Published : 03 Sep 2018 09:52 AM
Last Updated : 03 Sep 2018 09:52 AM

விராட் கோலி, ரஹானே போராட்ட சதக்கூட்டணி வீண்: மொயின் அலி பந்து வீச்சில் தொடரை வென்றது இங்கிலாந்து

சவுத்தாம்டனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டி 4-ம் நாளில் இந்தியத் தோல்வியில் முடிந்தது. வெற்றி இலக்கு 245 ரன்களை எதிர்த்து ஆடிய இந்திய அணி 69.4 ஓவர்களில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து தொடரை இங்கிலாந்து 3-1 என்று கைப்பற்றியது.

சதக்கூட்டணி அமைத்து போராடி அரைசதங்கள் எடுத்த விராட் கோலி, ரஹானே ஆகியோர் விக்கெட்டுகளுடன் ரிஷப் பந்த், ஷமி ஆகியோர் விக்கெட்டுகளையும் மொயின் அலி கைப்பற்றி இந்த டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். இதனால் இவர்தான் ஆட்ட நாயகன்.

கடந்த முறை தோனி கேப்டன்சியில் சென்ற போதும் இதே பிட்சில் மொயின் அலி இந்திய அணியை சுருட்டி பாக்கெட்டில் போட்டுக் கொண்டது நினைவிருக்கலாம்.

வலது கை பேட்ஸ்மென்கள் ஆடும் போது இவருக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு அருமையான ரஃப் ஒன்று பிட்சில் இருந்தது, அதில் பிட்ச் ஆகி பந்துகள் திரும்பின, எழும்பின. இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் எந்த வேகத்தில் இந்தப் பிட்சில் வீசுவது என்று தெரியாமல் 2வது இன்னிங்சில் திணற, மொயின் அலியோ இரண்டு இன்னிங்ஸ்களிலும் பந்தை ஸ்பின் செய்து திருப்புவதில் வெற்றி கண்டார். அஸ்வினை விடவும் வேகம் குறைவாக வீசியதே மொயின் அலியின் வெற்றிக்குக் காரணம்.

முன்னதாக இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸ் காலையில் விரைவில் முடிந்தது. ஸ்டூவர்ட் பிராட் முதல் பந்தையே எட்ஜ் செய்து வெளியேறினார். மொகமது ஷமி இவர் விக்கெட்டைக் கைப்பற்றினார். சாம் கரன் 46 ரன்களில் ரன் அவுட் ஆனார். இங்கிலாந்து 260/8 என்று தொடங்கி 271 ரன்களுக்குச் சுருண்டது. மொகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸில் 86/6 என்ற நிலையிலும் 2வது இன்னிங்ஸில் 92/4 மற்றும் 122/5 என்ற ஆதிக்க நிலையிலிருந்து இந்திய வீச்சாளர்கள் போட்டியைக் கைவிட்டனர்.

இரண்டு ரிவியூக்களையும் இந்திய அணி விரயம் செய்ததால் கடைசியில் இஷாந்த் சர்மா, அஸ்வின் இருவர் எல்.பி.தீர்ப்புகளும் தவறாக இருந்த போதும் ரிவியூ செய்ய முடியவில்லை. இதுவும் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாகும் ஒருவேளை கொஞ்சம் இலக்குக்கு நெருங்கி வந்திருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.

மோசமான தொடக்கமும் கோலி, ரஹானேயின் போராட்டமும்

245 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி ஆடிய போது ஸ்டூவர்ட் பிராட் வெறியுடன் வீசினார், கே.எல்.ராகுல் டக் அவுட் ஆனார். பந்து மிகவும் தாழ்வாக வேகமாக வந்தது, இது போன்ற பந்துகளை ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் ஒருவேளை முன் காலை குறுக்காக நீட்டி அவர் வழக்கம் போல் ஆடியிருந்தால் தப்பித்திருக்க வாய்ப்புண்டு.

ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு பந்தை வேகமாக உள்ளே செலுத்த முதல் இன்னிங்ஸில் அபார சதமெடுத்த புஜாராவும் எல்.பி.ஆகி வெளியேறினார். ஷிகர் தவண் இருமுறை ஆண்டர்சன் பந்தில் எல்.பி. முறையீட்டில் தப்பினார், கடைசியில் 17 ரன்களில் ஆண்டர்சன் தவண் மட்டை வெளிப்புற விளிம்பைப் பிடித்தார் கல்லியில் கேட்ச் ஆனது. 22/3 என்ற நிலையில் தோல்வி முகம் காட்டியது.

ஆனால் விராட் கோலி தனத் உறுதியை விடவில்லை, ரஹானேவும் உறுதியுடன் ஆடினார். குறிப்பாக கோலி கண்களிலும் உடல்மொழியிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை தெரிந்தது, ஆஃப் திசையில் நகர்ந்து ஸ்விங் பந்துகளையும், ஸ்பின் பந்துகளையும் நன்றாக எதிர்கொண்டார், அவர் அடித்த ஷாட்கள் பல பவுண்டரி அருகில் இங்கிலாந்து வீரர்களால் பீல்ட் செய்யப்பட்டது, ரஹானே, கோலி இன்னிங்சின் முக்கிய அம்சம் அவர்கள் எடுத்த விரைவுகதி சிங்கிள்கள். இதனால் ஸ்ட்ரைக்கை அருமையாக சுழற்சியில் விட்டனர்.

விராட் கோலி தடவாமல் இல்லை. இருமுறை அவர் 9 மற்றும் 15 ரன்களில் தப்பினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் பந்து வீச வந்தபோது கடுமையாக பீட்டன்கள் ஆனார். ஆனால் குறிக்கோளுடனும் நோக்கத்துடனும் இருந்தார் என்பதுதான் முக்கியம். ஆண்டர்சன் ரிவர்ஸ் ஸ்விங் இவரைக் கொஞ்சம் படுத்தி எடுத்தது. ஆனாலும் 114 பந்துகளில் அரைசதம் எட்டினார். மேலும் இந்தத் தொடரில் 500 ரன்களைக் கடந்தார்.

ரஹானே இன்னொரு முனையில் மொயின் அலியின் பந்துகளுக்கு நல்ல உத்தியைக் கடைபிடித்தார், சில வேளைகளில் நன்றாக பின்னால் சென்று ஸ்பின்னைக் குலைத்தார், சில வேளைகளில் முன்னால் வந்து ஆடினார்.

இருவரும் சேர்ந்து 101 ரன்களைச் சேர்த்த போது இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால் மொயின் அலி அப்படி நினைக்க வேண்டாம் என்றார். இன்னிங்சின் 51வது ஓவரை அலி வீச 5வது பந்து ரஃபில் பட்டுத் திரும்பியது கோலி மட்டையைக் கொண்டு சென்றார் பந்து திரும்பி அவரது கிளவ்வில் பட்டு ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது, இதற்கு முன் குக் கேட்சை விட்டார், ஆனால் இம்முறை தவறு செய்யவில்லை. விராட்டை 58 ரன்களில் வீழ்த்தினார் மொயின் அலி. இதில் 4 பவுண்டரிகளை அடித்திருந்தார் கோலி. போராட்டம் முடிவுக்கு வர இங்கிலாந்துக்கு மீதமிருந்தது சம்பிரதாயங்களை முடித்து வைப்பதுதான்.

ஹர்திக் பாண்டியாவுக்கு மிக அருமையான பந்தை வீசினார் ஸ்டோக்ஸ் ஆட முடியாத பந்து அது. தையல் தரையில் பட எகிறியது, பாண்டியாவின் உடல் நிலையை மாற்றியது, மட்டையின் விளிம்பில் அதுவே பட்டுச் சென்று கேட்ச் ஆனது, பாண்டியா ஸ்கோரரைத் தொந்தரவு செய்யவில்லை.

ரிஷப் பந்த் அணுகுமுறை மிகச்சரியாக அமைந்தது 12 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுத்தார். ஆனால் அதே போல் மொயின் அலியை ஆக்ரோஷமாக ஆடும் முயற்சியில் கவர் திசையில் தூக்கி அடித்து கேட்ச் ஆனார்.

ரஹானே தன் அரைசதத்தை எடுத்து ஒரேயொரு பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் அலியின் ஒரு பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ரஃபில் பட்டு கடுமையாகத் திரும்ப ரஹானே பிளிக் மாட்டவில்லை, கால்காப்பில் பட தர்மசேனா கையை உயர்த்தினார், ரிவியூவும் விரயமானது.

அஸ்வின் 36 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக சாம் கரன் பந்தில் எல்.பி.ஆனார், இது நாட் அவுட். ஆனால் ரிவியூ இல்லை, எனவே நடுவர் தீர்ப்பு இங்கிலாந்தின் வெற்றிக்கொண்டாட்டத்தை உறுதி செய்தது.

அதே போல் இஷாந்த் சர்மாவும் ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டார், பந்து ஸ்டம்பில் படாது என்பது ரீப்ளேயில் தெரிந்தது. இந்த இரண்டும் படுமோசமான தீர்ப்பு. டெய்ல் எண்டர்கள் என்றால் கையை உயர்த்தலாம் என்ற நடுவர்களின் மன நிலை மாறுவதெப்போது? மொகமது ஷமி 8 ரன்களுக்கு அலியின் 4வது விக்கெட்டாக வீழ்ந்தார். மொயின் அலி இந்தப் போட்டியில் 134 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சாம் கரன், பிராட் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். இங்கிலாந்து தொடரில் 3-1 என்று முன்னிலை பெற்றது.

உண்மையில் சாம் கரனுக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும். காரணம் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை தன் 78 ரன்களினால் மீட்டதோடு விராட் கோலி அருமையாக ஆடி வந்த போது வெளியேற்றினார், 2வது இன்னிங்ஸிலும் சாம் கரன் 46 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி ஒரு குறிப்பிட்ட செஷனில் டெஸ்ட்டைத் தொலைத்தது என்றே கூற வேண்டும். இதே பிட்சில் அவர்களும் 245 ரன்களை விரட்ட கஷ்டப்பட்டிருப்பார்கள். இங்கிலாந்து மீண்டும் ஒரு டெஸ்ட் தொடரை தங்கள் சொந்த மண்ணில் கைப்பற்றியதோடு, இந்த இந்திய அணி வித்தியாசமானது என்ற பயணத்துக்கு முந்தைய மாயா சொல்லாடல்களை முறியடித்தது இங்கிலாந்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x