Published : 06 Jun 2016 02:52 PM
Last Updated : 06 Jun 2016 02:52 PM
கயானாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய-மே.இ.தீவுகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் 2-வது போட்டியில் மே.இ.தீவுகள் படுதோல்வியைச் சந்தித்தது.
டாஸ் வென்ற ஸ்டீவ் ஸ்மித் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்தார். அந்த அணியின் வளரும் நட்சத்திரம் ஆடம் ஸாம்ப்பா மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 116 ரன்களுக்குச் சுருண்டது. மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகளில் வார்னர் 55 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 25.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா 117/4 என்று போனஸ் புள்ளியுடன் வென்றது. சுனில் நரைன் மீண்டும் அற்புதமாக வீசி 10 ஓவர்கள் 2 மெய்டன்களுடன் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மே.இ.தீவுகளில் அந்த அணி எடுத்த மிகக்குறைந்த ரன் எண்ணிக்கையாகும் இது. ஆஸ்திரேலியா இலக்கைத் துரத்துய போது ஏரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஓரளவுக்குத் தொடங்கி பிறகு ஆட்டமிழந்தனர். கிளென் மேக்ஸ்வெல் தான் எதிர்கொண்ட 2 வது பந்திலேயே டக் அவுட் ஆனார். சுனில் நரைனின் அருமையான பந்தில் மேக்ஸ்வெல் பவுல்டு ஆனார்.
வார்னர் ஐபிஎல் பார்மை தொடர்ந்தார். அவர் 55 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 55 நாட் அவுட். மிட்செல் மார்ஷ் 9 நாட் அவுட். 7 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற சிறிய சரிவுக்குப் பின் இருவரும் வெற்றியை உறுதி செய்தனர்.
அன்று தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய மே.இ.தீவுகள்தானா இது என்ற கேள்வியை எழுப்புமாறு ஒருநாளில் இந்த அணி முற்றிலும் வேறு ஒரு தோற்றத்தை அளித்தது.
70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள், பிறகு 91 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற மீள முடியா சரிவுக்குச் சென்றது. லயன், ஸாம்பாவின் ஸ்பின்னை எதிர்கொள்ள முடியவில்லை. ஆந்த்ரே பிளெட்சர், ஸ்டார்க்கின் வைடு பந்தை நேராக மேக்ஸ்வெல்லிடம் பாயிண்டில் அடிக்க கேட்ச் ஆனது. பிறகு மீண்டும் பந்து வீச வந்த போது மே.இ.தீவுகளில் அதிக பட்ச ஸ்கோரான 22 ரன்களி எட்டிய சார்லஸை அருமையான ஸ்விங்கிங் யார்க்கர் மூலம் காலி செய்தார்.
டேரன் பிராவோ 3 பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை அளித்த நிலையில் மிட்செல் மார்ஷிடம் வீழ்ந்தார். நேதன் லயன் பந்து வீச்சில் சாமுவேல்ஸ், பொலார்ட் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். அவர் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிராத்வெய்ட், ஹோல்டர், சுனில் நரைன் ஆகியோரை ஸாம்பா வீழ்த்தினார். 32.3 ஓவர்களில் 116 ரன்களுக்கு மே.இ.தீவுகள் சுருண்டது.
ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா சிறப்பாக ஆடி 27 ரன்களை அடித்தார். ஆனால் சுலைமான் பென் சுழலுக்கு வீழ்ந்தார். ஸ்மித் 6 ரன்களில் நரைனிடம் எல்.பி.ஆனார், ரிபிளேயில் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லுமாறு தெரிந்தது. மேக்ஸ்வெல்லுக்கு சுனில் நரைன் அருமையான ஆஃப் ஸ்பின்னரை வீசினார், அவரும் மிகவும் தளர்வான முறையில் அதை ஆடினார். இதனால் பவுல்டு ஆகி வெளியேறினார்.
அதன் பிறகு 92/4 என்ற நிலையிலிருந்து வார்னர், மார்ஷ் வெற்றியை உறுதி செய்தனர். ஆட்ட நாயகனாக நேதன் லயன் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT