Published : 13 Sep 2018 05:01 PM
Last Updated : 13 Sep 2018 05:01 PM
118 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஓவல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்த இந்திய அணியை வானாளவ புகழ்ந்தார். அதற்குச் சரியான பதிலடிகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
தென் ஆப்பிரிக்கா முதல் இங்கிலாந்து வரை கேப்டன் கோலி செய்தவற்கெல்லாம் ஆதரவு தெரிவித்து கேள்விக்குரிய அணித்தேர்வின் போது கூட எதுவும் சொல்லாமல் கிட்டத்தட்ட ‘ஜால்ரா’ அடித்து வரும் ரவிசாஸ்திரி, தென் ஆப்பிரிக்கா தோல்வி, தற்போது இங்கிலாந்து தோல்வி, வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடர் அதன் பிறகு நடக்கும் உலகக்கோப்பை என்று கடும் நெருக்கடிகளை சந்திக்கிறார்.
கடந்த 15-20 ஆண்டுகளில் இந்த இந்திய அணியே சிறந்தது என்றும் அயல்நாடுகளில் இந்த அணியே வெற்றி பெறுகிறது என்றும் மற்ற அணிகளெல்லாம் ஏதோ ‘ஓபி’ அணிகள் எனும் தொனியில் பேசி முன்னாள், இந்நாள் வீரர்களிடம் வகையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
கிரிக் இன்போ தலைமை எடிட்டர் சம்பித் பால் தன் ட்விட்டரில் ரவிசாஸ்திரியை விமர்சிக்கும் போது, “தன்னம்பிக்கை ஒரு அருமையான குணம்தான். ஆனால் சுயவிளம்பரம் எனும் நுரைக்குமிழி எப்போதும் சுய-தோல்வியில்தான் முடியும்” என்று சாடியுள்ளார்.
ஹர்ஷா போக்ளே, “இப்போது இரண்டு அயல்நாட்டுத் தொடர்களில் தொடர்ச்சியான தோல்விகள்” என்று கூறியுள்ளார்.
இந்தியா இலங்கையில் 2 தொடர்களையும் மே.இ.தீவுகளில் ஒரு தொடரையும் வென்றது. ஆனால் 15-20 வருடங்களில் இந்த அணிதான் வெற்றி அணி என்று ரவிசாஸ்திரி இறுமாப்புடன் கூறியது சில முன்னாள் வீரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
சவுரவ் கங்குலி, சாஸ்திரியின் கருத்து முதிர்ச்சியற்றது என்றும் சாஸ்திரி அணியை மேம்படுத்தும் வழியைப் பார்க்க வேண்டும் என்று சாடினார்.
விரேந்திர சேவாக், “களத்தில் விளையாடுவதை வைத்துத்தான் அயல்நாட்டில் சிறந்த அணி என்று கூற முடியுமே தவிர ஓய்வறையில் அமர்ந்து கொண்டு அதைப்பற்றி பேச முடியாது” என்று சாடினார்.
உடனேயே விராட் கோலி, தனக்கு ‘பூரண’ ஆதரவு தரும் ரவி சாஸ்திரிக்கு ஒத்து ஓதும் விதமாக, “நாம் சிறந்த அணி என்று நாம் நம்ப வேண்டும், ஏன்? இதில் தவறென்ன” என்று கேட்டார்.
அதற்கு ஒரு பத்திரிகையாளர், ‘என்னால் அப்படிக் கூற முடியாது’ என்றார் உடனே கோலி அவருக்கு உங்களால் கூற முடியாது என்றால் அது உங்கள் கருத்து’ என்றார்.
தற்போது கோலி இல்லாமல் ரோஹித் சர்மா தலைமையில் 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்கச் செல்கிறது. வரும் 19ம் தேதி பரமவைரி பாகிஸ்தானுடன் தோற்றால் ரவிசாஸ்திரி தலை மேலும் உருளும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT