Published : 14 Feb 2014 11:25 AM
Last Updated : 14 Feb 2014 11:25 AM

192 ரன்களுக்கு சுருண்டது நியூஸி.: இஷாந்த் 6 விக்கெட்

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.

வெல்லிங்டனில் இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. சென்ற டெஸ்ட் போட்டியில் நியூஸி. முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்ததால், இந்த போட்டியிலும் அந்த அணியே ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

துவக்கத்தில் நிதானம் காண்பித்த நியூஸி. அணி, போட்டியின் 9-வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. துவக்க வீரர் ருதர்ஃபோர்ட் இஷாந்த் சர்மாவின் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இஷாந்தின் தனது அடுத்த 2 ஓவர்களில் முறையே ஃபுல்டன் மற்றும் லதாம் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார்.

சென்ற போட்டியில் இரட்டைச் சதம் அடித்த நியூஸிலாந்து அணியின் கேப்டன் மெக்கல்லம் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், முகமது ஷமியின் பந்தில் ஜடேஜாவிடக்கு எளிதான கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 45 ரன்களுக்கு 3 விக்கெட் என இருந்தது.

தொடர்ந்து களமிறங்கிய அதிரடி பேட்ஸ்மேன் கோரே ஆண்டர்சன், வில்லியம்சன்னுடன் இணைந்து, ரன் குவிக்க ஆரம்பித்தார். உணவு இடைவேளைக்கு பின்னும் இந்த ஜோடியின் ஆட்டம் தொடர்ந்தது. 43 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடித்த ஆண்டர்சன், 24 ரன்கள் எடுத்து இஷாந்த் சர்மாவின் பந்தில் வெளியேறினார். தனது அடுத்த ஓவரிலேயே இஷாந்த் வாட்லிங்கை டக் அவுட்டாக்கினார்.

100 ரன்களுக்குள் 6 விக்கெட் வீழ்ந்திருந்த நிலையில் வில்லியம்சனுடன் கைகோர்த்த நீஷம் அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தார். ஸ்கோர் 100-ஐ தாண்டியது. ஆனால் இந்த ஜோடியும் வெகு நேரம் நீடிக்கவில்லை. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த வில்லியம்சன், 47 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவர்களில் நீஷம் 33 ரன்களுக்கு ஷமியால் வெளியேற்றப்பட்டார். தேநீர் இடைவேளையின் போது நியூஸி. 166 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தேநீர் இடைவேளைக்கு பின்பு, சவுத்தி வெகமாக ரன் குவிக்க முற்பட்டார். ரவீந்த்ர ஜடேஜாவின் ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அடுத்த ஓவரில் 32 ரன்களுக்கு அவரும் ஆட்டமிழக்க, இஷாந்த் தனது 6-வது விக்கெட்டைப் பெற்றார். இதனால் நியூஸி. அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இன்றைய போட்டியில், மீதமுள்ள 4 விக்கெட்டுகளையும் முகமது ஷமி வீழ்த்தியிருந்தார். அதேபோல, 51 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இஷாந்த் சர்மாவுக்கு, இதுவரை அவர் ஆடிய ஆட்டங்களில் இது சிறந்த பந்துவீச்சாகும். இவர் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்தியாவுக்கு முரளி விஜய் வழக்கம் போல ஏமாற்றம் அளித்தார். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே, சவுத்தியின் பந்தில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் இணைந்த சதீஸ்வர் புஜாராவும், ஷிகர் தவாணும், பொறுப்பாக ஆடி ரன் சேர்க்க ஆரம்பித்தனர். ஒரு பக்கம் புஜாரா நிதானமாக ஆட, ஷிகர் தவாண் வேகமாக ரன் சேர்த்து வந்தார்.

71 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் தனது அரை சதத்தை தவாண் கடந்தார்.

இன்றைய ஆட்டம் முடியும் வரை இந்த ஜோடி நிலைத்து ஆடும் என இந்திய ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போது புஜாரா 19 ரன்களுக்கு போல்ட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காத இந்தியா, 100 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளோடு இன்றைய நாளை நிறைவு செய்தது. நியூஸி. அணியை விட 92 ரன்கள் மட்டுமே இந்தியா பின் தங்கியுள்ளதால், நாளை முழுவதும் ஆடி அதிக ரன்கள் முன்னிலை பெறவே முற்படும் எனத் தெரிகிறது. பந்துவீச்சுக்கு சாதகமான வெல்லிங்டன் மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் திறமை எவ்வளவு தூரம் வெளிப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x