Published : 18 Sep 2018 06:13 PM
Last Updated : 18 Sep 2018 06:13 PM
2013-ம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு இருதரப்பு தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடியதில்லை, ஆனால் தொடர்ந்து ஐசிசி தொடர்களான உலகக்கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டும் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடி வருகிறது.
ஏன் இந்த இரட்டைத் தர்க்கம் என்று கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் கூறியிருப்பதாவது:
ஒரு அணியுடன் விளையாடக் கூடாது என்று தீர்மானித்தால் அந்தத் தடை சீராக இருக்க வேண்டும், இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் ஆடமாட்டோம் ஆனால் ஐசிசி தொடர்களை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற இரட்டைத்தர்க்கம் சரிப்படாது.
ஆசியக் கோப்பையில் ஆடும்போது ஏன் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் ஆட முடியவில்லை? இருதரப்பு தொடர்களில் ஆடக் கூடாதா பிறகு ஏன் ஆசியக் கோப்பை உள்ளிட்ட ஐசிசி தொடர்களில் ஆட வேண்டும்?
இதற்கான தீர்வை அரசும், பிசிசிஐ-யும் எடுப்பது அவசியம்.
அனைவரையும் போல் நானும் பாகிஸ்தானுடனான போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், ஆனால் வெறியெல்லாம் ஒன்றுமில்லை. இதுவும் ஒரு போட்டி இந்தியா வெற்றி பெற விரும்பும் போட்டி அவ்வளவே, பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் உணர்ச்சிகரங்கள் இருக்கும் ஆனால் விளையாட்டு வீரராக அப்படி களமிறங்குதல் கூடாது.
எந்த அணியை எதிர்கொண்டாலும் வீழ்த்த வேண்டும் அது நாட்டுக்குப் பெருமை, பாகிஸ்தானை வீழ்த்துவது மட்டும் பெருமை என்று எண்ணக்கூடாது. ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக அருமையாக இருக்கும், ஏனெனில் பாகிஸ்தான் அணியும் இப்போது நல்ல நிலையில் உள்ளது.
இவ்வாறு கூறினார் கம்பீர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT