Last Updated : 23 Jun, 2019 08:57 AM

 

Published : 23 Jun 2019 08:57 AM
Last Updated : 23 Jun 2019 08:57 AM

கேன் வில்லியம்ஸ் பிரம்மிப்பூட்டும் சதம்: மே.இ.தீவுகள் தோற்றாலும் பிராத்வெய்ட் தோற்கவில்லை: பிரமாண்ட கேட்சால் நியூஸி. வெற்றி

கேன் வில்லியம்ஸனின் பிரம்பூட்டும் சதம், கார்லோஸ் பிராத்வெய்ட்டின் ஆகச்சிறந்த எதிர்ச் சதம், இவர்கள் இருவரின் யாருடைய ஆட்டத்தை புகழ்வது எனத் தெரியவில்லை. நேற்றைய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து…

வில்லியம்ஸனின் அர்ப்பணிப்பு சதம், போல்ட், பெர்குஷனின் நெருக்கடி தரும் பந்துவீ்ச்சு ஆகியவற்றால், மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

5 ரன்னில் தோற்கடித்தது என்பதைக் காட்டிலும் “5 இஞ்ச்சில்” தோற்கடித்தது எனலாம். ஏனென்றால் ஆட்டத்தின் முடிவு அப்படித்தான் இருந்தது.

46 ஓவர்கள் வரை களத்தில் இருந்து 148 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் ஆட்டநாயகனாகத்தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு கிடைத்த தோல்வியாக இது இருக்கலாம், ஆனால் நேற்றைய ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு, பிராத்வெய்ட் தோற்கவில்லை என நிச்சயம் தெரிந்திருக்கும்.

இந்த போட்டியைப் பொருத்தவரை “ஆட்டநாயகன் வில்லியம்ஸன் மட்டுமல்ல, பிராத்வெய்ட்டும்தான்”.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள்சேர்த்தது. 292 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 49 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து 5 ரன்னில் தோல்விஅடைந்தது.

இந்த மூலம் நியூஸிலாந்து அணி 6 போட்டிகளிலும் 5-ல் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 போட்டிகளில ஒரு வெற்றி 4 தோல்விகளுடன் 3 புள்ளிகளுடன்7-வது இடத்தில் இருக்கிறது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியைப் பொருத்தவரைக்கும் கிறிஸ் கெயில், ஹெட்மயர், பிராத்ெவய்ட் ஆகியோரின் ஆட்டம் நேற்று முத்தாய்ப்பாக இருந்தது. தொடக்கத்திலேயே மே.இ.தீவுகள் விக்கெட்டுகள் இழந்தபின், கெயிலும், ெஹட்மெயரும் அமைத்த பாட்னர்ஷிப் அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது.

ஆனால், 142 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை மே.இ.தீவுகள் இழந்திருந்திருந்தது. களத்தில் அரைசதம் அடித்த இரு பேட்ஸ்மேன்கள் கெயில், ஹெட்மெயர் இருந்தனர். ஆனால், அடுத்த சிறிதுநேரத்தில் 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என தடுமாறியது. ஆட்டம் சிறிதுநேரத்தில் திசைமாறியது.

அதிலும் குறிப்பாக பெர்குஷன் வீசிய 22-வது ஓவர் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பெர்குஷனின் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஹெட்மயர்(54ரன்கள்), ஹோல்டர்(0) ஆட்டமிழந்தனர். கிராண்ட்ஹோம் பந்தில் கெயில்(87ரன்கள், 6சிக்ஸ்,8பவுண்டரி) ஆட்டமிழந்தார்

அதேபோல, போல்ட் வீசிய 27-வது ஓவரில் நர்ஸ்(1), லூயிஸ்(0) ஆட்டமிழந்ததால், ஆட்டம் நியூஸிலாந்து பக்கம் திரும்பியது. இதில் ஹோல்டர் மட்டும் நிலைத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும்.

ஆனால், அதன்பின் பிராத்வெய்ட் ஆடிய இன்னிங்ஸ்தான் உண்மையில் மிகச்சிறப்பானது. 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜம்பாப்வேக்கு எதிராக கபில்தேவ் ஆடிய ஆட்டத்தை பிராத்வெய்ட் நினைவுபடுத்தினார்.

முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தபின் டெய்லண்டர் பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டு ஆட்டத்தை இஞ்ச், இஞ்ச்சாக தங்கள் பக்கம் நகர்த்தி மைதானத்தில் ரசிகர்கள் அனைவரையும் இருக்கையின் நுனியின் அமரவைத்த பிராத்வெய்ட்டின் ஆட்டம் அற்புதம்.

அதிலும் பேட்டிங் தெரியாத கீமர் ரோச், காட்ரெல் இருவரையும் வைத்துக்கொண்டு ஆட்டத்தை பிராத்வெய்ட் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்த விதம் தேர்ந்த கிரிக்கெட் வீரர் என்பதை நிரூபித்தது. ஒவ்வொரு பந்தையும் நிதானமாக கவனித்து,களத்தில் பீல்டிங் செட் அப்பை பார்த்து, எங்கு பந்தை அடிக்கலாம் என்று சிந்தித்து நிதானமாக பிராத்வெய்ட் விளையாடினார். 52 பந்துகளில் பிராத்வெய்ட் அரைசதம் அடித்தார்.

ரோச்(14)ரன்னில் ஹென்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோச்சுடன் சேர்ந்து 8-வதுவிக்கெட்டுக்கு 47 ரன்கள் பாட்னர்ஷி்ப் அமைத்தார் பிராத்வெய்ட். 211 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது மே.இ.தீவுகள்.

அடுத்துவந்த காட்ரெலையும், திறமையாக பிராத்வெய்ட் பயன்படுத்தினார். இருவரும் 44 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். காட்ரெல் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 245 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது மே.இ.தீவுகள்.

கடைசிவிக்கெட்டுக்கு வந்த தாமஸை வைத்துக்கொண்டு பிராத்வெய்ட் ஆடிய ஆட்டம் அற்புதம். தாமஸ்க்கு எந்த ஸ்டிரைக்கையும் கொடுக்காமல் ஒருரன் ஓடாமல் பிராத்வெய்ட் ஆட்டத்தை நகர்த்தினார்.

கடைசி 3 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டபோதுதான் பிராத்வெய்ட் விஸ்ரூபமெடுத்தார். கடைசி விக்கெட்டான தாமஸுடன் பிராத்வெய்ட் களத்தில் இருந்தார்.

ஹென்ரி வீசிய 48-வது ஓவரை பிராத்வெய்ட் கிழித்து எறிந்துவிட்டார். 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அரங்கையே அதிரவைத்தார்.

நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸனுக்கு பீல்டர்களை எங்கு நிறுத்துவது எனத்தெரியவில்லை. எங்கு நிறுத்தினாலும் பந்து வெளியேதான் சென்றது. அந்த ஒரு ஓவரில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார் பிராத்வெய்ட். மைதானத்தில் இருந்த நியூஸிலாந்து ரசிகர்கள் அனைவரும் தலையில் கைவைத்து அமர்ந்தனர்.

கரீபியன்ஸ் ரசிகர்களின் கரகோஷம் காதைப்பிளந்தது. 80 பந்துகளில் பிராத்வெய்ட் சதம் அடித்தார். உலகக்கோப்பைப் போட்டியில் இவர் அடித்த முதல்சதமாக அமைந்தது. டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் ஓவரை வெளுத்த பிராத்வெய்ட் நினைவு அப்போது வந்தது.

12 பந்துகள் 8ரன்கள்

கடைசி 2 ஓவர்களி்ல் வெற்றிக்கு 8 ரன்கள்தான் தேவைப்பட்டது. 49-வது ஓவரை நீஷம் வீசினார். முதல் இரு பந்துகள் பீட்டன் ஆகிய நிலையில் 3-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார் பிராத்வெய்ட் அடுத்த இருபந்துகளும் நிதானமாக ஆடிவிட்டு கடைசிப்பந்தை லாங்-ஆன் திசையில் தூக்கி அடித்தார். அனைவரும் கண்களும் வானத்தில் இருக்க பந்து சிக்ஸரை நோக்கிச் சென்றது.

5 இஞ்ச்சில் வெற்றி

பவுண்டரி கோட்டிற்கு இஞ்ச்க்கு முன், டிரன்ட் போல்ட் பிரமாண்டமான கேட்ச்ைச பிடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். பிராத்வெய்ட் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். எல்லைக் கோட்டுக்கும், போல்ட் பிடித்த கேட்ச்குக்கும் இடைவெளி 5 இஞ்ச் மட்டுமே இருந்தது

நியூஸிலாந்து அணி உண்மையில் 5 ரன்களில் வெல்லவில்லை, 5 இஞ்ச்சுகளில்தான் வென்றது. போல்ட் உண்மையில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிலும் இவர் பிடித்த கேட்சையும் விக்கெட்டாகவே கொள்ள வேண்டும். 49 ஓவர்களில் மே.இ.தீவுகள் அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளையும், பெர்குஷன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஜென்டில்மேன் ஆட்டம்

கடைசிப்பந்தை மட்டும் பிராத்வெய்ட் பொறுமையாக அடித்துவிட்டு, அடுத்த ஓவரை எதிர்கொண்டிருந்தால் நிச்சயம் மே.இ.தீவுகள் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், பிராத்வெய்ட் கடைசிநேரத்தில் ஸ்மார்ட்டாக விளையாடத் தவறிவிட்டார். அணியை வெற்றியின் நுனிவரை அழைத்துவந்தும் முடியவில்லையே என நினைத்து களத்தில் மண்டியிட்டு பிராத்வெய்ட் எனும்போராளி சரிந்தார். அவரை நியூஸிலாந்து வீரர்கள் தேற்றி அழைத்துச்சென்றது நல்ல கிரிக்கெட்டுக்கு அடையாளம்.

டெய்லண்டர்கள் காட்ரெல்(15), ரோச்(14) என எடுத்த ஸ்கோர் குறைவுதான் ஆனாால் இருவரின் ஆட்டம் அற்புதமானது.

அதிர்ச்சித் தொடக்கம்

இதுஒருபக்கம் இருக்க, நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸனின் ஆட்டம் மிகப்பிரம்மாண்டமாகும். காட்ரெல் வீசிய முதல் ஓவரிலேயே கப்தில், மன்ரோ டக்அவுட்டில் வெளியேற 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து தடுமாறியது.

வலுவான பாட்னர்ஷிப்

3-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர், வில்லியம்ஸன் கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது. இருவரையும் பிரிக்க முடியாமல் மே.இ.தீவுகள் வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். வில்லியம்ஸன் 75 பந்துகளிலும், டெய்லர் 68 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.

வில்லியம்ஸன் அற்புத சதம்

3-வது விக்கெட்டுக்கு இருவரும் 160ரன்கள் சேர்த்துப் பிரிந்தன். டெய்லர் 69 ரன்னில் கெயில் பந்துவீச்்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் லாதம்(12),நீஷம்(28) கிராண்ட்ஹோம்(16), சான்ட்னர்(10) என வீழ்ந்தனர். ஆனால், சளைக்காமல் ஆடிய வில்லியம்ஸன் 124 பந்துகளில் சதம் அடித்து, 148 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 14 பவுண்டரி, ஒருசிக்ஸ் அடங்கும்.

ஆனால், 2 விக்கெட் விழுந்தபின் 46 ஓவர்கள் வரை களத்தில் இருந்து சதம் அடித்த வில்லியம்ஸன் ஆட்டம் பிரம்மாண்டம். அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஆட்டத்திலும் கடினமான இன்னிங்ஸை ஆடி சதம் அடித்த வில்லியம்ஸன் இந்த போட்டியிலும் தொடர்ந்து 2-வது சதத்தை அடித்து பிரம்மிப்பை காட்டியுள்ளார்.

50 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் சேர்த்தது. மே.இ.தீவுகள் தரப்பில் காட்ரெல் 4 விக்கெட்டுகளையும், பிராட்வெய்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x