Published : 03 Mar 2016 02:49 PM
Last Updated : 03 Mar 2016 02:49 PM
நியூஸிலாந்து முன்னாள் கேப்டனும், உலகின் சிறந்த பேட்ஸ்மென்களுள் ஒருவருமான மார்ட்டின் குரோவ் நீண்டநாள் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமையன்று காலமானார்.
மார்ட்டின் குரோவுக்கு வயது 53 மட்டுமே. இவர் நீண்ட காலமாக புற்று நோயினால் அவதியுற்று வந்தார். இந்நிலையில் வியாழனன்று வெலிங்டனில் காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பவுன்ஸி பிட்ச்களில் மார்ட்டின் குரோவ்வின் ஆட்டம் மிகவும் அற்புதமானது. அத்தகைய பிட்ச்களில் உலகில் பேட்டிங் தவிர வேறொன்றும் எளிதானதல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடியது அவரது பேட்டிங் ஸ்டைல்.
77 டெஸ்ட் போட்டிகளிலும் 143 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ள குரோவ், டெஸ்ட் போட்டிகளில் 5,444 ரன்களை 45.36 என்ற சராசரியில், 17 சதங்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 299 ரன்கள். 143 ஒருநாள் போட்டிகளில் 4704 ரன்களை 38.55 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள் 34 அரைசதங்கள். டெஸ்ட் போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டிகளில் 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார், ஒருநாள் போட்டியில் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 107 நாட் அவுட் ஆகும்.
இவருக்கு புகழாஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ளே கூறும்போது, “மாடர்ன் கிரேட். கிரிக்கெட் ஆளுமை மார்ட்டின் குரோவ் இப்போது நம்மிடையே இல்லை. அருமையான ஒரு கிரிக்கெட் மூளை, அன்பான இதயம்” என்றார்.
1992 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை இப்போது பிரெண்டன் மெக்கல்லம் எப்படி வழிநடத்தி உலக அணிகளை அச்சுறுத்தினாரோ அப்படி அணியை கட்டமைத்து அரையிறுதி வரை கொண்டு வந்தார். தென் ஆப்பிரிக்காவின் ஹேன்சி குரோனியே போல் புதுவிதமான பரிசோதனை முயற்சிகளுக்கு கேப்டன்சியில் அஞ்சா நெஞ்சர் இவர். இன்று தோனி முதல் ஓவரிலேயே அஸ்வினைக் கொண்டு வந்தால் நாம் ஆகாஓகோ என்கிறோம், ஆனால் 1992 உலகக்கோப்பையில் அச்சுறுத்தும் தொடக்க வீரர்களுக்கு எதிராக குட்டி நியூஸி மைதானங்களில் தீபக் படேல் என்ற ஆஃப் ஸ்பின்னரை முதல் ஓவரை வீசச் செய்தவர் மார்டின் குரோவ். அதே போல் மார்க் கிரேட்பேச் ஒரு அச்சுறுத்தும் அதிரடி தொடக்க வீரராக உருவாக்கப்பட்டது மார்டின் குரோவினால் என்றால் அது மிகையாகாது.
மார்ட்டின் குரோவ். இவரது பேட்டிங்கைப் பார்த்தால் பேட்டிங் எவ்வளவு பெர்ய ஒர் கலை என்பது புரியவரும். கிரீஸில் நிமிர்ந்து நின்று கால்களை அற்புதமாக நகர்த்தி ஸ்பின், வேகப்பந்து என்று எதிலும் நிபுணத்துவம் காட்டியவர் மார்டின்.
தனது அண்ணன் ஜெஃப் குரோவுக்கு முன்னமேயே தனது 19-வது வயதில் 1982-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்குள் நுழைந்தார் மார்டின். அப்போதே இவரைப் பற்றிய செய்தி என்னவெனில் பாரி ரிச்சர்ட்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர் ஆகியோரின் கலவை என்று மார்டின் குரோவ் வர்ணிக்கப்பட்டார்.
பிப்ரவரி 1982-ல் இந்த இளம் மார்டின் குரோவுக்கு அன்று பேசின் ரிசர்வ் மைதானத்தில் பவுன்சர்களே. தாம்சன் அப்போது தனது அச்சுறுத்தல் நிலையிலிருந்து காயங்களால் சற்றே தொய்வடைந்திருந்த காலம், ஆனால் மார்டின் குரோவின் செல்வாக்கு அவரையும் தூண்டியது பவுன்சர் ஒன்றை வீச மார்டின் குரோவ் தலையிலிருந்து ஹெல்மெட் கழன்றது.
அந்தத் தொடரில் 9,2,9 என்று 20 ரன்களையே அவர் எடுத்தார். இவ்வாறாக தொடங்கிய மார்டின் குரோவ் பிறகு பவுன்ஸ் பிட்சில் வேகப்பந்து வீச்சின் மிகவும் அனாயாசமான வீரராக உருவெடுத்தார். வக்கார் யூனிஸ் தான் வீசிய பேட்ஸ்மென்களில் மார்டின் குரோவ்தான் சிறந்தவர் என்று ஒரு முறை கூறினார்.
ஆண்ட்ரூ ஜோன்ஸ் என்பவருடன் இணைந்து 467 ரன்களைச் சேர்த்தது அப்போது டெஸ்ட் வரலாற்றில் சிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும்.
1984-ல் நியூஸிலாந்து அணி இங்கிலாந்து வந்த போது மார்டின் தனது முதல் சதத்தை எடுத்தார். 2-வது சதம் ஓராண்டுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்டது, ஆனால் அதன் பிறகு ரன்குவிப்பில் ஈடுபட்டார் மார்டின்.
அச்சுறுத்தும் மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர்களையே அச்சுறுத்திய 188 ரன்களையும் பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வச்செய்த டெஸ்ட் தொடரில் மீண்டும் அந்த அணிக்கு எதிராக ஒரு 188 ரன்களையும் மார்ட்டின் குரோவ் அடித்த போது உலகம் இவரை அறியத் தொடங்கியது. ரிச்சர்ட் ஹேட்லி இந்தத் தொடரில்தான் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 33 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மார்டின் குரோவின் மனைவி லொரைன் டவ்னிஸ் 1983-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT