Published : 07 Sep 2018 04:47 PM
Last Updated : 07 Sep 2018 04:47 PM
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 'செபக் தக்ரா' பிரிவில் வெண்கலம் பெற்ற வீரர் ஹரிஷ் குமார், டெல்லியில் பிழைப்புக்காகத் தேநீர் விற்கிறார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் 'செபக் தக்ரா'* அணி வெண்கலம் வென்றது. அதில் விளையாடிய வீரர் தற்போது டெல்லியில் தன் தந்தையின் கடையில் தேநீர் விற்கிறார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹரிஷ் குமார், ''என்னுடைய குடும்பத்தில் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால் எங்களுக்கு சொற்ப வருமானமே வருகிறது. அதனால் என் குடும்பத்துக்கு உதவத் தேநீர் விற்கிறேன்.
தினமும் மதியம் 2 முதல் 6 மணி வரை பயிற்சி பெறுவேன். மற்ற நேரங்களில் டீ விற்பேன். என்னுடைய குடும்பத்துக்கு உதவ எனக்கு நல்ல வேலை வேண்டும்'' என்கிறார்.
'செபக் தக்ரா' விளையாட்டு அறிமுகமாகும் முன் சந்தித்த சவால்கள் குறித்துப் பேசும் ஹரிஷ், ''ஆரம்ப காலத்தில் டயரை வைத்து விளையாடினேன். என்னுடைய பயிற்சியாளர் ஹேம்ராஜ் இந்த விளையாட்டை எனக்கு அறிமுகப்படுத்தினார். இந்திய விளையாட்டு ஆணையத்தில் இணைந்த பிறகு எனக்கு மாதாந்திர உதவித் தொகையும், விளையாட்டு உபகரணங்களும் கிடைக்கிறது'' என்றார்.
ஹரிஷின் அம்மா இந்திரா தேவி கூறும்போது, ''ஏராளமான சிரமங்களைக் கடந்துதான் என்னுடைய குழந்தைகளை வளர்த்தேன். என்னுடைய கணவர் ஓர் ஆட்டோ ஓட்டுநர். எங்களுக்கு சிறிய டீக்கடை உண்டு. சில நேரங்களில் வாடகை கொடுக்கக் கூட காசிருக்காது. அதனால் என் மகன் ஹரிஷ் டீக்கடையில் எங்களுக்கு உதவியாக இருக்கிறான். அரசு எங்களுடைய நிலையைப் பார்த்து, ஹரிஷுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என்று உருக்கத்துடன் பேசியுள்ளார்.
---
* செபக் தக்ரா விளையாட்டின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (தாய்லாந்து, மலேசியா) ஆகும். தாய்லாந்தின் 'தலாய்' மொழியில் 'செபக்' என்றால் உதைத்தல் என்றும், மலேசியாவின் 'மலாய்' மொழியில் 'தக்ரா' என்றால் பந்து என்றும் பொருள்படுகிறது. இந்த விளையாட்டில் பிரம்பால் ஆன சிறிய பந்து போன்ற உருண்டையை வீரர்கள் கால், முழங்கால், மார்பு ஆகியவற்றைக் கொண்டு அடித்து, தரையில் படாமல் ஆட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT