Published : 03 Sep 2018 05:15 PM
Last Updated : 03 Sep 2018 05:15 PM
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஓரிரு வீரர்களை நம்பியே இந்திய அணி குறிப்பாக அயல்நாட்டுத் தொடர்களில் இருந்து வந்துள்ளது.
இந்தத் தொடரிலும் விராட் கோலி ரன்கள் எண்ணிக்கையில் எங்கோ இருக்க மற்றவர்கள் சில மைல்கள் தள்ளி இருக்கின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து தொடரை வென்றதையடுத்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு கூறியதாவது:
“இந்தத் தொடர் நடுவரிசை வீரர்களால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது பட்லர், ஸ்டோக்ஸ், வோக்ஸ் என்று கூறுகிறேன், வோக்ஸ் லார்ட்சில் ஒரு சதம் மற்றும் விக்கெட்டுகள். இந்தப் போட்டியில் மொயின் அலி, சாம் கரன், மிடில் ஆர்டர் பிரமாதமாக இருக்கிறது.
மாறாக இந்திய மிடில் ஆர்டர், கோலியை கழற்றிவிட்டால் அவ்வளவுதான் பொலபொலவென்று உதிர்ந்து விடுகிறது. ஆனால் பேர்ஸ்டோ மிடில் ஆர்டரில் ஆடும்போது நன்றாக ஆடுகிறார். இதுதான் இங்கிலாந்தின் பலம். இதனால்தான் 2014க்குப் பிறகு இங்கிலாந்து உள்நாட்டில் தொடரை இழக்கவில்லை.
ஆனாலும் இங்கிலாந்துக்கு இன்னும் கொஞ்சம் மேம்பாடு தேவை. நாம் உள்நாட்டில் வெல்கிறோம், பிரமாதமாக வெல்கிறோம் நம்மை இங்கு வீழ்த்துவது கடினம் எல்லாம் சரி...ஆனால் ஆஸ்திரேலியா செல்லும் போது மொயின் அலியை முன்னணி ஸ்பின்னராக அழைத்துச் செல்ல முடியுமா? முடியாது.
பவுலிங் ஆல்ரவுண்டராக கிறிஸ் வோக்ஸை ஆஸி. முன்னால் நிறுத்த முடியுமா? முடியாது. இன்னும் கொஞ்சம் கூடுதல் வேகம் தேவை, இடது கை வேகம் தேவை. இன்னும் சில கேள்விகள் இங்கிலாந்து அணி மீது உள்ளது.
மொயின் அலியை குறை கூற முடியாது, அஸ்வினை விடவும் அபாரமாக வீசினார் மொயின். மிகவும் அபாரமான கிரிக்கெட் வீரர் அவர், ஆனால் வெளிநாடுகளில் இன்னமும் கூட அவர் தன்னை இன்றியமையாதவராக ஆக்கிக் கொள்ள வேண்டும்” என்றார் நாசர் ஹுசைன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT