Published : 18 Apr 2014 10:00 AM
Last Updated : 18 Apr 2014 10:00 AM
சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ஐசிஎப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது ஐசிஎப்.
அதேநேரத்தில் முன்னணி அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது. எனவே அந்த அணி பின்னடைவிலிருந்து மீண்டு வருவது இனி பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற சீனியர் டிவிசன் போட்டியில் ஐசிஎப் அணி, ஹிந்துஸ்தான் ஈகிள்ஸை சந்தித்தது.
இரு பெனால்டிகள் வீண்
ஆட்டம் தொடங்கிய முதல் 10 நிமிடங்களிலேயே ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. ஐசிஎப் பின்கள வீரர் விமல், ஈகிள்ஸ் ஸ்டிரைக்கர் ஜெரிஸ் கெல்சியை கீழே தள்ளியதால் இந்த பெனால்டி கிடைத்தது. அந்த வாய்ப்பில் ஈகிள்ஸ் மிட்பீல்டர் வன்டால சேனா அடித்த பந்தை, ஐசிஎப் கோல் கீப்பர் சதீஷ் குமார் வலது புறம் பாய்ந்து அற்புதமாகத் தகர்க்க, ஈகிள்ஸ் அணியின் கோல் கனவு ஏமாற்றத்தில் முடிந்தது.
இதன்பிறகு இரு அணிகளும் கோலடிக்க முயற்சித்த நிலையில், ஈகிள்ஸ் அணியின் வலதுபுற தடுப்பாட்டக்காரர் கவியரசன், கோல் ஏரியா பகுதியில் இருந்த ஐசிஎப் லெப்ட் விங்கர் கார்த்திக்கை கீழே தள்ள, ஐசிஎப்புக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் ஸ்டிரைக்கர் பிரெட்டி கோல் கம்பத்தின் ஓரத்தில் அடிக்க, பந்து வெளியில் வந்தது. இதன்பிறகு இரு அணிகளுமே ஒரு சில வாய்ப்புகளை கோட்டைவிட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் ஐசிஎப் வீரர் சரவணக்குமார் கோல் கம்பத்தின் அருகில்வரை பந்தை எடுத்துச் சென்று கோலடிக்க முயன்றபோது, அதை ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் கோல் கீப்பர் ராஜகுரு மற்றும் பின்கள வீரர் சாஹா ஆகியோர் இணைந்து முறியடித்தனர். ஐசிஎப் அணிக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பில் ஈகிள்ஸ் கோல் ஏரியா பகுதியில் அந்த அணி வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், அதை கோட்டைவிட்டார் சரவணக்குமார்.
73-வது நிமிடத்தில் கோல்
இதன்பிறகு ஐசிஎப் லெப்ட் விங்கர் கார்த்திக், இடது புறத்தில் பந்தை கடத்தி வந்தார். அப்போது ஈகிள்ஸ் மிட்பீல்டர் அமீருதீன் அதை தடுக்க முயன்றாலும், அவரை பின்னுக்குத்தள்ளிய கார்த்திக், அங்கிருந்து நேரடியாக மிகத் தாழ்வாக கோல் கம்பத்தை நோக்கி பந்தையடித்தார். அப்போது அதை ஈகிள்ஸ் கோல் கீப்பர் மறித்தார். அவரின் கையில் பட்ட பந்து, கோல் கம்பத்தின் மிக அருகில் இடதுபுறமாக வெளியில் சென்றது. இதனால் மயிரிழையில் ஐசிஎப்பின் கோல் நழுவியது.
தொடர்ந்து போராடிய ஐசிஎப் அணிக்கு 73-வது நிமிடத்தில் கோல் கிடைத்தது. அந்த அணியின் நிர்மல் இடது பகுதியில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடிக்க, அங்கு நின்ற ஸ்டிரைக்கர் பிரெட்டி தலையால் முட்டி கோல் கம்பத்துக்குள் திருப்பினார். அப்போது அதை தடுக்க முயன்ற கோல் கீப்பருக்கு மேலாக சென்ற பந்து கோலானாது. அதுவே வெற்றிக் கோலாகவும் அமைந்தது.
ஆட்டநாயகன் சதீஷ்
அசத்தலாக ஆடி பல்வேறு கோல் வாய்ப்புகளை தகர்த்த ஐசிஎப் கோல் கீப்பர் சதீஷ்குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணி இந்த ஆட்டத்தில் தோற்றிருந்தாலும்கூட, அதன் பின்களம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்றத்தைக் காண முடிந்தது. இதற்கு முந்தைய ஆட்டத்தில் இந்தியன் வங்கியிடம் 3 கோல்களை வாங்கி தோற்றது ஹிந்துஸ்தான். அதற்கு அந்த அணியின் பின்கள வீரர்கள் மோசமாக ஆடியதே காரணமாக அமைந்தது. ஆனால் இந்த முறை பின்கள வீரர்கள் ஓரளவு சிறப்பாக ஆடியதால், ஐசிஎப் அணியால் பெரிய அளவில் கோலடிக்க முடியாமல் போனது. ஐசிஎப் அணியில் வழக்கம்போல் கார்த்திக், சுமன், நிர்மல், பிரெட்டி உள்ளிட்டோரின் ஆட்டம் அசத்தலாக அமைந்தது.
முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக் போட்டியில் சென்னை எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் எஸ்.பி.ஐ. அணியைத் தோற்கடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT