Last Updated : 11 Sep, 2018 04:15 PM

 

Published : 11 Sep 2018 04:15 PM
Last Updated : 11 Sep 2018 04:15 PM

செரீனா வில்லியம்ஸை மோசமாகச் சித்தரித்து கார்ட்டூன்: ஆஸ்திரேலிய கார்டூனிஸ்டுக்கு வலுக்கும் கண்டனம்

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸை கிண்டல் செய்து மிக மோசமாக, சித்தரித்து கார்டூன் வெளியிட்ட ஓவியருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இனவெறியுடன், பாலின பாகுபாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது என்று ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங் தெரிவித்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாமான யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் கடந்த வாரம் நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசகாவுக்கும், முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸும் மோதினார்கள். இதில் முதல் செட்டை இழந்த செரீனா 2-வது செட்டில் தோற்கும் தருவாயில் இருந்தபோது, செரீனாவின் பயிற்சியாளர் செரீனாவிடம் ஏதோ சைகையில் தெரிவித்தார்.

இதைக் கவனித்த களநடுவர் செரீனாவின் பயிற்சியாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செரீனாவைக் கண்டித்தார். ஆனால், செரீனா தான் எந்தவிதமான தவறும் செய்யவில்லை, பயிற்சியாளர் தனக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை என்று கடுமையாகப் பேசினார். மேலும், கோபத்தில் தான் கையில் வைத்திருந்த டென்னிஸ் ராக்கெட்டை கீழே வீசி எறிந்து, நடுவருடன் கோபமாகப் பேசினார். தன்னை பாலியல் ரீதியாகப் பாகுபாடு பார்க்கிறீர்கள், நான் ஏமாற்றவில்லை என்று பேசினார். உச்சக்கட்டமாக நடுவரைத் திருடன் என்றும் தன்னிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் செரீனா வலியுறுத்தினார்.

இதையடுத்து நடுவரிடம் சண்டையிட்டதற்காக ரூ.12 லட்சம் அபராதம் செரீனாவுக்கு விதித்து சர்வதேச டென்னிஸ் அமைப்பு உத்தரவிட்டது.

 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் ஹெரால்டு சன் நாளேட்டில் செரீனா வில்லியம்ஸை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது.

ஹெரால்டு சன் நாளேட்டில் பணியாற்றும் மார்க் நைட் என்ற ஓவியர் இந்தக் கேலிச்சித்திரத்தை வரைந்திருந்தார். இதில் குண்டான தோற்றத்தில் செரீனா வில்லியம்ஸ் கோபத்தில் குதிப்பது போலவும் வரைந்திருந்தார். மேலும், செரீனா வில்லியம்ஸின் உருவத்தையும், அவர் சார்ந்திருக்கும் இனத்தையும் குறிப்பிடும் வகையில் படம் வரைந்திருந்தார்.

உலகின் மிகச்சிறந்த கார்ட்டூனிஸ்ட்களில் ஒருவராகக் கருதப்படும் மார்க் நைட் இதுபோல் இனவெறியையும், பாலினத்தையும் சுட்டிக்காட்டும் வகையில் கார்டூன் வரைந்துள்ளது பலரின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ட்விட்டரில் மார்க் நைட்டின் கார்டூனைப் பார்த்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஹாரிபாட்டர் நாவலின் எழுத்தாளர் ரோவ்லிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கார்டூனிஸ்ட் மார்க் நைட்டை கடுமையாக விமர்சித்து கண்டித்துள்ளார். அதில், மிக்சிறந்த வீராங்கனை மீது இனவெறியையும், பாலின பாகுபாட்டை கொண்டுவரும் வகையில் கேலிச்சித்திரம் வரைந்திருக்கிறீர்கள் எனக் கண்டித்துள்ளார்.

அதேபோல வாஷிங்டன் போஸ்ட் நாளேடு இந்த கார்டூனை, இனவெறியுடன் வரையப்பட்ட கார்டூன் என்று விமர்சித்துள்ளது. இதுபோல் பலரும் கார்டூனிஸ்ட் மார்க் நைட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x