Published : 11 Sep 2018 06:15 PM
Last Updated : 11 Sep 2018 06:15 PM

பென் ஸ்டோக்சை ஒரே ஓவரில் புரட்டி எடுத்து சதமடித்த ராகுல்; விஹாரியை அதே ஷார்ட் பிட்சில் வீழ்த்திய ஸ்டோக்ஸ்: இந்தியா போராட்டம்

ஓவல் டெஸ்ட் போட்டியில் 464 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடி வரும் இந்திய அணியின் பேட்டிங் ராகுல் மூலம் கொஞ்சம் தைரியம் காட்டத் தொடங்கியுள்ளது.

உணவு இடைவேளையின் போது கே.எல்.ராகுல் 126 பந்துகளில் 17 பவுண்டரிகள் ஒரு சதத்துடன் 108 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்கிறார், ரிஷப் பந்த், மொயின் அலி பந்தை லாங் ஆனில் அடித்த ஒரு கை சிக்ஸருடன் 12 ரன்களுடன் நாட் அவுட்டாக உள்ளார், இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 167/5 என்று தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

இன்று 2 மணி நேர ஆட்டத்தில் 27 ஓவர்களில் 108 ரன்களை விளாசி ரஹானே (37), ஹனுமா விஹாரி (0) ஆகியோர் விக்கெட்டைப் பறிகொடுத்தது.

ராகுலின் சேவாக் ரக ஆட்டம்:

இன்று முதல் ஓவரிலேயே பிராட் வீசிய புல் லெந்த் பந்தை ஸ்கொயர்லெக் திசையில் பிளிக் ஆடி பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் கண்ட ராகுல், இந்தத் தொடரில் அரைசதம் கண்ட முதல் இந்தியத் தொடக்க வீரரானார். 57 பந்துகளில் ராகுல் அரைசதம் கண்டார்.

பிராட் வீசிய ஒரு பந்தில் ஏறக்குறைய பிளெய்ட் ஆன் ஆகியிருப்பார் ஆனால் அதிர்ஷ்டம் இவர் பக்கம் இருந்தது, ரஹானேவுக்கு ஒரு மிகப்பெரிய எல்.பி. அப்பீல் எழுந்தது.

ரஹானே மெதுவாக ஒன்று இரண்டு என்று எடுக்க ராகுல். பிராடின் புல் பந்தை மீண்டும் ஆஃப் திசையில் பவுண்டரிக்கு அனுப்பினார். சாம் கரன் பந்து வீச வந்தவுடன் ரஹானே தொடர்ச்சியாக 2 பந்துகளில் எட்ஜ் ஆகாமல் தப்பித்தார். கரன், ராகுலையும் இருமுறை பீட் செய்தார். கடைசி்யில் ரஹானே கரன் பந்து ஒன்றை மேலேறி வந்து பவுண்டரி அடித்தார். ராகுல் 62 ரன்களில் இருந்த போது மொயீன் அலியின் பந்து ஒன்று திடீரென தாழ்வாக வர கடும் எல்.பி.அப்பீலில் சிக்கினார் ராகுல், ஆனால் அது நாட் அவுட், இங்கிலாந்து ரிவியூ வீணானது.

பிறகு மொயின் அலி பந்தை கவரில் பவுண்டரி அடித்த ராகுல், ரஹானேவுடன் சதக்கூட்டணியை நிறைவு செய்தார். பிறகு அலியை ஒரு பெடல் ஷாட், ரிவர்ஸ் ஷாட் என்று வெளுத்தார்.

ரஹானேவும் தன் டச்சைப் பெற்றுக் கொண்டதால் சாம் கரனை மிக அருமையான பிளிக் பவுண்டரியும் பிறகு மிக அருமையான கட் ஷாட்டையும் பவுண்டரிக்கு அடுத்தடுத்து அனுப்பி செட்டில் ஆகத் தொடங்கினார். 106 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த ரஹானே செட்டில் ஆன பிறகு மொயின் அலி பந்தை ஸ்வீப் ஆட முயன்று பந்து சிக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இங்கிலாந்து ஷார்ட் பிட்ச் உத்தியில் இறங்கத் தொடங்கியது.

விஹாரியை பழிதீர்த்த  ஸ்டோக்ஸ்

இதற்கு அடுத்த ஓவரே அறிமுக வீரர் ஹனுமா விஹாரி ஸ்டோக்ஸின் ஒரு பந்தை தடுத்தாடினார், பிறகு அடுத்த பந்தை ஆடும் முயற்சியில் எழும்பிய பந்துக்கு உடம்பில் அடி வாங்கினார். அடுத்த பந்தும் பவுன்சர் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வந்தது விஹாரி குதிகால்களைத் தூக்கி மட்டையையும் உயர்த்தினார், மட்டையை இறக்கியிருந்தால் எட்ஜ் ஆகியிருக்காது, ஆனால் அதற்கெல்லாம் அவருக்கு நேரமில்லை, பந்து வேகம், எழுச்சி கொண்டதால் மட்டையில் பட்டு பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனது. டக் அவுட் ஆனார் விஹாரி. முதல் இன்னிங்ஸில் விஹாரி,  ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பவுன்சரை ஹூக் ஷாட்டில் சிக்ஸ் அடித்தது ஸ்டோக்ஸின் கோபத்தைக் கிளப்பி விஹாரியுடன் சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டதும், கோலி தலையிட்டு சமாதானம் முடித்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இன்று பவுன்சரில் விஹாரியைக் காலி செய்து பழிதீர்த்தார்.

அதன் பிறகு ராகுல், மொயின் அலியை ஒரு ரிவர்ஸ் ஸ்வீப், ஒரு ஸ்வீப் என்று 2 பவுண்டரிகள் அடித்தார்.

ஷாட் ஆஃப் த மேட்ச், ஸ்டோக்சை புரட்டிய ராகுல்:

87 ரன்களுக்கு வந்த ராகுல் பென் ஸ்டோக்ஸை அடுத்த ஓவரில் புரட்டி எடுத்தார். ஷார்ட் பிட்ச் உத்தியைக் கடைபிடித்த ஸ்டோக்ஸ் தொடர்ந்து அதையே வீசிக் கொண்டிருந்ததால், எழும்பிய ஒரு பந்தை ராகுல் ஒதுங்கிக் கொண்டு சேவாக் பாணியில் ஒரு டி20 ஷாட்டை ஆஃப் திசையில் தூக்கி அடிக்க எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸ் ஆனது, மிகப்பெரிய ஷாட், ஷாட் ஆப் த மேட்ச்.

அடுத்த ஷார்ட் பிட்ச் பந்தை இம்முறை புல் ஷாட் ஆடினார் டாப் எட்ஜில் பவுண்டரி பறந்தது. அடுத்ததாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை டென்னிஸ் ஃபோர் ஹேண்ட் அடியில் நேர் பவுண்டரி அடித்தார். இதுதான் 100 ரன்களுக்கான ஷாட். ராகுலின் 5வது டெஸ்ட் சதம். இந்திய அணி 152 ரன்கள்தான் எடுத்த நிலையில் ராகுல் அதில் 100 ரன்களை எடுத்து பெருமளவு பங்களிப்பு செய்துள்ளார்.

உணவு இடைவேளையின் போது ராகுல் 108 ரன்களுடனும் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர், இந்தியா 167/5.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x