்துகள் எனக்கு எந்த அர்த்தத்தையும் அளிக்கவில்லை.

அன்றிலிருந்து அதே குணத்தில் தொடரும் விராட் கோலி, பெங்களூருவிலும் தனது பழைய தந்திரங்களைக் கையாண்டார். அவர் உணர்ச்சிமயமானவர் என்பது இயல்பானதுதான். ஆனால் இந்தத் தொடரில் அவரால் பெரிய ரன்களை எடுக்க முடியவில்லை என்று வெறுப்படைந்திருப்பதாக தெரிகிறது. இதனை அவர் தன் வெளிப்படையான உணர்ச்சிகள் மூலம் பதிலீடு செய்து கொள்கிறார்.

விக்கெட் விழும்போதெல்லாம் கேமராக்கள் அவர் பக்கம் திரும்புகின்றன. அவர் முகம் எப்படி வினையாற்றுகிறது என்பது ஒவ்வொரு விக்கெட்டுக்குப் பிறகும் காட்டப்படுகிறது.

ஒவ்வொரு வீரருக்கும் அவர் தனக்கேயுரிய முறையில் வழியனுப்பு செய்கிறார். இதில் அவர் கவனமாக இருப்பது நல்லது. இவ்வாறு சில வேளைகளில் நடக்கும் ஆனால் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், அவர் துள்ளிக்குதித்து தனது முகபாவனை, வார்த்தைகள் மூலம் வீரர்களை வழியனுப்புவது எச்சரிக்கைக்குரியது.

விராட் மட்டுமல்ல இரு அணிகளுகும் குறைந்தது அரைடஜன் வீரர்களாவது தங்களது கொண்டாட்ட உணர்வை மிகுதியாகவே வெளிக்காட்டிக் கொள்கின்றனர். இது பார்ப்பதற்கு நன்றாக இல்லை, வீடியோவில் அவர்கள் பார்த்தால் அவர்களுக்கே இது புரியும்.

புரிகிறது! விராட் போன்றவர்கள் ஒவ்வொரு அணிக்கும் தேவை, ஏனெனில் அவர்கள்தான் நமக்கு ஆதரவளிப்பவர்கள், யாரும் ரோபோக்கள் கிடையாது, ஆனால் அதற்காக ஒழுங்கற்ற முறையை கட்டவிழ்த்து விடக்கூடாது. விதிமுறைகளுக்கேற்பவே நடந்து கொள்ள வேண்டும்.

மிகவும் சீரியசான ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம், மீதமிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் மிகவும் உணர்ச்சிகரமானவை என்பது நிச்சயம்.

இரு அணியினருக்கும் இடையே நிச்சயம் பதற்றம் அதிகரித்துள்ளது, ஆனால் இதனை 2008 (ஹர்பஜன்-சைமண்ட்ஸ்) சர்ச்சையுடன் ஒப்பிடக் கூடாது.

இரு அணியினரும் கடந்த போட்டியை மறந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறேன், மீண்டும் வெற்றி தோல்வியை ராஞ்சியில் டாஸ் தீர்மானிக்காது என்று நம்புவோமாக.

இவ்வாறு எழுதியுள்ளார் மிட்செல் ஜான்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x