Published : 26 Sep 2018 07:26 PM
Last Updated : 26 Sep 2018 07:26 PM
அபுதாபியில் முக்கியமான ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸில் வென்று முதலில் பேட் செய்யும் வங்கதேசம் 12/3 என்று சரிந்து தற்போது முஷ்பிகுர் ரஹிம், மொகமது மிதுன் சதக்கூட்டணியுடன் மீண்டு 125/3 என்று ஆடிவருகிறது.
மொகமது ஆமிரின் பந்து வீச்சில் திடீரென ஒரு தாக்கம் குறைய அவருக்குப் பதில் இன்னொரு இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜுனைத் கானை அணியில் சேர்த்தனர். அவர் தன்னைச் சேர்த்ததற்கு நன்றிக்கடனாக அபாரமாக வீசி 8 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
சவுமியா சர்க்காருக்கு சில பந்துகளை முன்னால் வந்து ஆடுமாறு வீசிவிட்டு திடீரென தோள்பட்டை உயரத்துக்கு ஒருஎகிறு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார், இதனால் புல் ஷாட் ஆடத் திணறிய சவுமியா கொடியேற்றினார் ஆன் திசையில் கேட்ச் ஆனது. பிறகு லிட்டன் தாஸுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் விளையாட முடியாத ஒரு பந்தை வீசி பவுல்டு செய்தார்.
மொமினுல் ஹக் 5 ரன்களில் இருந்த போது ஷாஹீன் ஷா அப்ரீடி அதிவேகமாக ஒரு பந்தை உள்ளே கொண்டு வர ஒன்றும் செய்ய முடியவில்லை ஆஃப் ஸ்டம்ப் பறந்து சென்று விழுந்தது. 12/3.
இந்தச் சரிவிலிருந்து தற்போது முஷ்பிகுர் ரஹிம் (68), மொகமது மிதுன் (51) ஆகியோர் இணைந்து அருமையான சதக்கூட்டணி அமைத்தனர், இது வெற்றிக்கூட்டணியாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதற்கிடையே இன்னிங்சில் 10வது ஓவரில் பாக். இடது கை ஸ்பின்னர் மொகமது நவாஸ், மொகமது மிதுனுக்கு வீசிய ஒரு பந்தை மிதுன் கால்காப்பில் வாங்க பெரிய சப்த முறையீடு எழுந்தது. நடுவர் தெளிவாக நாட் அவுட் என்றார். பார்க்கும் போதே வெளியில் சென்ற பந்து என்று சாதாரணக் கண்களுக்கே தெரிந்தது.
இது பவுலர் உட்பட பாகிஸ்தானின் 11 வீரர்களுக்கும் தெரியவில்லையா என்ன என்பது புரியவில்லை, அனைவரும் கூடி ரிவியூ செய்தனர். ஆனால் பந்து கால்காப்பில் படும்போது கால் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருந்தது. விதிப்படியே நாட் அவுட், அங்கேயே ரிவியூ முடிந்தது. இதைப்போன்ற ரிவியூவை, அதிர்ச்சிகரமான ஒரு ரிவியூவைப் பார்த்ததில்லை என்று வர்ணனையாளர்கள் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT