Published : 28 Sep 2018 04:51 PM
Last Updated : 28 Sep 2018 04:51 PM
சிட்னியில் நடைபெற்ற ஜே.எல்.டி ஒருநாள் கோப்பைத் தொடரில் குவீன்ஸ்லாந்து அணிக்கு எதிராக வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா வீரர் டி ஆர்க்கி ஷார்ட் 23 சிக்சர்கள் விளாசி உலக சாதனை நிகழ்த்தினார்.
மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் அலி பிரவுன் (268), ரோஹித் சர்மா (264), ஆகியோருக்கு அடுத்த இடத்தில் 257 ரன்கள் எடுத்து லிஸ்ட் ஏ 3வது இடத்தில் உள்ளார் டி ஆர்க்கி ஷார்ட்.
உலக சாதனையை முறியடிக்க 12 ரன்கள் இருந்த போது மேத்யூ கூனிமேன் பந்தில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார்.
ஷார்ட் இன்னிங்சினால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி 47 ஓவர்களில் 387 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய குவீன்ஸ்லாந்து அணி ஹியாஸ்லெட் சதமெடுத்தும், கிறிஸ் லின் 58 எடுத்தும் 271 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆண்ட்ரூ டை 46 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய பணிக்கப்பட்டது, முதலில் 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து பிறகு 118/4 என்று தடுமாறிய போது டி ஆர்க்கி ஷார்ட் ஆட்டத்தை திசைமாற்றினார்.
டி ஆர்க்கி ஷார்ட் சிக்ஸ் அடித்து 83 பந்துகளில் சதம் கண்டார். பிறகு அதிரடி சிக்சர் மழை மீண்டும் தொடங்க இருமுறை ஒரே ஓவரில் 3 சிக்சர்களை அடிக்க இரட்டைச் சதம் விளாசினார். 100, 150, 200, 250 ரன்களை சிக்சர்களில் கடந்தார் ஷார்ட். இதில் 200 மற்றும் 250 ரன்களை 3 தொடர் சிக்சர்களில் கடந்ததும் பிரமிக்கத்தக்க தருணமாக உள்ளது. மாட்டிய பவுலர்கள் சார்லி ஹெம்ப்ரி, லூக் பீல்ட்மேன். ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த 4வது ஆஸி.வீரரானார் ஷார்ட், முன்னதாக பென் டன்க், பிலிப் ஹியூஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் டபுள் செஞ்சுரி அடித்துள்ளனர்.
குவீன்ஸ்லாந்து லெக் ஸ்பின்னர் ஸ்வெப்சனை வெளுத்துக் கட்டிய ஷார்ட்டின் ஒரு ஷார்ட் மைதானத்தின் கண்ணாடி ஜன்னலை பதம் பார்த்தது. ஸ்வெப்சன் 8 ஓவர்களில் 97 ரன்களை வாரி வழங்கினார். அடின்னா அடி இப்படிப்பட்ட அடியைப் பார்க்க முடியாது என்று ஆஸி. ஊடகங்கள் விதந்தோதி வருகின்றன. 23 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் கொண்ட 257.
387 ரன்கள் ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட்டில் 6வது பெரிய ஒருநாள் ஸ்கோராகும் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT