Published : 28 Sep 2018 09:50 PM
Last Updated : 28 Sep 2018 09:50 PM

லிட்டன் தாஸ் அதிரடி சதம்; மிரட்டிய வங்கதேச பேட்டிங்; அடக்கிய இந்தியப் பந்து வீச்சு: 222 ரன்களுக்கு ஆல் அவுட்

துபாயில் நடைபெறும் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட வங்கதேசம் லிட்டன் தாஸ் சதத்துடன் 120/0 என்ற நிலையில் மிரட்ட, அதன் பிறகு இந்தியப் பந்து வீச்சு அடக்க 48.3 ஓவர்களில் 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

102 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து நல்ல தொடக்கத்தை வீணடித்தது வங்கதேசம், சதக்கூட்டணியை உடைத்தவர் கேதார் ஜாதவ், 32 ரன்களில் வலுவாகச் சென்று கொண்டிருந்த மெஹதி ஹசன் மிராஸை சாதுரியப் பந்து வீச்சில் வீழ்த்தினார், ஆஃப் சைடில் ராயுடு கேட்ச் எடுத்தார். அதன் பிறகு இம்ருல் கயேஸ் (2), முஷ்பிகுர் ரஹிம் (5), மொகமது மிதுன் (2) மஹ்முதுல்லா (4) ஆகியோர் வரிசையாக ஒருவர் பின் ஒருவர் வரிசையாக நடையைக் கட்ட வங்கதேசம் 32.2 ஓவர்களில் 151/5 என்று சரிந்தது.

இதில் மொகமது மிதுன் ரன் அவுட் ஜடேஜாவின் கிளாசிக் ஆகும். பயங்கரமாக அடித்து வந்த லிட்டன் தாஸ், பந்தை ஆஃப் திசையில் ஒரேயடி அடிக்க எக்ஸ்ட்ரா கவரில் ஜடேஜா டைவ் அடித்து பவுன்ஸ் ஆன பந்தையும் சரியாகச் சேகரித்தார். லிட்டன் தாஸ் பந்தைப் பார்த்து கொண்டிருக்க எதிர்முனையிலிருந்து கிளம்பினார் மொகமது மிதுன், ஜடேஜா முதலில் கீப்பர் முனைக்கு த்ரோ அடிக்கப் பார்த்து பிறகு முடிவை மாற்றி ரன்னர் முனையில் அடித்தார். பந்து அழகாக வர சாஹல் ரன் அவுட் செய்தார், அதியற்புத ஸ்டன்னிங் பீல்டிங் ஜடேஜாவினுடையது. அது பவுண்டரி ஷாட் ஆகும்.

லிட்டன் தாஸ் அபார சதம், மிராஸுடன் சதக்கூட்டணி:

ரோஹித் சர்மா வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தது தவறோ என்று நினைக்குமளவுக்கு லிட்டன் தாஸ் அதிரடித் தாக்குதல் இன்னிங்சை ஆடத் தொடங்கினார். முதல் 3 ஓவர்களில் மெஹதி எட்ஜ் பவுண்டரியுடன் 5 ரன்கள்தான் வந்தது. ஆனால் பும்ராவின் அடுத்த ஓவர் முதல் பந்தை மேலேறி வந்து ஸ்கொயர்லெக்கில் பவுண்டரி அடித்தார் லிட்டன் தாஸ். அதே ஓவரில் மெஹதி ஹசன் கவரில் ஒரு பஞ்ச் விட்டார் பவுண்டரி. புவனேஷ்வர் குமாரின் அடுத்த ஓவரிலும் இரண்டு அருமையான பவுண்டரிகள் அடித்தார் லிட்டன்.

6வது ஓவரில் சாஹலைக் கொண்டு வந்தார் ரோஹித், அந்த ஓவரில் பவுண்டரி வரவில்லை, ஆனால் அடுத்த பும்ரா ஓவரில் இன்ஸ்விங்கரை இறங்கி வந்து மிட் ஆன் தலைக்கு மேல் தூக்கி பவுண்டரி விளாசினார். அடுத்த சாஹல் ஓவரில் சாஹலை ஒரு ஸ்வீப் சிக்ஸ், மற்றும் முன் காலை ஒதுக்கிக் கொண்டு லாங் ஆன் மேல் இன்னொரு சிக்ஸ் என்று லிட்டன் தாஸ் தீபங்களை ஏற்றத் தொடங்கினார் மீண்டும் பும்ராவை புல்டாஸில் ஆஃப் திசையில் பவுண்டரி விளாசி 29 பந்துகளில் 46 என்று லிட்டன் தாஸ் அவசரம் காட்டி ஜடேஜா பந்தை ஸ்கொயர் ட்ரைவில் பவுண்டரி விளாசி 33 பந்துகளில் அரைசதம் கடந்தார் லிட்டன். ஆனால் அதே ஓவரில் ஜடேஜாவிடம் அவர் ஆட்டமிழந்திருக்க வேண்டியது ஆனால் சாஹல் கேட்சை விட்டார். 12 ஓவர்களில் 74 என்று இருந்த ஸ்கோர் கொஞ்சம் மட்டுப்பட தொடங்கியது. ஜடேஜாவை கட் ஷாட் பவுண்டரி அடிக்க இருவரும் சேர்ந்து 27 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு வங்கதேசத்துக்கு தொடக்க சதக்கூட்டணி அமைத்தனர்.

தொடர்ந்து ஜடேஜாவை 2 பவுண்டரிகள் விளாசினார் லிட்டன். கடைசியில் 21வது ஓவரில் விக்கெட்டுக்காக கேதர் ஜாதவ்விடம் தஞ்சமடைந்தார் ரோஹித் சர்மா அது கைகொடுத்தது, ராயுடு கேட்ச் பிடிக்க மெஹதி ஹசன் 32 ரன்களில் வெளியேறினார் வங்கதேசம் 21 ஓவர்களில் 120/1 என்று அபாரமாகத் திகழ்ந்தது. அப்போது லிட்டன் தாஸ் 66 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து நின்று கொண்டிருந்தார்.

லிட்டன் நிற்க சரிவு:

முதல் 3 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து அதிர்ச்சியடைந்த சாஹல் இம்ருல் கயேசை எல்.பி. செய்து வீட்டுக்கு அனுப்பினார். 27வது ஓவரில் ஜாதவ்வின் லாலிபாப் அரைக்குழி பந்தை முஷ்பிகுர் ரஹிம் வாரிக்கொண்டு தூக்கி அடிக்க பெரிய பவுண்டரிக்கு அருகில் பும்ராவிடம் கேட்ச் ஆனார். மிக முக்கிய விக்கெட்டை ஜாதவ் கழற்றினார்.

கடந்த போட்டியில் அரைசதம் கண்டு வெற்றிக்கு வித்திட்ட மொகமது மிதுன், ஜடேஜாவின் மிக அருமையான பீல்டிங்குக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். 27வது ஓவரில் லிட்டன் தாஸ், ஜாதவ்வை மீண்டும் ஒரு ஸ்வீப்பில் பவுண்டரி விளாசி சதத்துக்கு அருகில் வந்தார், அடுத்த பந்தை லாங் ஆனில் தள்ளிவிட்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன் முதல் சதத்தை எட்டினார் லிட்டன். அதன் பிறகு மஹ்முதுல்லா இறங்க பவுண்டரிகள் வறண்டன டாட்பால்கள் நெருக்கடி அதிகரித்தது. 15 பந்துகளில் 4 ரன்களுடன் தடுமாறிய மஹ்முதுல்லா மோசமான ஷாட்டில் குல்தீப் யாதவ்வின் முதல் விக்கெட்டாக நடையைக் கட்டினார். சவுமிய சர்க்கார் இறங்க மீண்டும் டாட் பால்கள், ரன் வறட்சி பவுண்டரி வறட்சி, டைட்டாக்கினர் இந்திய பந்து வீச்சாளர்கள்.

கடைசியில் 40வது ஓவரில் சவுமியா சர்க்கார், ஜாதவ்வை மிட்விக்கெட் மேல் சிக்ஸ் அடித்து பவுண்டரி வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். லிட்டன் தாஸ் 117 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் பிரமாதமான 121 ரன்களை எடுத்து குல்தீப்பின் கூக்ளியில் தோனியின் வெகுவிரைவு கைகளினால் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். 188/6 என்று இருந்த வங்கதேசம் அதன் பிறகு மோர்டஸாவும் தோனி-குல்தீப் கூட்டணியில் ஸ்டம்ப்டு ஆனார். நஜ்முல் இஸ்லாம் ரன் அவுட் ஆனார், கடைசியாக சவுமியா சர்க்காரும் (33) தோனி, ராயுடு கூட்டணியில் ரன் அவுட் ஆக ரூபல் ஹுசைன் ஸ்டம்பை பும்ரா பதம் பார்க்க வங்கதேசம் கடைசி 10 விக்கெட்டுகளை 122 ரன்களுக்கு இழந்து 222 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 45 ரன்களுக்கு 3 விக்கெட். ஜாதவ் 41 ரன்களுக்கு 2 விக்கெட். தற்போது இந்திய அணி தவண் விக்கெட்டை இழந்து 37/1 என்று ஆடிவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x