Published : 24 Jul 2016 11:20 AM
Last Updated : 24 Jul 2016 11:20 AM
ஆன்ட்டிகுவா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான நேற்று மே.இ.தீவுகள் தங்கள் முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பிறகு ஃபாலோ ஆனிலும் 1 விக்கெட்டை இழந்து 21 ரன்கள் எடுத்துள்ளது.
மிகவும் மெதுவான பிட்சில், பேட்ஸ்மென்களை வீழ்த்தக் கடினமான பிட்சில் மொகமது ஷமி மிக அருமையாக வீசினார். இதனால்தான் தோனி, விராட் கோலி, இந்திய அணி நிர்வாகம் மொகமது ஷமி மீது இத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளனர். இவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்த பிறகு உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஃபாலோ ஆனில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா, முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய கே.சி.பிராத்வெய்ட்டை அருமையான ஸ்விங்கரில் எல்.பி.செய்தார்.
மொகமது ஷமி முன்பு ஓடி வரும் போது லாங் ஸ்டெப்களை வைத்து ஓடிவருவா, இது அவரது பிரச்சினையாகக் கண்ட பயிற்சியாளர்கள் அவரை ஷார்ட் ஸ்டெப்களில் ஓடிவரச் செய்தனர். இதனால் லைன் மற்றும் லெந்த், வேகம் என்று அவர் சமரசம் எதுவும் இல்லாமல் வீச முடிந்தது. நிறைய ஓவர்களையும் வீச முடிந்தது.
இரவுக்காவலன் தேவேந்திர பிஷூவை வீழ்த்த இந்திய பவுலர்கள் திணறினர். 46 பந்துகள் பிஷூ வெறுப்பேற்றினார். கே.சி.பிராத்வெய்ட் (74) அதிகபட்ச ஸ்கோரை எடுத்தார். ஆனால் இவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது. தொடக்கத்தில் பேக்வர்ட், பார்வர்ட் ஷார்ட் லெக் பீல்டர்களை வைத்துக் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் பிராத்வெய்ட்டின் நெஞ்சுக்கு பந்தை எகிறச் செய்த போது இவரது தடுப்பாட்டம் சரியாக அமையாமல் பந்து காற்றில் சென்றாலும் பீல்டர்களுக்கு அருகில் செல்லாததால் பிழைத்தார். பிஷூ அடிக்கடி ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் பீட் ஆனாரே தவிர ஆட்டமிழக்கவில்லை.
அப்போதுதான் அஸ்வின் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அமித் மிஸ்ராவுக்கு கோலி பந்தைக் கையில் கொடுத்தார், மிஸ்ராவும் பிஷூ விக்கெட்டை வீழ்த்தினார். மிகவும் பொறுமையாக ஆடி வெறுப்பேற்றிய பிஷூவே பொறுமை இழந்து ஸ்வீப் ஆட முயன்ற போது கால் கிரீசுக்கு வெளியே சென்றது, ஸ்டம்ப்டு ஆனார்.
தொடக்கத்தில் ஷமிக்கு விக்கெட் விழாதது துரதிர்ஷ்டமே. பேட்ஸ்மென் தடுப்பாட்ட மூடில் இருக்கும் போது கூட ஷமி அச்சுறுத்தினார். டேரன் பிராவோ ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தொட முயன்று ஷமியிடம் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு மர்லன் சாமுவேல்ஸ் பேக்ஃபுட்டிலேயே ஆட முடிவெடுத்தார். இதனால் பவுலர்களுக்கு லைன் அண்ட் லெந்த்தில் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் சாமுவேல்ஸ் முன்னால் வந்தோ, முன்னங்காலை குறுக்காகப் போட்டோ ஆட முடிவெடுக்கவில்லை, இருந்த இடத்திலிருந்தே ஆடிக்கொண்டிருந்ததால் ஷமியின் ஒரு பந்து எட்ஜ் எடுக்க ஆட்டமிழந்தார். ஷமியின் 50-வது டெஸ்ட் விக்கெட் சாமுவேல்ஸ்.
இதே ஓவரின் 6-வது பந்தில் பிளாக்வுட்டிற்கு ஆக்ரோஷமான ஷார்ட் பால் ஒன்றை வீச மட்டையின் விளிம்பில் பட்டு ரஹானேயிடம் கேட்ச் ஆனது. 2 விக்கெட்டுகள் மற்றும் மெய்டன். 92/5 என்ற நிலையிலிருந்து கே.சி.பிராத்வெய்ட், ராஸ்டன் சேஸ் கொஞ்சம் நிலை நிறுத்தமுயன்றனர். 47 ரன்களை மேலும் சேர்த்தனர், ஆனால் அப்போதுதான் உமேஷ் யாதவ் வைடு ஆஃப் த கிரீசிலிருந்து பந்தை உள்ளே கொண்டு வந்து கடினமான கோணங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார், சேஸ் ஷார்ட் பிட்ச் பந்தை நேராக மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். அதே போல் 74 ரன்களில் இருந்த பிராத்வெய்ட்டிற்கு வைடு ஆஃப் த கிரீசிலிருந்து கடுமையான ஷார்ட் பிட்ச் பவுன்சர் ஒன்றை வீச பந்து அவரது முகத்துக்கு எகிற பந்து கிளவ்வில் பட்டு சஹாவிடம் கேட்ச் ஆனது, வெறித்தனமான பந்து.
பால்வடியும் முக விக்கெட் கீப்பர் டவ்ரிச்சும், ஹோல்டரும் ஸ்கோரை 213 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அப்போது ஹோல்டர், யாதவ்வின் அவுட் ஸ்விங்கரை எட்ஜ் செய்ய சஹாவின் 6-வது கேட்ச் ஆனது, இதன் மூலம் 6 கேட்ச்களுடன் தோனி, சையத் கிர்மானி சாதனையை சமன் செய்தார் சஹா. ஹோல்டர் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தே கார்லோஸ் பிராத்வெய்ட், உமேஷ் யாதவ்வின் வைடு ஆஃப் த கிரீஸ் இன்ஸ்விங் பந்தை வேடிக்கைப் பார்க்க ஸ்டம்பை தொந்தரவு செய்தது. பவுல்டு ஆனார். டவ்ரிச் 79 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். கேப்ரியலை மிஸ்ரா பவுல்டு செய்தார். மே.இ.தீவுகள் 243 ரன்களுக்குச் சுருண்டது யாதவ் 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், மொகமது ஷமி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் மிஸ்ரா 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, அஸ்வின் 17 ஓவர்களில் 43ரன்களை கொடுத்து கட்டுப்படுத்தும் வேலையைச் செய்தார்.
ஃபாலோ ஆனில் கே.சி. பிராத்வெய்ட் இசாந்த்சர்மா ஒரு பந்தை உள்ளே கொண்டு வர கே.சி.பிராத்வெய்ட் எல்.பி. ஆனார். ஆட்ட முடிவில் சந்திரிகா 9 ரன்களுடனும் டேரன் பிராவோ 10 ரன்களுடனும் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT