Last Updated : 08 Sep, 2018 07:10 PM

 

Published : 08 Sep 2018 07:10 PM
Last Updated : 08 Sep 2018 07:10 PM

கோலியின் தவறான களவியூகம்: மீண்டும் இங்கிலாந்தின் கடைசி வரிசை வீரர்கள் ஆதிக்கம்; ‘ஆல்அவுட்’ ஆனது இங்கிலாந்து

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் 5-வது டெஸ்ட் போட்டியில், கேப்டன் விராட் கோலியின் தவறான களவியூகத்தால், மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தின் கடைசி வரிசை வீரர்கள் நிலைத்து பேட் செய்ய இந்திய பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் வாய்ப்பு அளித்தனர்.

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்று கைப்பற்றிவிட்டதால், இந்தப் போட்டியை கவுரவத்துக்காகவே இங்கிலாந்து அணியினர் எதிர்கொண்டு விளையாடி வருகின்றனர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பேட்டிங் செய்தார். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்திருந்தது. பட்லர் 11 ரன்களிலும், ராஷித் 4 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்றைய 2-வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர். சிறிது நேரம் மட்டுமே நிலைத்திருந்த ராஷித் 15 ரன்கள் சேர்த்த நிலையில், பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை பறிகொடுத்தார்.

8-வது விக்கெட்டுக்கு ஸ்டூவர்ட் பிராட், பட்லருடன் இணைந்தார். இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதிக்கும் விதமாக விளையாடினார்கள். முகமது ஷமி மிகச்சிறப்பாகப் பந்துவீசியபோதிலும் அவருக்கு ஒத்துழைப்பு தரும் விதத்தில் களத்தில் பீல்டிங் வியூகத்தை கேப்டன் விராட் கோலி அமைக்கவில்லை. முகமது ஷமியின் பந்துகளைத் தொடமுடியாமல் ஏராளமான பந்துகளில் ஸ்டூவர்ட் பிராடும், பட்லரும் ‘பீட்டன்’ ஆனார்கள்.

முகமது ஷமி வீசும் பந்துகள் நன்றாக ‘ஸ்விங்’ ஆகியதால், அதற்கு ஏற்றார்போல் ஸ்லிப்பில் 3 பேரை விராட் கோலி நிறுத்தி இருந்தால் விக்கெட்டுகளை விரைவாக வீழ்ந்திருக்கும். ஆனால், ஸ்லிப்பில் இரு வீரர்களை நிறுத்திவிட்டு, மற்ற வீரர்களை ‘டீப் விக்கெட்டிலும்’, ‘டீப் கவர்’ ‘மிட் விக்கெட்டிலும்’ பீல்டிங் செய்ய நிறுத்தினார். இதனால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அருகில் எந்த வீரர்களும் இல்லை.

இதனால், பட்லர் அடித்து ஆடுவதற்கும், ‘ஆப்-சைடில்’ பந்துகளைக் கட் செய்து விளையாடுவதற்குக் கோலி எளிதாக வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால், பட்லரும், பிராடும் எளிதாக சிங்கில் ரன்களை அதிகமாக எடுத்தனர். 3-வது ஸ்லிப் இல்லாததால், பேட்டிங் நுனியில் பட்டு சென்ற பந்துகளை தடுக்க முடியாமல் பவுண்டரிகளாகவும், உதிரிகளாகவும் மாறின.

ஸ்டூவர்ட் பிராட், பட்லர் கூட்டணி ஒரு மணிநேரத்தில் 45 ரன்களைக் குவித்து, மிக விரைவாக 250 ரன்களைக் கடந்தனர். பட்லர் 84 பந்துகளில் தனது 10-வது அரைசதத்தை நிறைவு செய்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றும் வகையில் இருபேட்ஸ்மேன்களும் கேட்ச் வாய்ப்புகளைத் தராமல் விளையாடி வெறுப்பானார்கள்.

ஆனால், சரியான களவியூகம் அமைக்கப்பட்டு ஸ்லிப்பில் பீல்டர்களை நிறுத்தியும், அருகே பீல்டர்களை நிறுத்தி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால், வித்தியாசமாக ஷாட் அடிக்க நினைத்து ஷமியின் பந்துவீச்சில் பட்லரும், ஸ்டூவர்ட் பிராடும் விக்கெட்டை பறிகொடுத்திருப்பார்கள். நீண்டநேரம் நிலைத்திருக்கமாட்டார்கள்.

இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் எந்தவிதமான கோளாறும் இல்லை சிறப்பாகவே பந்துவீசினார்கள், ஆனால், விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் ஏற்பட்ட கோளாறுதான் கடைசிவரிசை வீரர்கள் நிலைத்து பேட் செய்யக் காரணமாக அமைந்தது.

கடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்விக்கு முக்கியக் காரணமே கடைசிவரிசை வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யமுடியாமல் திணறியதுதான். அதை தவற்றை இந்த முறையும் செய்தது.

தொடக்கத்தில் திட்டமிட்டு களவியூகத்தை அமைத்து விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டு, கடைசி வரிசை வீரர்கள் பேட் செய்யும்போது, கோலி எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் களத்துக்கு வந்ததை எதிரணியினர் பயன்படுத்திக்கொண்டனர்.

உணவு இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து அணி 300 ரன்களைக் கடந்தது. ஒரு கட்டத்தில் 181 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணியை 300 ரன்கள்வரை சேர்ப்பதற்கு கேப்டன் விராட்கோலியின் திட்டமிடுதல் இல்லாத களவியூகமே காரணம். அதை பட்லரும், பிராடும் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

உணவு இடைவேளையின் போது, இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் சேர்த்திருந்தது. உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஜடேஜா வீசிய ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து பிராட் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு இருவரும் 102 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்த வந்த ஆன்சர்ஸன், பட்லருடன் இணைந்தார். ஜடேஜா பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து ரன் வேகத்தை பட்லர் அதிகப்படுத்த எண்ணினார். ஆனால், ஜடேஜா பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து பட்லர் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 122 ஓவர்களுக்கு 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியத் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், பும்ரா, இசாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x