Published : 25 Feb 2014 10:19 AM
Last Updated : 25 Feb 2014 10:19 AM
வெற்றி பெற்றால் பாராட்டுவார்கள், தோல்வியடைந்தால் குறை சொல்வார்கள் என்று ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தலைமை வகித்துள்ள விராட் கோலி கூறியுள்ளார்.
காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து கேப்டன் தோனி விலகியுள்ளார். இதையடுத்து துணை கேப்டனாக இருந்த விராட் கோலி இப்போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த கோலி கூறியது: நான் இந்த ஒரு போட்டிக்கு மட்டும்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளேன். இது ஒரு அணியை தொடர்ந்து வழி நடத்துவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. வெற்றி பெற்றால் புகழ்ந்து தள்ளுவீர்கள், தோல்வியடைந்தால் குறை கூறுவீர்கள். இதுவும் இந்த விளையாட்டின் ஒரு பகுதிதான்.
அணியின் கேப்டனாகத் தேவையான முமு அனுபவத்தையும் பெற்றுவிட்டேன் என்று கூற முடியாது. இதற்கு முன்பு இதுபோல கேப்டனாக வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதுவரை 8 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளேன். ஆனால் இப்போது பெரிய போட்டிக்காக அணிக்கு தலைமை வகிக்கிறேன்.
இது மிகவும் கடினமாக பணிதான். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் அப்போது பாராட்டுகளும் கிடைக்கும். அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அணியில் பல இளம் வீரர்களும், சில அனுபவமிக்க வீரர்களும் உள்ளனர். மிகவும் நம்பிக்கையுடன் சவால்மிக்க இப்போட்டியில் களமிறங்குகிறேன் என்றார்.
முக்கிய எதிரணியாகக் கருதப்படும் பாகிஸ்தானுடன் மோதுவது குறித்த கேள்விக்கு, சாம்பியன் கோப்பையை கைப்பற்ற வேண்டும். எல்லா போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ஒரு அணிக்கு எதிராக மட்டும் சிறப்பாக விளையாடி வெல்ல வேண்டும் என்று களமிறங்குவது இல்லை.
அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி சற்று நெருக்கடி உள்ளதாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் அனைத்து அணிகளையும் ஒரே நோக்கில்தான் எதிர்கொள்வோம் என்றார் கோலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT