Published : 10 Sep 2018 12:42 PM
Last Updated : 10 Sep 2018 12:42 PM
அமெரிக்காவில் நடந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
நியூயார்க்கில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வீழ்த்தி ஜோகோவிச் மகுடம் சூடினார்.
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ்.ஓபன் போட்டி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்து ஜப்பான் வீராங்கனை ஒசாகா முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் தர வரிசையில் 6-ம் இடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சும் அர்ஜென்டினா வீரர் ஜுவான் மார்டின் டெல்போட்ரோவும் மோதினார்கள்.
இந்த ஆட்டத்தில் டெல் போட்ரோவை 6-3, 7-6(7/4),6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் நோவாக் ஜோகோவிச். 2-வது செட் மட்டுமே டைபிரேக்கரில் சென்றதால், இருவருக்கும் இடையிலான ஆட்டம் கடும் போட்டியாக இருந்தது, ஆனால், முதலாவது செட்டையும், 2-வது டெட்டையும் ஜோகோவிச் மிக எளிதாகத் தன்வசப்படுத்தினார்.
இந்த வெற்றி மூலம் அமெரிக்க வீரர் பீட் சாம்ப்ராஸின் 14-கிராண்ட் ஸ்லாம் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். 2011, 2015-ம் ஆண்டுக்குப் பின் ஜோகோவிச் 3-வது முறையாக யு.எஸ். ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலின் 17 கிராண்ட் ஸ்லாம் சாதனையை எட்டுவதற்கு 3 பட்டங்களும், சுவிட்சர்லாந்தின் பெடரரின் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் சாதனையைத் தொட இன்னும் 6 பட்டங்களும் ஜோக்கோவிச்சுக்கு தேவைப்படுகிறது.
யு.எஸ்.ஓபனில் 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதில் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார். கடந்த ஆண்டு முழங்கை காயம் காரணமாகப் போட்டியில் ஜோகோவிச் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் டெல்போட்ரோவுக்கு கடந்த 9 ஆண்டுகளில் இது 2-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியாகும். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் யு.எஸ். ஓபனில் டெல்போட்ரோ சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
இதன் மூலம் டென்னிஸ் போட்டிகளில் முக்கியமான 55 தொடர்களில் 50 தொடர்களில் சாம்பியன் பட்டத்தை பெடரர், நடால், ஜோகோவிச், ஆன்டி முர்ரே ஆகிய 4 மிகப்பெரிய ஆளுமை கொண்ட வீரர்கள் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT