Published : 17 Feb 2017 10:55 AM
Last Updated : 17 Feb 2017 10:55 AM
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் நபோலி அணியை வீழ்த்தியது.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 8-வது நிமிடத்தில் நபோலி அணி முதல் கோலை அடித்தது. இந்த கோலை அந்த அணியின் வீரர் லாரன்சோ இன்சைனே 40 அடி தூரத்தில் அற்புதமாக அடித்தார். இதனால் நபோலி 1-0 என முன்னிலை பெற்றது.
ஆனால் அந்த அணியின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்க வில்லை. அடுத்த 11-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி பதிலடி கொடுத்தது. டேனி கார்ஜ வாலிடம் இருந்து கிராஸை பெற்ற கரிம் பென்சிமா கம்பத்தின் அருகே வைத்து தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
27-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால் டோவுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் உதைத்த பந்து கோல் கம்பத்தின் மேலாக சென்று ஏமாற்றம் அளித்தது. முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலை வகித்தது.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே ரியல்மாட்ரிட் தனது 2-வது கோலை அடித்தது. இந்த கோலை டோனி குரூஸ் அடிக்க ரியல்மாட்ரிட் 2-1 என முன்னிலை வகித்தது.
அடுத்த 5-வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட் மேலும் ஒரு கோல் அடித்தது. இந்த கோலை கேஸ்மிரா அடித்து அசத்தினார். இதன் பின்னர் நபோலி அணி கடைசி வரை போராடியும் மேற்கொண்டு கோல்கள் அடிக்க முடியாமல் போனது. முடிவில் ரியல்மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரு அணிகளும் 2-வது கட்ட ஆட்டத்தில் அடுத்த மாதம் 7-ம் தேதி மோதுகின்றன. இதில் அடிக்கப்படும் கோல்களின் சராசரி விகிதப்படி வெற்றி பெறும் அணி கால் இறுதிக்கு முன்னேறும். கால் இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் நபோலி அணி அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
இந்த வெற்றி குறித்து ரியல்மாட்ரிட் அணியின் மேலாளர் ஜிடேன் கூறும்போது, “நாங்கள் மிகச் சிறந்த ஆட்டத்தை விளை யாடி உள்ளோம். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோல் வாங்கியது அவமானமாக இருந் தாலும் விரைவிலேயே அதற்கு பதிலடி கொடுத்து சமன் செய்தோம். அதன் பின்னர் ஆதிக்கம் செலுத்தி முடிவை பெற்றுள்ளோம்’’ என்றார்.
நபோலி அணியின் பயிற்சியாளர் மவுரிஸியோ ஷார்ரி கூறும்போது,“ரியல் மாட்ரிட் அணி கடந்த 3 மாதங்களில் தற்போதுதான் சிறந்த ஆட்டத்தை தெளிவாக வெளிப்படுத்திஉள்ளது. நாங்கள் எங்கள் திறனுக்கு தகுந்தபடி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
நாங்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் சென்றடையும் தூரம் வெகுதூரம் இல்லை. 2-வது கட்ட ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் அதில் இருந்து முன்னேறி செல்வோம்’’ என்றார்.
பேயர்ன் முனிச் வெற்றி
சாம்பியன்ஸ் லீக் தொடரில் முனிச் நகரில் நடைபெற்ற ஆட்டத் தில் பேயர்ன் முனிச் -ஆர்ஷெனல் அணிகள் மோதின. இதில் பேயர்ன் முனிச் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அந்த அணி தரப்பில் தியாகோ அல்கேன்ட்ரா இரு கோல்கள் அடித்து அசத்தினார். ரோபென், லீவான்டோவ்ஸ்கி, முல்லர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆர்ஷெனல் அணி தரப்பில் அலெக்சிஸ் சான்செஸ் ஒரு கோல் அடித்தார். இரு அணிகளும் தங்களது 2-வது கட்ட ஆட்டத்தில் மார்ச் 8-ம் தேதி மோதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT