Published : 02 Sep 2014 04:49 PM
Last Updated : 02 Sep 2014 04:49 PM
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் எழுதிய சுயசரிதை நூல் நவம்பர் 6ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
"Playing It My Way-My Autobiography" என்ற சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் மற்றும் சொந்த வாழ்க்கை பற்றிய சுயசரிதை நூல் நவம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்று நூலின் வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது,
"எனது வாழ்க்கை பற்றி எழுதவேண்டும் என்ற முடிவு எடுத்தவுடனேயே நான் நேர்மையாக எழுதவேண்டும் என்பதை அறிந்திருந்தேன். ஏனெனில் நான் அப்படித்தான் எனது ஆட்டத்தை ஆடினேன், இதற்கு முன்பாக நான் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களையும் நான் பேசியாக வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன்.
இதோ நான் எனது கடைசி இன்னிங்ஸின் முடிவில் நின்று கொண்டிருக்கிறேன், கடைசியாக பெவிலியன் நோக்கி நடைபோடும் போது முதன் முதலாக கிரிக்கெட் மட்டையை தொட்ட காலம் முதல் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த சுயசரிதை அந்த அடிப்படையில் எழுதப்பட்டதே” என்று சச்சின் தனது சுயசரிதை நூல் பற்றி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுதும் சச்சின் டெண்டுல்கருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மெனாக 100 சதங்கள் என்ற ஒருவரும் எளிதில் முறியடிக்க முடியாத மைல்கல்லை எட்டியவர்.
இவரது சுயசரிதை நூல் அவர் மும்பை புறநகர்ப்பகுதிகளில் தெருவிலும் சந்துகளிலும் ஆடிய கிரிக்கெட் முதல் 16 வயதில் டெஸ்ட் விளையாடிய அனுபவத்தைத்தொட்டு, 100வது சதம் எடுத்து சாதனை புரிந்தது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட உணர்வுகள் வரை அனைத்து விஷயங்களையும் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதாக நூல் வெளியீட்டு நிறுவனமான ஹாடர்&ஸ்டவ்டன் தெரிவித்துள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களையும், கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட விஷயங்களையும் நேர்மையாக, இதுவரை வெளிவராத தகவல்களுடன் பதிவு செய்திருப்பதாக வெளியீட்டு நிறுவனத்தின் ஆசிரியர் ராடி புளூக்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT