Published : 22 Sep 2018 08:23 AM
Last Updated : 22 Sep 2018 08:23 AM

வங்கதேசத்தை நொறுக்கிய ஜடேஜாவின் துல்லியம், ரோஹித் சர்மாவின் அபார பேட்டிங்

துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2018-ன் சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்திய அணி நொறுக்கியது. 173 ரன்களுக்கு வங்கதேசத்தைச் சுருட்டிய இந்திய அணி பிறகு இலக்கை 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து எளிதாக எட்டியது.

ஓவல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விக்கெட்டுகளையும் எடுத்து பேட்டிங்கிலும் நொறுக்கினார், இது அவருக்கு மீட்டெழுச்சியாகும் நேற்று வங்கதேசத்தை தனது 4/29 பந்து வீச்சினால் நொறுக்கினார்.

வங்கதேசம், ஹாங்காங், ஆப்கான் (இந்தப் பட்டியலில் ஆப்கானைச் சேர்க்க முடியுமா என்பது சந்தேகமே) நேபாளம், அயர்லாந்து போன்ற மீன்குஞ்சுகளுக்கு எதிராக ஜடேஜாவை ஒரு சக்தியாகப் பயன்படுத்தலாம், குறிப்பாக இந்தியபிட்ச்களை ஒத்த துணைக்கண்ட பிட்ச்களுக்கும் பயன்படுவார். இவர் மீன்குஞ்சுகளை உண்பவர் (devouver of minnows).

ரோஹித் சர்மாவும் பேட்டிங்கில் கொஞ்சம் கொஞ்சமாக சிறிய அணிகளின் தாதாவாகி வருகிறார்.

டாஸ் வென்ற ரோஹித் சர்மா மிகச்சரியாக பீல்டிங்கைத் தேர்வு செய்ய தமிம் இக்பால் கை உடைந்ததினால் ஆட முடியாத வங்கதேச அணியே உடைந்து காணப்பட்டது. 7,8 நிலை வீரர்களான மோர்டசா (26), மெஹதி ஹசன் மிராஜ் (42) ஆகியோரது 66 ரன்கள் கூட்டணியினால் வங்கதேசம் 49.1 ஓவர் வரை தாக்குப் பிடித்து 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் 104 பந்து 83 ரன்களினால் 174/3 என்று 36.2 ஓவர்களில் வெற்றியை எளிதில் எட்டியது.

10வது ஓவரில் ஜடேஜா பந்து வீச அழைக்கப்பட்டார். முன்னதாக புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் லிட்டன் தாஸ், நஸ்முல் ஹுசைன் ஆகியோரை வீட்டுக்கு அனுப்பியிருந்தனர். ஜடேஜாவை இரண்டு பளார் பளார் பவுண்டரி மூலம் ஷாகிப் அல் ஹசன் வரவேற்றார். கவர் திசையில் ஒரு அறை பிறகு ஒரு அரக்க ஸ்வீப் ஷாட்.

பிறகு ஷிகர் தவணை பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் நிறுத்தினர். ஷாகிபுக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார் ஜடேஜா, மீண்டும் ஸ்வீப் ஆடி பொறியில் சிக்கி அதே இடத்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

பிறகு வங்கதேசத்தின் இந்த அணியின் சிறந்த பேட்ஸ்மென் மொகமது மிதுனை தனது டிபிகல் பந்தான மிடில் ஸ்டம்பில் வேகமாக வீசிய பந்தில் எல்.பி.ஆக்கினார், மிதுன் ரிவியூ வீண். முஷ்பிகுர் ரஹிம் 21 ரன்களுக்கு நன்றாக ஆடி கொண்டிருந்தார், இந்தப் பிட்ச்களில் 50 ஒவர்கள் வரை நிற்க வேண்டும், இடையில் ரன் விகிதத்தை உயர்த்த மட்டையைச் சுழற்றினால் காலிதான், அப்படித்தான் முஷ்பிகுர் ஷார்ட் தேர்ட்மேன் நிறுத்தியதைப் பார்தத பிறகும் முஷ்பிகுர் ஜடேஜா பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி கேட்ச் ஆனார்.

மஹ்முதுல்லா 25 ரன்களுக்கு பொறுமையாக ஆடியவர், புவனேஷ்வர் குமார் பந்தில் மட்டையில் பட்டு பின் தொடையில் வாங்கிய பந்துக்குத் தவறாக எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டார், ரிவியூ இல்லை. பிறகு மோசடக் ஹுசைனும் 12 ரன்களில் ஜடேஜாவின் அருமையான வேகத்தை மாற்றிய பந்திற்கு ஸ்வீப் ஆட முயன்று தோனியிடம் சிக்கி வெளியேற வங்கதேசம் 101/7 என்று மடிந்தது. ஜடேஜாவின் துல்லியப் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை அவரிடம் பறிகொடுத்தது வங்கதேசம்.

அதன் பிறகே மெஹதி ஹசன் மிராஜ் 50 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்தார். மோர்டசா 32 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுக்க வங்கதேசம் இவர்கள் கூட்டணியால் ஓரளவுக்கு மரியாதையான 173 ரன்களை எடுத்தது வங்கதேசம். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பும்ரா 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த ஆட்ட நாயகன் ஜடேஜா 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சாஹல், குல்தீப் 20 ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்து சிக்கனம் காத்தாலும் விக்கெட்டுகள் விழவில்லை. இருவரும் 70 டாட் பால்களை வீசியிருந்த போதிலும் மீதி 50 பந்துகளில் 74 ரன்களை கொடுத்துள்ளது, ஸ்மார்ட் ஸ்ட்ரைக் ரேட்டி படி பார்த்தால் மிக அதிகமே. ஏனெனில் மொத்த ரன் ரேட்டே 3.51தான்.

பிறகு தவன், ரோஹித் இந்திய அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்து பவர் பிளேயில் 51 ரன்களைச் சேர்த்தனர். ஷிகர் தவண் அனாயாசமான ஷாட்களுடன் 47 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ராயுடு 28 பந்துகளில் 13 ரன்களுக்குத் திணறி ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா ஒரு முனையில் அபாரமாக ஸ்கோர் போர்டை நகர்த்தினார், ஷாகிப் அல் ஹசனை மிகப்பெரிய சிக்ஸரை அடித்து அரைசதம் கண்டார். ரோஹித், தோனி இணைந்து 64 ரன்கள் சேர்த்த நிலையில் 37 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த தோனி மோர்டசா பந்தை பவுண்டரியில் ஆட்டத்தை முடிக்க நினைத்து இறங்கி வந்து சுற்றினார், பந்து எட்ஜ் ஆகி ஸ்வீப்பர் கவரில் கேட்ச் ஆனது, தேவையற்ற திடீர் முயற்சியினால் அவுட் ஆனார்.

ரோஹித் சர்மா 104 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 83 நாட் அவுட். கார்த்திக் 1 நாட் அவுட். இந்திய அணி 174/3. என்று வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x