Published : 29 Sep 2018 08:39 AM
Last Updated : 29 Sep 2018 08:39 AM
ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை திக்கித் திணறி வென்ற இந்திய அணி 7-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.
223 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட வங்கதேச அணி இந்திய அணியை அழவிட்டனர். கடைசியில் கால் காயத்துடன் இறங்கிய கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார், ஜடேஜா பங்களிப்பினால் இந்திய அணி 50வது ஓவரின் கடைசி பந்தில் வென்றது.
ஸ்ரீகாந்த் கூறியது போல் ‘டப் டிப் டப் டிப்’ என்று அடித்து வெற்றி பெற்றிருக்க வேண்டிய இலக்கு இது, ஆனால் தஸ்புஸ் என்று மூச்சிறைக்க வென்றது இந்திய அணி. ஆனால் ரெக்கார்ட் புத்தகத்தில் இந்தியா வென்றது என்றுதான் இருக்கும், தோனி ஆடியது நாளை ‘பயனுள்ள பங்களிப்பு’ என்று வர்ணிக்கப்படும், ஆனால் போட்டியை இக்கட்டிற்குக் கொண்டு சென்றதே, தோனி-தினேஷ் கார்த்திக் பார்ட்னர்ஷிப்தான். இருவரும் சேர்ந்து சுமார் 14 ஒவர்களில் 54 ரன்களையே சேர்க்கும் அளவுக்கு பவுலிங் ஒன்றும் அபாயகரமாக இல்லை, கட்டுக்கோப்பாக இருந்தது, தோனியினால் ஷார்ட் பிட்ச், ஓவர் பிட்ச் பந்துகளைக் கூட ரன்களுக்கு அடிக்க முடியவில்லை. அவரது பேட்டிங் வங்கதேசத்துக்கு பீல்டிங் பிராக்டீஸ் கொடுப்பது போல் தெரிந்தது.
ரோஹித் சர்மாவின் உடல் மொழி, இறங்கியது முதல் அவரது அனாயாச ஆட்டம் வங்கதேசத்தின் வெற்றி வாய்ப்பை குறைத்தபடியேதான் இருந்தது. 55 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 பிரமாதமான சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா ரூபல் ஹுசைன் பந்தை நஜ்முலிடம் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்த பிறகே 16.4 ஓவர்களில் 83/3 என்று ஆனது இந்தியா.
தோனி தானும் கெட்டு, அதுவரை நன்றாக ஆடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கின் ரிதத்தையும் கெடுத்தார், தோனி 67 பந்துகளில் 36 ரன்களை எடுத்த போது உண்மையில் யாரோ தாத்தா ஆடுவது போல்தான் இருந்தது. அந்த அளவுக்கு பவுலிங்கில் ஒன்றுமில்லை. ஏகப்பட்ட பந்துகளை விழுங்கினார். வேண்டுமென்றே ஆடுகிறாரா, இல்லை அவ்வளவுதான் காலிப் பெருங்காய டப்பாவா என்று புரியவில்லை, இவரையெல்லாம் வைத்து கொண்டு உலகக்கோப்பைக்குச் செல்வதெல்லாம் கிரிக்கெட் அல்லாத வேறு வணிகக் காரணங்களுக்காக வேண்டுமானால் இருக்கலாம். அணித்தேர்வுக்குழுவினர் அவரிடம் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒன்று வெற்றிக்காக ஆடுங்கள் அல்லது ஓய்வு பெறுங்கள், இளம் வீரர்கள் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்ற இளம் சுட்டி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்று அவரிடம் தேர்வுக்குழுவினர் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. சொல்லித்தான் ஆகவேண்டும்.
வங்கதேச அணியின் குறைபாடினால் குறைந்து போன இலக்கு:
வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 66 பந்துகளில் 90 ரன்கள் இருந்தவர் அடுத்த 20 பந்துகளை எடுத்துக் கொண்டு 87 பந்துகளில் சதம் எடுத்தார். இவர் திடீரென மந்தமடைந்தது எதிர்முனை வீர்ர்களின் ரிதமையும் கெடுத்தது. கடைசியில் அவரது ஸ்டம்பிங் தீர்ப்பு சந்தேகத்துக்குரியதே. கிரீஸ் எப்போதும் நடுவர்வசம் என்று கிரிக்கெட்டில் சொல்லப்படுவதுண்டு, வர்ணனையில் ரமீஸ் ராஜா மட்டுமே லிட்டன் தாஸ் நாட் அவுட் என்று கூறினார், அவர் கூறியதில் உண்மை இருக்கிறது.
கேதார் ஜாதவ் பந்து வீச்சில் விக்கெட்டுகளை கொடுக்கும் அணி வெற்றி பெற லாயக்கில்லை என்றே கூற வேண்டும், அது என்ன பந்து வீச்சு என்று விக்கெட்டைக் கொடுக்கின்றனர் என்று புரியவில்லை. அதே போல் இம்ருல் கயேஸுக்கு சாஹல் பந்தில் கொடுத்த எல்.பி.யும் ‘அம்பயர்ஸ்கால்’ ஆனது, ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பின் தொடையில் பட்டது போல்தான் தெரிந்தது. நடுவர் நாட் அவுட் என்று கூறியிருந்தால் அது நாட் அவுட்தான் இதுவும் சந்தேகமான தீர்ப்பாக அமைந்தது. இதனால் 48.3 ஓவர்களில் அந்த அணி ஆல் அவுட் ஆக நேர்ந்தது, இதனால் 9 பந்துகளில் அவர்கள் மேலும் 10-15 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய வாய்ப்பு பறிபோனது. அந்தக் கூடுதல் ரன்கள் வந்திருந்தால் இந்திய அணி தோற்றிருக்கும். 120/0 என்ற நிலையில் மிரட்டிய வங்கதேச பேட்டிங்கை இந்திய அணி பந்து வீச்சு 222 ரன்களுக்கு அடக்கியது. மேலும் ஷாகிப் அல் ஹசன் இல்லாதது அவர்களுக்கு பவுலிங்கில் கை ஒடிந்த நிலையே, காரணம் புவனேஷ்வர் குமார் போன்றவர்களையெல்லாம் அவர் ஆட விட்டிருக்க மாட்டார். இவையெல்லாம் வங்கதேசத்தின் பின்னடைவுகளுக்குக் காரணம், ஆனால் இத்தனை குறைபாடுகள் இருந்தும் இந்திய அணியை அவர்கள் அழ விட்டனர்.
குறைந்த இலக்குகளை தடுப்பதற்குத் தேவையான கட்டுக்கோப்புடன் வங்கதேசம் வீசியது, ஸ்டம்ப் டு ஸ்டம்ப் பந்து வீச்சில் 7 பேர் சுற்றி நின்று கொண்டு சிங்கிள்களையே வரவிடாமல் செய்ய டென்ஷன் அதிகரித்தது.
தினேஷ் கார்த்திக் 31வது ஓவரில் புல்டாஸை ஆடாமல் விட்டு எல்.பி.ஆகி வெளியேறினார். 61 பந்துகளில் 1 பவுண்டரி ஒரு ஹூக் சிக்ஸ் மூலம் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனி 67 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து 37வது ஓவரில் முஸ்தபிசுர் வீசிய ஒரு சாதாரண பந்தை தோனி ஏனோதானோவென்று ஆட எட்ஜ் ஆகி முஷ்பிகுருக்கு கேட்ச் பிராக்டீஸ் ஆனது. இந்திய அணி 160/5. ஜாதவ் கிரீசில் இருந்தார் அவர் கால் காயத்துடன் இருந்தார். அவரால் பந்துகளை அடிக்க முடியவில்லை, ஓட முடியவில்லை. ரோஹித் ஒருகட்டத்தில் அவரை பெவிலியனுக்குத் திரும்பி அழைத்து விட்டார், அப்போது 12 ஓவர்களில் 56 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போதுதான் ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார் இணைந்தனர். ஜடேஜா ஒரு அணி வீரராக ஹை பிரஷர் சூழ்நிலையில் திறம்படக் கையாண்டார். டைட் பவுலிங், காற்றுப்புகா பீல்டிங்கையும் மீறி அவர் 33 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். புவனேஷ்வர் குமார் 1 பவுண்டரி அடித்தார், கடைசியில் ரூபல் ஹுசைன் பந்தில் சிக்ஸ் ஒன்றையும் அடித்துத் திகைக்கவைத்தார், அந்த சிக்ஸரை ரூபல் ஹுசைன் விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது, புவனேஷ்வர் குமாருக்கெல்லாம் புல் லெந்தில் வீசக் கூடாது, பேக் ஆஃப் லெந்தில் நெஞ்சுக்கு பந்தை எழுப்பினால் அவரும் பந்துடன் கூட எழும்பி திண்டாடுவார். அந்தவிதத்தில் அவருக்கு சிக்ஸ் கொடுத்தது சிறிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. மற்றபடி ரூபல் ஹுசைன் 10 ஓவர்களில் 26 ரன்கள் 2 விக்கெட் என்று அலற விட்டார்.
ஜடேஜா, புவனேஷ்வர் கூட்டணி 9.2 ஓவர்களில் அதாவது 56 பந்துகளில் 45 ரன்களைப் போராடிச் சேர்க்க கடும் மன உறுதியுடன் ஆடினர். ஸ்கோர் 212 ரன்கள் எனும் போது இந்திய ஓய்வறையில் கொஞ்சம் தெம்பு வந்தது. ஆனால் அப்போதுதான் ஜடேஜா தன்னைக் குறுக்காகக் கடந்து செல்லும் லெந்த் பந்து மெலிதாக எட்ஜ் ஆக வெளியேறினார். உடனேயே 31 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சுடன் 21 முக்கிய ரன்களை எடுத்த புவனேஷ்வர் குமாரும் முஸ்தபிசுர் பந்து ஒன்று அவருக்குக் குறுக்காகச் செல்ல காலை நகர்த்தாமல் உடலுக்கு தள்ளி மட்டையைக் கொண்டு போக எட்ஜ் ஆகி வெளியேறினார். 48.1 ஓவரில் 214/7. அதற்குள் காயமடைந்த கேதார் ஜாதவ் மீண்டும் களமிறங்கியிருந்தார், அவர் 21 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார். குல்தீப் யாதவ் இறங்கினார். 11 பந்துகளில் 9 ரன்கள் தேவை.
குல்தீப் வந்தவுடனேயே ஒரு சிங்கிள் எடுத்து ஜாதவ்விடம் ஸ்ட்ரைக் கொடுத்தார். ஜாதவ் பாயிண்டில் அடித்து சிங்கிள் வேண்டாம் என்றார், அடுத்த பந்தும் ஜாதவ் கிளவ்வில் பட்டது, ரன் இல்லை. 49வது ஓவரின் கடைசி பந்தை பாயிண்டில் அருமையாக கட் செய்து ஜாதவ் 2 ரன்களை எடுத்தார். சிங்கிள் எடுத்து ஓவர் கீப் செய்வார் என்று பார்த்தால் கடைசி பந்தில் 2 ரன்களை எடுத்துவிட்டார்.
கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை. குல்தீப் யாதவ் ஸ்ட்ரைக்கில் இருந்தார். கடைசி ஓவரை மஹ்முதுல்லா வீசினார் குல்தீப் முதல் பந்தை லாங் ஆஃபில் அடித்து சிங்கிள் எடுத்தார். பீல்டரை முன்னால் கொண்டு வந்து நெருக்கியிருக்க வேண்டும், செய்யவில்லை. மீண்டும் ஜாதவ் பந்தைத் தட்டி விட்டு சிங்கிள் எடுத்து குல்தீப்பிடம் ஸ்ட்ரைக் வர இந்திய ரசிகர்களுக்கு திக் திக் கணம். ஆனால் குல்தீப் யாதவ் ஒரு ஸ்லாக் ஸ்வீப் அடித்து 2 ரன்களை எடுத்தார். அடுத்த பந்து ரன் வரவில்லை. அடுத்த பந்தை மீண்டும் ஒரு சுற்று சுற்றினார் சிக்கவில்லை கால்காப்பில் பட்டு கீப்பருக்கு அருகில் செல்ல ஒரு ரன்னை அதற்குள் எடுத்து ஜாதவ்விடம் மீண்டும் ஸ்ட்ரைக் வந்தது. கடைசி பந்து பிளிக் ஷாட்டை ஜாதவ் மட்டையில் தொட முடியவில்லை கால்காப்பில் பட்டு பைன் லெக்கில் செல்ல ஒரு ரன், அதுவே வெற்றி ரன். வெற்றி ரன் லெக்பை முறையில் இதற்கு முன்னர் வந்துள்ளதா என்பது சுவாரசியமான புள்ளி விவர ஆய்வாக இருக்கும். இந்திய அணி வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை 7வது முறையாகக் கைப்பற்றியது. கேதார் ஜாதவ் 27 பந்துகளில் 23 ரன்கள் நாட் அவுட். குல்தீப் 5 நாட் அவுட். லிட்டன் தாஸ் ஆட்ட நாயகன், ஷிகர் தவண் தொடர் நாயகன். உண்மையில் ஆட்ட நாயகன் விருதை கேதார் ஜாதவுக்கு கொடுத்திருக்கலாம். ஏனெனில் வங்கதேச சதக்கூட்டணியை உடைத்தவரும் அவரே முக்கிய விக்கெட்டான முஷ்பிகுர் ரஹீமை பெவிலியன் அனுப்பியவரும் அவரே, கடைசியில் பேட்டிங்கில் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றவரும் அவரே.
முன்னதாக தொடக்கத்தில் ஷிகர் தவண் 3 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் 15 ரன்களை எடுத்து நஜ்முல் இஸ்லாம் பந்தில் சவுமியா சர்க்காரிடம் கேட்ச் ஆக நாகின் டான்ஸ் ஆடினார் நஜ்முல். ரோஹித் சர்மாவின் ஆட்டம் உண்மையில் அட்டகாசம், அலட்சியமான 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் அவ்ர் 48 ரன்கள் எடுத்து கம்பீரமாக ஆடிவந்த நிலையில் ரூபல் ஹுசைன் பந்தை புல் ஷாட்டில் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுக்க திருப்பு முனை ஆனது. வங்கதேசப் பந்து வீச்சில் மெஹதி ஹசன் மிராஸ் சரியாக வீசவில்லை அவர் 4 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். நஜ்முல் இஸ்லாம் ஷிகர் தவண் விக்கெட்டை வீழ்த்தினாலும் 10 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக் கொடுத்தார். இந்த இடத்தில்தான் ஷாகிப் அல் ஹசன் இன்மை பெரிய ஓட்டையை ஏற்படுத்தியது. மற்றபடி முஸ்தபிசுர் (2/38), மஷ்ரபே (1/35), ரூபல் (2/26) அசத்தலாக வீசினர். இந்திய அணி ஆசிய சாம்பியன்களாக 7வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT