Published : 08 Sep 2014 03:45 PM
Last Updated : 08 Sep 2014 03:45 PM
கடந்த ஜூலையில் அர்ஜெண்டீனாவை வீழ்த்தி உலகக் கோப்பைக் கால்பந்து சாம்பியனான ஜெர்மனி அதன் பிறகு முதல் சர்வதேசப் போட்டியில் நேற்று விளையாடியது.
யூரோ 2016 கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டியில் நேற்று டார்ட்மண்டில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது ஜெர்மனி. ஸ்காட்லாந்து கடும் நெருக்கடி கொடுக்க மீண்டும் தாமஸ் முல்லரின் அபாரமான 2 கோல்களினால் ஜெர்மனி 2-1 என்று வெற்றி பெற்றது.
இடைவேளைக்கு முன்பாக தாமஸ் முல்லர் முதல் கோலை அடித்து முன்னிலை கொடுக்க, ஸ்காட்லாந்தின் இகேச்சி அன்யா என்பவர் 66வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தார்.
உலக சாம்பியன்களின் இறுக்கமான தடுப்பு உத்திகளை கேள்விக்குட்படுத்திய ஸ்காட்லாந்து ஆட்டத்தின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்தியது.
மத்திய பகுதியில் ஜெர்மனியின் பலவீனத்தை ஸ்காட்லாந்து அம்பலப்படுத்தியது. இடைவேளைக்குப் பிறகு ஸ்காட்லாந்து கொடுத்த கடும் நெருக்கடியில் ஜெர்மனி வீரர்களான டோனி குரூஸ், கிறிஸ்டோபர் கிரேமர் தடுப்பாட்டத்தில் திணறினர்.
ஆட்டத்தின் தொடக்கக் கணங்களில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முழுதும் அசத்திய ஆந்த்ரே ஷுயெர்லி, தாமஸ் முல்லர் ஆகியோர் மார்க்கோ ரியூஸுடன் இணைந்து ஸ்காட்லாந்துக்கு நெருக்கடி கொடுத்தனர்.
முதலில் சுலபமான கோல் வாய்ப்பைத் தவற விட்ட் தாமஸ் முல்லர், ரூடி அடித்த அபாரமான கிராஸை தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார். இடைவேளை வரை ஜெர்மனிக்கு ரசிகர்கள் ஆதரவு பலமாக இருந்தது.
இடைவேளைக்குப் பிறகு ஸ்காட்லாந்து உத்தியை மாற்ற ஜெர்மனிக்கு நெருக்கடி திரும்பியது. 66வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து வீரர் அன்யா, டேரன் பிளெட்சர் கொடுத்த அருமையான் பாஸை 40 யார்டுகள் எடுத்துச் சென்று ஜெர்மனி கோல் கீப்பர் நூயர் பிடிக்க முடியாது கோலுக்குள் அடித்து சமன் செய்தார்.
அதன் பிறகு மீண்டும் ஜெர்மனிக்குக் கைகொடுத்தவர் தாமஸ் முல்லர்தான். அவர் தனது 24வது கோலை அடிக்க ஜெர்மனி 2-1 என்று போராடி வென்றது.
அக்டோபரில் போலந்து அணியை ஜெர்மனி யூரோ 2016 தகுதிச் சுற்றுப் போட்டியில் சந்திக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT