Published : 18 Sep 2018 09:08 AM
Last Updated : 18 Sep 2018 09:08 AM

ஆசியக் கோப்பை: இலங்கையை வீட்டுக்கு அனுப்பியது ஆப்கான்; ஸ்பின்னில் மடிந்து அதிர்ச்சி

அபுதாபியில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் பி ஆட்டத்தில் முதலில் வங்கதேசத்திடமும் பிறகு நேற்று ஆப்கானிஸ்தானிடமும் தோற்று இலங்கை அணி அதிர்ச்சி வெளியேற்றம் கண்டது.

5 முறை ஆசிய சாம்பியன்களான இலங்கை 3 நாட்களில் ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்கத்திலிருந்தே ஆப்கான் அணி பாசிட்டிவ் மனநிலையில் இருந்தனர், டாஸ் வென்ற ஆப்கன் கேப்டன் அஸ்கர் தயங்காமல் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். நல்ல தொடக்கம் கண்டதோடு அந்த மந்தமான பிட்சில் 249 ரன்கள் என்ற மரியாதையான இலக்கை எட்டியது. பிறகு ஸ்பின்னர்களை வைத்து இலங்கையை 158 ரன்களுக்குச் சுருட்டி 91 ரன்களில் அபார வெற்றி பெற்று இலங்கையின் ஆசியக் கோப்பை கனவுகளைத் தகர்த்தது.

சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கான், வங்கதேசத்துடன் தகுதி பெற்றது.

பேட்டிங்கில் படுமோசமாக தனக்குத் தானே இலங்கை அணி குழிதோண்டிக்கொண்டது, அதே போல் ஆப்கன் அணியின் அதிகபட்ச ஸ்கோரை எடுத்த ரஹ்மத் (72) கொடுத்த கேட்சை விட்டது, ஏகப்பட்ட மிஸ்பீல்டிங்குகள், ரன் அவுட் வாய்ப்புகளைக் கோட்டை விட்டது இலங்கை வீடுதிரும்ப காரணங்களாயின.

இலக்கை விரட்டும்போது எந்த ஒரு அர்த்தமும் அவர்களது பேட்டிங்கில் தெரியவில்லை, குசல் மெண்டிஸ் 2வது பந்தில் முஜீப் உர் ரஹ்மானின் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். அதன் பிறகே மோசமான ஷாட் தேர்வுகள், டிசில்வா, ஜெயசூரியா ஆகியோரது அகால ரன் அவுட்கள் இலங்கைக்கு ஆணியடித்தன.

நயீப், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், மொகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இலங்கை இன்னிங்ஸில் நம்பிக்கை தந்த இரண்டு கணங்கள், ஒன்று 2வது விக்கெட்டுக்காக தரங்கா, தனஞ்ஜயா 54 ரன்களைச் சேர்த்தது, இந்த கூட்டணி மோசமான ரன் அவுட்டினால் முடிந்தது, தனஞ்ஜய டிசில்வா 2வது ரன்னை ஓடியே தீருவேன் என்று அடம்பிடிக்க டிசில்வாவும் தரங்காவும் ஒரே முனையில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க ரன் அவுட் ஆனார் டிசில்வா.

பெரேரா 17 ரன்களில் ரஷீத் கானின் முதல் ஓவரிலேயே ஸ்வீப் ஆட முடியாத பந்தை ஆடி பவுல்டு ஆனார். தரங்கா உடனேயே தடவலான 36 ரன்களுடனும் டிசில்வா விக்கெட்டை எடுத்தும் (ரன் அவுட்டுக்கு இவரும் காரணம்) நயீப் பந்தை மிட் ஆஃப் கையில் கொடுத்து வெளியேறினார்.

ஜெயசூரியா ரன் அவுட்டுக்கு கேப்டன் மேத்யூஸ் பிரதான காரணமானார் மிட்விக்கெட்டில் அடித்த ஷாட்டுக்கு யெஸ், நோ என்று கபடி விளையாட ஜெயசூரியா ரன் அவுட் ஆனார் இலங்கை 108/5.

 

மேத்யூஸ், பெரேரா மீட்க நினைக்கையில் 22 ரன்களில் மேத்யூஸ் லாங் ஆனில் கேட்ச் ஆகி வெளியேறினார். பெரேரா 28 ரன்களில் குல்பதின் நயீப் பந்தில் பவுல்டு ஆகி வெளியேற இலங்கை 156/9 என்று ஆனது. முன்னதாக ஷனகா, தனஞ்ஜயா சொற்ப ரன்களில் வெளியேறினர், மலிங்கா ரஷீத் கானிடம் எல்.பி. ஆகி வெளியேறினார். 41.2 ஓவர்களில் 158 ரன்களில் சுருண்டு ‘வீடு’பேறு எய்தியது.

மாறாக ஆப்கான் அணி பேட்டிங்கில் நிலையாக ஆடினர் தொடக்கத்தில் மொகமது ஷஜாத் (34), இசானுல்லா (45) முதல் விக்கெட்டுக்காக 57 ரன்களைச் சேர்த்தனர். இருவருமே தனஞ்ஜெயாவிடம் எல்.பி. ஆகி வெளியேறினர். 25 ஓவர்களில் 107/2 என்று கப்பல் திசைமாறாமல் சென்றது. கேப்டன் அஸ்கர் 1 ரன்னில் ஜெயசூரியாவிடம் எல்.பி.ஆக 108/3 என்று ஆனபோது இலங்கை நெருக்கத் தவறிவிட்டது. ரஹ்மத் ஷா அபாரமாக இன்னிங்சை கட்டமைத்தார், பரந்த களவியூகத்தில் சிங்கிள்களை, இரண்டுகளை எடுத்ததோடு அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்தார்.

எல்.பி.வாய்ப்பை நன்றாகக் கணித்த ரஹ்மத் ஷா, சாதுரியமாக நேர் பந்துகளை மட்டையை வீசாமல் தடுத்தாடினார். 44வது பந்தில்தான் முதல் பவுண்டரி அடித்தார் ரஹ்மத் ஷா. ஆனால் மிட் ஆன் மேல் தூக்கி பவுண்டரி அடித்து 63 பந்துகளில் அரைசதம் எடுத்தார். 90 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த ரஹ்மத் ஷா ரன் விகிதத்தை ஏற்ற நினைத்து சமீரா பந்தில் டீப்பில் கேட்ச் ஆனார்.

முடிவு ஓவர்களில் இலங்கை அணி கொஞ்சம் நன்றாக வீசினர், பெரேரா 9 ஓவர்களில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள். மலிங்கா அன்று 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார் நேற்று 10 ஓவர்களில் 66 ரன்கள் விளாசப்பட்டார். மொத்த ரன் விகிதமே 5 ரன்களுக்குக் குறைவு ஆனால் மலிங்கா கொடுத்த ரன்கள் ஓவருக்கு 6.6. ரஷீத் கான் 13 ரன்களுக்கு பிரமாதமாக ஆடினார், ஆனால் அவரை இன்னும் கொஞ்சம் முன்னால் களமிறக்கும் முயற்சியை ஆப்கான் மேற்கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமே.

மொத்தத்தில் ஒரு அருமையான முனைப்புடன் கூடிய வெற்றிக்கான கிரிக்கெட்டை ஆப்கான் ஆட, கேட்ச் ட்ராப், மிஸ்பீல்டிங், பேட்டிங்கில் ரன் அவுட்கள், தவறான ஷாட்கள் என்று இலங்கை அணி படுமோசமாக ஆடித் தோற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x