Published : 27 Jun 2019 03:45 PM
Last Updated : 27 Jun 2019 03:45 PM
மான்செஸ்டரில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 34வது போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட் செய்ய முடிவெடுக்க, இந்திய அணி ரோஹித் சர்மாவை சர்ச்சைக்குரிய முறையில் இழந்து பின்னடைவு கண்டுள்ளது.
ரோஹித் சர்மா நம்பிக்கையுடன் தொடங்கினார், காட்ரெல் ஷார்ட் பிட்ச் பந்தை கட் செய்து பாயிண்ட் பவுண்டரிக்கு அனுப்பினார். பிறகு கிமார் ரோச் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை கம்பீரமாகப் பின்னால் சென்று ஸ்கொயர் லெக் மேல் தூக்கி சிக்ஸ் அடித்து 23 பந்துகளில் 18 என்று அபாயகரமாகத் திகழ்ந்தார்.
ஆனால் இதே 6வது ஓவரின் கடைசி பந்தை கிமார் ரோச் இன் கட்டராக வீச உள்ளே வந்த பந்திற்கு ரோஹித் சர்மா மட்டைக்கும், கால்காப்புக்கும் இடைவெளி கொடுத்ததால் பந்து உள்ளே புகுந்தது, போகும் வழியில் மெலிதாக விளிம்பைத் தட்டிச் சென்றதாக ஷேய் ஹோப் கேட்ச் பிடிக்க முறையீடு எழுந்தது, களநடுவர் நாட் அவுட் என்றார். வெஸ்ட் இண்டீஸ் ரிவியூ செய்தனர். மிகச்சரியான ரிவியூ அது. காரணம் ரீப்ளேயில் பந்து கால்காப்பு முனையையும் மட்டை முனையையும் தொட்டது போல் தெரிந்தது.
டி.ஆர்.எஸ். முடிவில் ஹாட்ஸ்பாட் கிடையாது, ஆகவே ஸ்னிக்கோ மீட்டர் காட்டுவதுதான் இறுதி முடிவு, இதில் மட்டையில் பந்து லேசாக பட்டது காட்டப்பட்டது. நடுவர் தீர்ப்பை மாற்றிச் சொல்ல 3வது நடுவர் அவுட் கொடுக்க ரோஹித் சர்மா 18 ரன்களில் வெளியேறினார்.
ஆனால் ரோஹித் சர்மாவினால் இதை நம்ப முடியவில்லை. ஒருமாதிரியாக வேண்டா வெறுப்பாக தலையை மறுப்பாக ஆட்டிய படியே வெளியேறினார், முகத்தில் ஒருவிதமான ஏளனப்புன்னகையும் தவழ்ந்தது.
இந்திய அணி 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள், விராட் கோலி 4, ராகுல் 14 களத்தில் இருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT